×

பரமத்திவேலூர் அருகே அரசு பள்ளி மைதானத்தில் முதுமக்கள் தாழி, எலும்புகளுடன் கண்டெடுப்பு: மரக்கன்று நட குழி தோண்டியபோது கிடைத்தது

பரமத்திவேலூர்: பரமத்திவேலூர் அடுத்த கொந்தளம் அரசுப் பள்ளி மைதானத்தில், மரக்கன்றுகள் நடுவதற்கு தோண்டிய  குழியில் முதுமக்கள்தாழி மற்றும் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தாசில்தாரிடம் பள்ளி நிர்வாகம் அவற்றை ஒப்படைத்தது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கொந்தளம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் சுமார் 2 ஏக்கர் அளவுக்கு விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தின் ஒரு பகுதியில் மாணவர்கள் மரக்கன்றுகள் நட்டு வைத்து வளர்த்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் பள்ளி மூடப்பட்டதால், போதிய பராமரிப்பின்றி மரக்கன்றுகள் கருகி பட்டுப்போனது. இந்நிலையில் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளியில் காய்ந்து போன மரக்கன்றுகளை அகற்றி விட்டு, அதன் அருகில் புதிதாக மரக்கன்றுகளை நேற்று மாணவ, மாணவிகள் நடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மரக்கன்று நடுவதற்காக குழி தோண்டிபோது பானை உடையும் சத்தம் கேட்டது. இதுகுறித்து மாணவர்கள், ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். ஆசிரியர் குழியை பாதுகாப்பாக தோண்டினார். அப்போது குழியில் பெரிய சைஸ் முதுமக்கள் தாழி இருந்ததை கண்டுபிடித்தார். இதையடுத்து அப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை வரவழைத்து, பெரிய அளவில் பள்ளம் தோண்டினர். உள்ளே இருந்த முதுமக்கள் தாழியை லாவகமாக வெளியே எடுத்தனர். மேலும், பானைக்குள் எலும்புகள் இருப்பதை கண்டு ஆச்சரியமடைந்தனர். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள், தொல்லியல் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். இதனிடையே பள்ளி மைதானத்தில் முதுமக்கள் தாழி கிடைத்த தகவல் கிராமத்தில் பரவியது. மாணவ, மாணவியர்கள் மற்றும் கிராம மக்கள்  பள்ளிக்கு வந்து ஆர்வத்துடன் பார்த்துச்சென்றனர். இப்பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டால் மேலும் பல பொருட்கள் கிடைக்கக்கூடும் என பொதுமக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த பரமத்திவேலூர் தாசில்தார் அப்பன்ராஜ், பாண்டமங்கலம் ஆர்ஐ மோகன் மற்றும் கொந்தளம் விஏஓ தமிழ்ச்செல்வன் ஆகியோர், முதுமக்கள் தாழி மற்றும் பொருட்களை மீட்டு பத்திரமாக எடுத்துச்சென்றனர். தொல்லியல் துறையினரிடம் ஒப்படைப்பதற்காக, தாலுகா அலுவலக காப்பக அறையில் வைக்கப்பட்டுள்ளது….

The post பரமத்திவேலூர் அருகே அரசு பள்ளி மைதானத்தில் முதுமக்கள் தாழி, எலும்புகளுடன் கண்டெடுப்பு: மரக்கன்று நட குழி தோண்டியபோது கிடைத்தது appeared first on Dinakaran.

Tags : Government School Ground ,Paramathivelur ,Paramativelur ,Kondanam Government School Ground ,Dinakaran ,
× RELATED பரமத்திவேலூரில் போலீஸ் அதிரடி...