×

சின்ன மம்மி போஸ்டரை வீட்டை சுற்றி ஒட்டி சாமியை கிறுகிறுக்க வைத்த தேனி அடிப்பொடிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘விருதுநகர் மாவட்டத்தில் மரத்தில் இருந்து ஒரு இலை உதிரப்போகுதாமே, அப்படியா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘மெடல் மாவட்டத்தில் தூர் என முடிகிற தொகுதியில் இலைக்கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏவானவர் வசிக்கிறார். இவர் 2019 சட்டமன்ற இடைத்தேர்தலில் வென்று எம்எல்ஏவானவர். சிறைக்கு சென்ற மாஜி மில்க் மந்திரியிடம் ஏற்பட்ட பிரச்னையால், இவருக்கு கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் இலைக்கட்சி தலைமை சீட் வழங்கவில்லை. உடனே பரிசுப்பெட்டி கட்சிக்கு மாறி, தனது தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். தேர்தலுக்கு பின் மாஜி மில்க் மந்திரியை சந்தித்து இலைக்கட்சியில் மீண்டும் ஐக்கியமானார். தற்போது உரிய அங்கீகாரமோ, மரியாதையோ கட்சியில் கிடைக்காத நிலையில் திரிசங்கு நிலையில் தத்தளித்து வருகிறார். இதனால் மீண்டும் கட்சி மாறும் முடிவில் இருக்கிறாராம். இது தொடர்பாக தன் அடிபொடிகளுடன் ஆலோசனை செய்து வருகிறாராம். இதனால் தான் மரத்தில் இருந்து ஒரு இலை உதிர்கிறது என்று அக்கட்சியின் தொண்டர்கள் பேசிக் கொள்கிறார்கள்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘வளர்ப்பு மகன் என்றாலே பிரச்னைதான் போல..  ஒரு ேதாசைக்கு கூட காக்கிகள் தான் பணம் செட்டில் செய்து கணக்கு தீர்க்கிறார்களாமே… அந்த அளவுக்கு பவர்புல் பெண் காக்கி அதிகாரி யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘தூங்கா நகரத்தில் இருந்து மன்னர் மாவட்டத்திற்கு சமீபத்தில் பணியிட மாறுதலாகி வந்தவர் அந்த பெண் காக்கி அதிகாரி. இந்த அதிகாரி வரும்போது வளர்ப்பு மகனையும் கூட அழைத்து வந்தாராம். அந்த அதிகாரி பணியாற்றும் ஏரியாவில் காக்கிகளின் சவகாசம் பெண் அதிகாரியின் வளர்ப்பு மகனுக்கும் கிடைத்ததாம். சம்பந்தப்பட்ட ஸ்டேஷனில் யாராவது கைது செய்யப்பட்டால் உடனே அந்த ஸ்டேசனுக்கு போன்செய்து நீங்கள் கைது செய்திருப்பது என்னோட ஆளு, அவரை விடுவிக்கவும் என்று வளர்ப்பு மகன் உத்தரவிடுவாராம். சில காக்கிகள் உடனே விட்டுவிடுவார்களாம். சில காக்கிகள் தம்பி என இழுப்பார்களாம். அப்போது வளர்ப்பு மகன், உடனே விடுரீங்களா. இல்லைனா. அம்மாவை போன் பேச சொல்லவா என மிரட்டல் தோனியில் பேசுவாராம். இதனால் அந்த காக்கிகளும் கைது செய்தவரை உடனே விட்டு விடுவார்களாம். வளர்ப்பு மகன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கினால் கூட அந்த கடை பகுதியில் உள்ள ஸ்டேசனுக்கு போன் செய்து கடையில் வாங்கின பொருட்களுக்கு பில்லை செட்டில் செய்யும்படி காக்கிகளிடம் வளர்ப்பு மகன் தெரிவிப்பாராம். இப்படிதான் ஒரு தோசை வாங்கினதுக்காக ரூ.40 செட்டில் செய்தார்களாம் காக்கிகள். இது குறித்து தெரிந்தும் தெரியாமல் அந்த பெண் அதிகாரி இருக்கிறாராம்.  