×

ஆயிரம்விளக்கு தொகுதி கேட்டவருக்கு கொளத்தூர் ஒதுக்கியதால் அதிமுக வேட்பாளர் அதிர்ச்சி: கோஷ்டி மோதல் உச்சக்கட்டம்

சென்னை: அதிமுகவில் கொளத்தூர் தொகுதியில்  கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் கேட்காத தொகுதியை கொடுத்ததால் வேட்பாளர் குழப்பத்தில் உள்ளார். கொளத்தூர் தொகுதியில் கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தலிலும் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். இந்த முறையும் கொளத்தூர் தொகுதியில் அவரே போட்டியிடுகிறார். எனவே கொளத்தூர் தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு தள்ளிவிட வேண்டும் என அதிமுக ஏற்கனவே கணக்குப் போட்டு வைத்திருந்தது. ஆனால், கூட்டணிக் கட்சிகள் கொளத்தூர் தொகுதியை பெற விரும்பவில்லை. எனவே வேறு வழியில்லாமல் அந்த தொகுதியில் அதிமுக வேட்பாளரை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் அதிமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில் மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் பாபு, அதிமுகவைச் சேர்ந்த கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, கொளத்தூர் கணேசன், திருநங்கை அப்சரா ரெட்டி உள்ளிட்ட சிலர் போட்டியிட விருப்பம் தெரிவித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர். தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளரான ஆதிராஜாராம் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவார் என  அதிமுக அறிவித்தது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆதிராஜாராம் தென்சென்னை பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கும் கொளத்தூர் தொகுதிக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. மேலும் இவர் ஏற்கனவே 2006ம் ஆண்டு ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தோல்வியடைந்துள்ளார். மேலும், இவர் தற்பொழுது ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிடவே அதிமுக தலைமை அலுவலகத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். கொளத்தூர் தொகுதியில் போட்டியிட எந்த ஒரு மனுவும்  தாக்கல் செய்யவில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில் தலைமை இவரை வேட்பாளராக அறிவித்துள்ளது. இது,  கொளத்தூர் அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பெயர் கூற விரும்பாத கொளத்தூர் பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘ஏற்கனவே கொளத்தூர் தொகுதியில் 3 கோஷ்டிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் யாராவது ஒருவருக்கு சீட் கொடுத்திருந்தால் ஓரளவிற்கு மற்றவர்களை சமாதானப்படுத்தி தேர்தலை சந்தித்து இருக்கலாம். ஆனால், தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத ஒரு வேட்பாளரை நிறுத்தி உள்ளனர். மேலும் இந்த தொகுதியில் போட்டியிட எந்த ஒரு பெரிய வேட்பாளரும் ஆர்வம் காட்டவில்லை. இதனால் பல மூத்த தலைவர்களும் வேறுவழியின்றி தென்சென்னையில் ஆதிராஜாராமுக்கு எந்த ஒரு சீட்டும் ஒதுக்க முடியாத காரணத்தினால் ஒப்புக்காக அவரை கொளத்தூர் தொகுதியில் களமிறக்கியுள்ளனர் என தெரிவித்தார். மேலும் கட்சியில் அவருக்கு நல்ல பெயர் கிடையாது.  இந்நிலையில் தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஆதிராஜாராம், ‘‘நான் ஆயிரம்விளக்கு தொகுதியில் தானே வாய்ப்பு கேட்டேன். இவர்கள் எதற்காக என்னை கொளத்தூர் தொகுதியில் போட்டார்கள் என தெரியவில்லையே’’  என்று கூறி தனது சகாக்களிடம் வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்….

The post ஆயிரம்விளக்கு தொகுதி கேட்டவருக்கு கொளத்தூர் ஒதுக்கியதால் அதிமுக வேட்பாளர் அதிர்ச்சி: கோஷ்டி மோதல் உச்சக்கட்டம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Kolathur ,Ayaarvilakku ,CHENNAI ,Dinakaran ,
× RELATED கொளத்தூர் அய்யனார் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்; திரளான பக்தர்கள் தரிசனம்