×

அருப்புக்கோட்டை அருகே 17ம் நூற்றாண்டை சேர்ந்த நில தான கல்வெட்டு கண்டுபிடிப்பு

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே 17ம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் கால நில தான கல்வெட்டினை எஸ்பிகே கல்லூரி வரலாற்று துறையினரால் கண்டுபிடித்துள்ளனர்.அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.கலை கல்லூரியின் வரலாற்று துறை பேராசிரியர் விஜயராகவன் தலைமையில், மாணவர்கள் ராஜபாண்டி, சரத்ராம், பாலாஜி ஆகியோர் அருப்புக்கோட்டை அருகே பண்ணை மூன்றடைப்பு கிராமத்தில் களஆய்வு செய்தனர். அப்போது அங்கு 17ம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.இதுகுறித்து பேராசிரியர் விஜயராகவன் தெரிவித்தாவது: இரண்டரை அடி உயரமும், ஒன்றேகால் அடி அகலமும் கொண்ட கல்வெட்டின் மேற்கு பகுதியில் அஷ்டமங்கல சின்னமான ஸ்வஸ்திக் சின்னமும், சூலாயுதமும், கெண்டி போன்ற அமைப்பும் காணப்படுகின்றன. மேலும் அதில் மதுரை நம்பிக்கு அங்குச்செட்டி தானமாக எழுதி கொடுத்த நிலம் என 11 வரிகள் கொண்ட வாசகம் காணப்படுகிறது. இந்த நிலத்திற்கு தீங்கிழைப்பவர்கள் கங்கை கரையில், காராம் பசுவை கொன்ற பாவத்தை அடைவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வூரை பற்றிய செப்பேடு ஒன்று சென்னை அருங்காட்சியத்தில் உள்ளது. இவ்வூரின் பழைய பெயர் மூணடைப்பு எனவும், 1659ல் திருச்சுழி வட்டத்திற்கு உட்பட்டிருந்தது. எனவும், அப்போது மதுரையை ஆட்சி செய்த திருமலை நாயக்கரும், கிழவன் சேதுபதியான ரகுநாத சேதுபதியும் இவ்வூருக்கு வந்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.அக்கிராமத்தில் திசை காவலரான பளுத்தாண்டி குய்ச்சி அம்பலக்காரன் மன்னரை சந்தித்து பாதகாணிக்கையாக சர்க்கரையை படைத்து இந்த மூணடைப்பு கிராமத்தில் திசை காவலராக பணி செய்ய விரும்பியும், அதற்கு ஈடாக நன்செய் புன்செய் நிலங்களை வழங்குமாறும் கேட்டு கொள்கிறான். அதற்கு மன்னரும் சம்மதிக்க அந்த செய்தியை செப்புப்பட்டயமாக பொறிக்க வழங்குமாறும் வேண்டி கொள்கிறான். அதன்படி கொடுக்கப்பட்ட அந்த செப்பு பட்டயத்தில் திருமலைநாயக்கரும், கிழவன் சேதுபதியான ரகுநாத சேதுபதியும் கையொப்பமிட்டு வழங்கினர் என்ற செய்தியும் மதுரை வடக்கு வாசலைச் சேர்ந்த மீனாட்சி ஆசாரி என்பவர் தான் அதனை பதித்து கொடுத்தார் என்ற விவரமும் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள மூணடைப்பு என்ற ஊர் பெயரே காலப்போக்கில் மருவி இன்று பண்ணை மூன்றடைப்பு என்று அழைக்கப்படுகிறது. சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள தானத்தை குறிப்பிடும் செப்பேடும் நாங்கள் கண்டறிந்த கல்வெட்டும் ஒரே காலகட்டத்தை சேர்ந்ததாக காணப்படுவதால் இதுமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இவ்வாறு தெரிவித்தார்….

The post அருப்புக்கோட்டை அருகே 17ம் நூற்றாண்டை சேர்ந்த நில தான கல்வெட்டு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Aruppukkottai ,SPK College History ,
× RELATED அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தில்...