×

வெளிமாநில தேங்காய் இறக்குமதியை அரசு உடனே கட்டுப்படுத்த வேண்டும்-வருசநாடு பகுதி விவசாயிகள் வேண்டுகோள்

வருசநாடு : வெளிமாநில தேங்காய் உற்பத்தியை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று வருசநாடு பகுதி தென்னை விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கடமலை-மயிலை ஒன்றியத்தில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தியாகும் தேங்காய் காங்கேயம், திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடமலை-மயிலை ஒன்றியத்தில் தேங்காய் உற்பத்தி அதிக அளவில் காணப்படுகிறது. உற்பத்தி அதிகரித்துள்ள காரணத்தால் தேங்காய் விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தேங்காய் ஒன்று 15 ரூபாய் வரை விற்பனையாகி வந்த நிலையில் தற்போது 10 ரூபாய்க்கும் கீழ் குறைந்து விட்டது. தற்போது 1 டன் தேங்காய் 24 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது. உற்பத்தி அதிகரிப்பு ஒருபுறம் இருக்க ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தேங்காய் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதும் விலை குறைவிற்கு காரணம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். போதுமான விலை இல்லாத போது விவசாயிகள் தேங்காய்களை உடைந்து அதனை வெயிலில் காயவைத்து எண்ணெய் தயாரிப்பிற்காக ஏற்றுமதி செய்வது வழக்கம். ஆனால், தற்போது கொப்பரை தேங்காயின் விலையும் மிகவும் குறைந்தே காணப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் கடமலை-மயிலை ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் குடோன்களில் தேங்காய்கள் தேக்கமடைந்து காணப்படுகிறது. எனவே, அரசு உரிய நடவடிக்கை எடுத்து வெளிமாநிலங்களில் இருந்து தேங்காய்கள் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் தற்போது பாதிப்படைந்துள்ள தேங்காய் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post வெளிமாநில தேங்காய் இறக்குமதியை அரசு உடனே கட்டுப்படுத்த வேண்டும்-வருசநாடு பகுதி விவசாயிகள் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Varasananadu ,Government of Tamil Nadu ,Varasanadu ,
× RELATED கழுகுகள் மரணத்துக்கு காரணமாக உள்ள...