×

அதிமுக கட்சியில் சசிகலா சேர்க்கப்படுவாரா? பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை திரட்டும் ஓபிஎஸ்

* அமைதி காக்கும் எடப்பாடி அணி * குழப்பத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள்சென்னை: அதிமுக வில் சசிகலாவை சேர்க்க ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஆனால், எடப்பாடி அணியினர் அமைதியாக இருப்பதால் நிர்வாகிகள், தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை திரட்டும் பணியில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ரகசியமாக ஈடுபட்டு வருகின்றனர்.தமிழகத்தில் நடந்த எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. இந்த தோல்விக்கு இரட்டை தலைவர்களான ஓபிஎஸ், எடப்பாடி ஆகியோர் பொறுப்பேற்கவில்லை. மேலும் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை தெளிவாக கூறாததால் தொண்டர்கள் விரக்தி அடைந்துள்ளனர். மேலும், கட்சியில் மக்களை கவரும் தலைவர் யாரும் இல்லை என்று தொண்டர்களிடம் ஒரே பேச்சாக இருக்கிறது. அதேசமயம், ஆரம்பத்தில் இருந்தே ஒற்றுமையில்லாத ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என்ற இரட்டை தலைமையை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த நிலையில்தான், அதிமுக கட்சியின் முழு அதிகாரத்தையும் கைப்பற்ற எடப்பாடி அணியினர் கடந்த ஒரு வருடத்துக்கு மேல் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இல்லாமல் எந்த தீர்மானமும் நிறைவேற்ற முடியாது என்ற ஒரு ஆயுதத்தை கையில் வைத்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி அணியினருக்கு பிடிகொடுக்காமல் உள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த கே.பி.முனுசாமியும் எடப்பாடி அணிக்கு தாவியதால் தற்போது ஓபிஎஸ் தனித்து விடப்பட்டுள்ளார்.தேர்தல்களில் அதிமுக சோபிக்காவிட்டாலும் கூட, கட்சியின் பெரும்பாலான மூத்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி அணியில்தான் உள்ளனர். சென்னையை, பொறுத்தவரை எடப்பாடி அணிக்கு ஆதரவான தலைவராக ஜெயக்குமார் இருந்தார். அவரும் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவரை சிறைக்கு சென்று எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் பார்த்தார். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் சென்னையில்தான் இருந்தார். ஆனால் இந்த விஷயம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரிந்துவிடக் கூடாது என்ற திட்டமிட்டு நடந்ததாக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. வேலுமணி மட்டும் அவருடன் சென்றார். எடப்பாடி, ஜெயக்குமாரை போய் சந்தித்த விஷயம் டி.வி. மற்றும் பத்திரிகைகளில் செய்தியாக வந்த பிறகுதான் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரியவந்தது. இதனால், எடப்பாடி மீது ஓபிஎஸ் கடும் கோபத்தில் இருந்தார்.அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி இருந்தும், தன்னை எடப்பாடி உள்ளிட்ட அனைவரும் ஓரங்கட்டுகிறார்கள் என்பதாலும், இதற்கு தக்க பாடம் படித்து கொடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் திட்டம் போட்டார். இந்த நிலையில்தான், மூன்று நாட்களுக்கு முன் தேனியில் உள்ள தனது பண்ணை வீட்டில் தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார் ஓபிஎஸ். இந்த கூட்டத்தில், சசிகலா, டி.டி.வி.தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். இது அதிமுக தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்க முடியாமல், இபிஎஸ் அணியினர் கடந்த சில நாட்களாக அமைதியாக உள்ளனர். இதனால் அனைத்து மாவட்ட அதிமுக கட்சி நிர்வாகிகளும் குழப்பத்தில் உள்ளனர்.இதுகுறித்து தேனி மாவட்டத்தை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஒருவர் கூறும்போது, ‘‘தமிழக மக்களிடம் பெரிய அளவில் செல்வாக்கு இல்லாத எடப்பாடி பழனிசாமி, தனது கட்டுப்பாட்டில் தான் அதிமுக கட்சி இருப்பதுபோல் காட்டி வருகிறார். உள்ளாட்சி தேர்தலில், ஆளுங்கட்சி மீது தேவையில்லாத குற்றச்சாட்டுக்களை கூறியதால் இவரது பிரசாரம் எடுபடவில்லை. அதனால்தான் அதிமுக படுதோல்வி அடைந்தது. அதனால்தான் கட்சியை ஒருங்கிணைக்கும் முடிவில் ஓபிஎஸ் சில முடிவுகளை எடுத்து வருகிறார். மேலும், அதிமுக கட்சியை வழிநடத்தி செல்ல இனி ஒற்றை தலைமை முறைதான் வேண்டும் என்ற நிலைக்கு வந்துள்ளார். கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம் தகுதியான நபராக உள்ளார். மேலும், சசிகலா விஷயத்தில் தொண்டர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்சி தலைமை கட்டுப்பட வேண்டும். அதனால்தான் தேனி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று கூறி தீர்மானம் போட்டுள்ளோம். இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள மாவட்ட செயலாளர், அதிமுக முக்கிய நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் பேச வேண்டும் என்று கூறியுள்ளார். நாங்களும், ரகசியமாக அனைத்து மாவட்ட நிர்வாகிகளிடம் பேசி வருகிறோம். பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டு, அதன் அடிப்படையில் ஓபிஎஸ் உறுதியான ஒரு முடிவை விரைவில் அறிவிப்பார். அனைத்து மாவட்டத்திலும், சசிகலா விஷயம் குறித்து தீர்மானம் நிறைவேற்றி கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும். இது தொடர்பாக விவாதிக்க விரைவில் அதிமுக பொதுக்குழு அல்லது கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெறவும் வாய்ப்புள்ளது’’ என்றார்.அதிமுகவை தரைமட்டமாக்கிய ஓபிஎஸ், இபிஎஸ்: ஓ.ராஜா காட்டம்அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து ஓ.ராஜா நிருபர்களிடம் நேற்று கூறும்போது, ‘‘நான் என்ன எதிர்க்கட்சி தலைவரையா சந்தித்தேன். சசிகலா தலைமையேற்றால்தான் அதிமுக நன்றாக இருக்கும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள். 33 ஆண்டுகளாக சசிகலா தான் அதிமுகவை காப்பாற்றி வந்தார். ஓ.பன்னீர்செல்வத்திற்கு தெரிந்துதான் சசிகலாவை அதிமுகவில் சேர்க்க கோரி தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தீர்மானம் போட்டனர். அதிமுகவில் இருந்து என்னை நீக்கி மிரட்டி பார்க்கிறார்கள். சசிகலா வந்தால் ‘டம்மி’ ஆகிவிடுவோம் என ஓபிஎஸ், இபிஎஸ் பயப்படுகின்றனர். இவர்கள் இரண்டு பேரும்தான் அதிமுகவை வளர்த்தார்களா? ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவை தரைமட்டமாக்கி விட்டனர். சசிகலா தலைமையேற்றால்தான் அதிமுகவை மீட்க முடியும். எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒத்த கருத்துடன் செயல்படவில்லை. இருவரும் தனித்தனி அணியாக செயல்படுகின்றனர். சசிகலா பிரச்னையில் மட்டுமே இருவரும் சேர்ந்து செயல்படுகின்றனர்” என்றார்….

The post அதிமுக கட்சியில் சசிகலா சேர்க்கப்படுவாரா? பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை திரட்டும் ஓபிஎஸ் appeared first on Dinakaran.

Tags : Sasigala ,OPS ,edapadi ,O.D. Bannerselvam ,Dinakaran ,
× RELATED அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த...