×

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயிர்க் கடன் தள்ளுபடி ரசீது வழங்கப்படும்: அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு

சென்னை: சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பயிர்க் கடன் தள்ளுபடி ரசீது வழங்குவது குறித்தும், அவர்களுக்கு மறு பயிர்க் கடன் வழங்குவது குறித்தும் கூட்டுறவுத் துறை அமைச்சர் தமிழ்நாடு சட்ட மன்றத்தில் விதி 110-ன் கீழ் அறிவித்தார். கடந்த ஆண்டு (2020-21) பயிர்க் கடன் வழங்குவதற்கு ரூ.11,000 கோடி குறியீடு நிர்ணயிக்கப்பட்டது. இதில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பயிர்க் கடன் வழங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்ட குறியீடு முறையே ரூ.746 கோடி மற்றும் ரூ.534 கோடி ஆகும். இதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எய்தியது ரூ.614.92 மற்றும் ரூ.502.62 கோடி ஆகும்.பயிர்க் கடன் என்பது, விவசாயிகள் பயிர் செய்வதற்காக மட்டும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பயிருக்கும் ஒரு ஏக்கருக்கு எவ்வளவு தொகை பயிர்க் கடனாக வழங்கப்பட வேண்டும் என்பது ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட தொழில்நுட்பக் குழுவால் கலந்தாலோசித்து முடிவு செய்யப்பட்டு, குழுவின் பரிந்துரைகள் மாநில தொழில்நுட்பக் குழுவிற்கு அனுப்பப்பட்டு, மாநில தொழில்நுட்பக் குழுவால் ஏற்பளிக்கப்படும் கடன் தொகை அளவின் அடிப்படையில் (Scale of finance) பயிர்க் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைப் பொறுத்தவரை பெருவாரியாக சோளம் மற்றும் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுவரும் நிலையில் இப்பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு வழங்கப்படும் கடன் தொகை மிகவும் குறைவு என்பதால், பயிர்க் கடன் அளவு அதிகமாக உள்ள மஞ்சள் மற்றும் வாழை போன்ற பயிர்களைக் குறிப்பிட்டு கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து சிட்டா அடங்கல் பெறாமல் கடன் பெறும் விவசாயிகளே சுய உறுதி மொழி அளித்து கடன் பெற்றுள்ளது கள ஆய்வின்போது கண்டறியப்பட்டுள்ளது.மேலும் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் விவசாயிகள் தங்களது சுய உறுதிமொழியில் கூடுதலான பரப்பில் பயிர் செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த விவரங்கள் அடங்கலில் உள்ள விவரங்களுக்கு மாறாக உள்ளது. இது போன்ற விதிமீறல்கள் பிற மாவட்டங்களில் நடைபெற்றிருப்பினும், இவ்வகையான 2 விதி மீறல்களில் 97% அதாவது மொத்தம் ரூ.516.92 கோடியில் ரூ.501.69 கோடி இவ்விரு மாவட்டங்களில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி 2021 மாதம் பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 1,11,833 விவசாயிகளுக்கு தள்ளுபடி சான்று வழங்கப்பட்டு 51,017 நபர்களுக்கு மேற்கூறிய 2 விதிமீறல்களால் தள்ளுபடி சான்று வழங்கப்படாமல் நிலுவை உள்ளதால், விவசாயிகளுக்கு மீண்டும் பயிர்க் கடன் வழங்கப்படாமலும், பயிர்க் கடன் வழங்க நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டினை எய்த முடியாமலும் வழக்கமான வேளாண் பணிகளில் ஒரு தொய்வு நிலையும் ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து 05.01.2021 அன்று சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களிலிருந்து விவசாயப் பெருமக்கள் தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து இது குறித்து முறையிட்டு, தங்களுக்கு நடப்பாண்டில் தொடர்ந்து பயிர்க்கடன் வழங்கவும், மற்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது போலவே தங்களுக்கும் பயிர்க்கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.மேலும், பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பினைத் தொடர்ந்து சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் உட்பட இதர மாவட்டங்களிலும் மேற்கண்ட விதிமீறல்களுக்குட்பட்ட பயிர்க் கடன்களில் பெரும்பான்மையான விவசாயிகளுக்கு தள்ளுபடி சான்று தேர்தலுக்கு முன்பே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், விவசாயிகளுக்கு கடன் வழங்கும் பணியானது, அதிக முக்கியத்துவம் வாய்ந்த பணியாக உள்ளதாலும், விதிகளின்படி கடன் வழங்க வேண்டியது சங்கத்தின் பணி என்பதையும் கருத்தில் கொண்டு இவ்வகையான விதிமீறல்கள் இனி நடைபெறா வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை உறுதி செய்து விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையை பரிவுடன் பரிசீலித்த முதலமைச்சர் இந்நிகழ்வினை சிறப்பினமாக கருதி மேற்கூறிய விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி சான்றினை வழங்கலாம் எனவும் அவர்களுக்கு மீண்டும் தொடர்ந்து பயிர்க் கடன் வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.இதனால் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 51,017 விவசாயிகளுக்கு ரூ.501.69 கோடி அளவிற்கு பயிர்க் கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்பதையும், அவர்களுக்கு நடப்பாண்டில் மீண்டும் பயிர்க் கடன் வழக்கம்போல தொடர்ந்து வழங்கப்படும் என்பதையும் அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டமன்றத்தில் தெரிவித்தார்.    இனி வருங்காலங்களில் இத்தகைய தவறுகள் நிகழாத வண்ணம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்….

The post சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயிர்க் கடன் தள்ளுபடி ரசீது வழங்கப்படும்: அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Salem ,Namakkal ,Minister ,I.M. Periyasamy ,Chennai ,I.P. Periyasamy ,Dinakaran ,
× RELATED ‘மாப்பிள்ளையை எனக்கு பிடிக்கல…’ தாலி...