இதனால் வளர்ப்பு மகன் போன் செய்தாலே காக்கி அதிகாரிகள் முதல் காவலர் வரை போனை எடுப்பதா… வேண்டாமா என்ற பதற்றத்துடனே இருக்காங்க…’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள கிரி மாவட்டத்தில், சின்னம ம்மிக்கு ஆதரவாக அச்சடித்து ஒட்டப்பட்ட போஸ்டரை பார்த்து, மாவட்டத்து மாஜி ரொம்பவே அப்செட் ஆகிட்டாராம். இப்படி ஒட்டப்பட்ட போஸ்டர்களில் பெரும்பாலானவை, கட்சியின் அசிஸ்டென்ட் ஆர்கனைசராக இருக்கும் அவரது வீட்டை சுற்றியே ஒட்டப்பட்டிருந்ததாம். தேனிக்காரரை தனியாக தள்ளிக் கொண்டு போய், தர்மயுத்தம் நடத்தியதில் இந்த மாஜிக்கு பெரும்பங்கு உண்டாம். இதனால் சின்ன மம்மி குரூப், அவர் மேலே இன்னைக்கு வரைக்கும் செம கடுப்பில் இருக்காம். இதை மனசுல வச்சுதான், அவரது வீட்டை சுத்தியே போஸ்டர் ஒட்டியிருக்காங்க. இந்த மாதிரி பாலிடிக்ஸ் எல்லாத்தையும் அவரு, மூணெழுத்து தலைவர் காலத்துலேயே பார்த்தவரு. இவங்க என்ன தான் போஸ்டர் ஒட்டினாலும், எங்க அண்ணார் இருக்கும் வரை சின்னமம்மி இலைகட்சிக்குள் வரவே முடியாது என்று முஷ்டியை மடக்குறாங்க மாஜியின் அடிப்பொடிகள். என்றாலும் தன் வீட்டை சுற்றி ஒட்டப்பட்ட சின்ன மம்மியின் போஸ்டரை பார்த்து அண்ணாரான அந்த சாமி கிறுகிறுத்து போனாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கோபத்துல கல்யாணத்தை புறக்கணித்த இலை கட்சி முக்கிய புள்ளி பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘விஜயமான பெண் விவிஐபியின் சன் மேரேஜ்  மாங்கனி சிட்டியில நடந்துச்சு. வழக்கமா கட்சிக்காரங்க அடிப்பது போல திருமண பத்திரிகை இல்லாம, பழைய நினைவுகளை அசைபோடும் வகையில அவரது திருமண படங்கள், மணமகனுக்கு பெயர் சூட்டும் படங்கள் என வித்தியாசமா இருந்துச்சாம். ஆனா பாருங்க, மாங்கனி விவிஐபி படமோ, தேனி விவிஐபி படமோ மருந்துக்கு கூட இல்லையாம். அதே நேரத்துல மாங்கனி விவிஐபிய நேருல சந்திச்சு அழைப்பிதழ்  கொடுத்திருக்காங்க. ஒருமாநிலத்தையே கட்டி ஆண்டிருக்கிங்க, கட்சியின் முக்கிய பொறுப்புல இருக்கீங்க. ஆனா அழைப்பிதழில் உங்க படம் இல்லையேன்னு அடிப்பொடிகள் மாஜி விவிஐபியை வருடிவிட்டாங்களாம். உள்ளுரிலேயே இப்படி ஒரு சம்பவமான்னு நெனச்சு கடும் அப்செட்டான மாஜி, உள்ளூரில் இருந்தும் மேரேஜுக்கு போகலையாம். முன்னொரு காலத்துல இலைக்கட்சிய ஆட்சிக்கட்டிலில் அமர வச்சதில் இந்த பேமிலி தான் முக்கிய காரணமா இருந்துச்சு. ஆனா இப்போ குறுக்கு வழியில வந்தவங்களுக்கு இவங்க அருமை  எப்படி தெரியுமுன்னு…’’ மேரேஜிக்கு வந்த இலைக்கட்சி தொண்டர்கள் பரபரப்பாக பேசி கொண்டார்கள்…’’ என்றார் விக்கியானந்தா.  …

The post சின்ன மம்மி போஸ்டரை வீட்டை சுற்றி ஒட்டி சாமியை கிறுகிறுக்க வைத்த தேனி அடிப்பொடிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Sammy ,Virudhunagar district ,Uncle ,Peter ,
× RELATED தென்னங்கன்றுகள் நடுவதற்கான வழிமுறைகள்: வேளாண்துறை விளக்கம்