×

பாதக் கமலங்கள் காணீரே! பவளவாயீர் வந்து காணீரே!

பெரியாழ்வார் ஜெயந்தி: 8-7-2022ஒரு குழந்தை பிறந்து, அதற்குப் பெயர் சூட்டு விழா எல்லாம் நடத்திய பின்னால், தினசரி அந்தத் தெருவில் இருப்பவர்கள், உறவினர்கள் என யாராவது குழந்தையைப்  பார்க்க வந்துகொண்டே யிருப்பார்கள். அப்படி வருபவர்கள் அந்தக் குழந்தையின் அவயவங்களை ஒருவருக் கொருவர் பாராட்டிச் சொல்லுவார்கள். ”இதோ பார் கால் பாதம் மெத்மெத்தென்று பஞ்சு போல் எவ்வளவு மென்மையாக இருக்கிறது. இந்தப் பாதங்களில் உள்ள ரேகைகளைப் பார்த்தாயா? எவ்வளவு அருமையாக இருக்கிறது. அந்தக் கண்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது. ம்…  இதோ இந்த மூக்கு எவ்வளவு கூர்மையாக இருக்கிறது. நெற்றி எவ்வளவு அழகாக இருக்கிறது.கேசங்கள் மென்மையாக பஞ்சுபோல அடர்த்தியாக அலையலையாக இருப்பதைப் பார்த்தாயா…”. என்று குழந்தையின் அவயவங்களை சொல்லிச் சொல்லி கொஞ்சுவதுண்டு. பொதுவாகவே குழந்தைகளுக்கு அவயவ சோபையும் உண்டு. சமுதாய சோபையும் உண்டு. சௌந்தர்யம், லாவண்யம் என்று சொல்வார்கள். கண்ணனை மகனாகப் பெற்ற பெருமை தாங்கமுடியவில்லை யசோதைக்கு.என்ன தவம் செய்தனை யசோதாஎங்கும் நிறை பரப்பிரம்மம் அம்மாஎன்றழைக்க என்ன தவம் செய்தனையசோதா- என்று யசோதையின் பெருமையைச் சொல்ல… ஒரு அழகான பாடல் உண்டு. தவம் செய்தது தேவகியா? யசோதையா? யசோதைக்கு கிடைத்த வாய்ப்பு தேவகிக்குக் கிடைக்கவில்லையே… அவள் பெற்றதோடு சரி. அந்தக் குழந்தையைச் சரியாக பார்க்க கூட முடியாத ஒரு அட்டமி (ஜன்மாஷ்டமி) நாள், இருட்டு வேளையில், பெற்ற தாயிடமிருந்து பிரித்து, வசுதேவர், கண்ணனைக் கூடையில் சுமந்து, யசோதையிடம் கொண்டுவந்து விட்டுவிட்டார். பெற்ற தாயிடம் கண்ணன் பால் அருந்தவில்லை. எந்தச் சிறு குழந்தை விளையாட்டையும், தேவகி அனுபவிக்கவில்லை. இந்த அனுபவங்களை எல்லாம் பெற்றவள் யசோதை. ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர…” என்று இந்நிகழ்ச்சியைப் பாடுவாள் ஆண்டாள். இதை குலசேகர ஆழ்வார் தேவகியின் புலம்பல் என ஒரு பதிகமே பாடியிருக்கிறார். அப்பதிகம் படிப்பவர் மனதை உருக்கும். தேவகி புலம்புகிறாள்;‘‘கண்ணா, நான் உனக்குத் தாய். அப்படித்தான் உலகத்தவர் எல்லாம் சொல்லுகின்றார்கள். ஆனால், என்னைவிட பாவம் செய்தவர்கள் யாராவது இருப்பார்களா? உன்னை ஒரு நாள் கூட தூக்கி வைத்துக் கொஞ்சும் பாக்கியம் இல்லாத படுபாவி ஆகிவிட்டேனே! உன்னைத் தொட்டிலில் போட்டு தாலாட்டுப் பாட முடியவில்லையே… நீ இங்கும் அங்கும் புரண்டு புரண்டு படுக்கும் அழகைக் காண முடியவில்லையே… உனக்கு ஒரு வேளையாவது என் முலைப்பால் தரமுடியாத அபாக்கியவதி ஆகிவிட்டேனே… உன்னை பெற்று நான் எல்லாவற்றையும் இழந்து விட்டேன்…. நான் இழந்த எல்லாவற்றையும் யசோதை அல்லவா பெற்றாள்… அவளல்லவா பாக்கியசாலி.முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டுஉண்ணும் முகிழ் இளஞ் சிறு தாமரைக்கையும்எழில்கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் வெண் தயிர் தோய்ந்தசெவ்வாயும் அழுகையும் அஞ்சி நோக்கும்அந்நோக்கும்  அணிகொள் செஞ் சிறுவாய்நெளிப்பதுவும் தொழுகையும் இவை கண்டஅசோதை தொல்லை – இன்பத்து இறுதிகண்டாளேஇதற்கு அழகாக உரை எழுதினார்கள் பெரியவர்கள். ரசித்து ரசித்து எழுதினார்கள்.தாரார் தடந்தோள்கள் உள்ளளவும் கைநீட்டி, ஆராத வெண்ணெய் விழுங்கியவன் கண்ணன் என்று சொல்கிறார்கள். அவன் சாப்பிடும் அழகை நான் ஒரு நாளும் காணவில்லையே. கண்ணன் தயிரைக் களவாடி உண்ணும் போது யசோதை பார்த்து விடுகிறாள். “ திருடுகிறாயா?… இதோ வருகிறேன்” என்று தடியும் தாம்புமெடுத்தவாறு ஓடுகிறாள்.“தாயெடுத்த சிறு கோலுக் குளைந்தோடித், தயிருண்டவாய் துடைத்த மைந்தன்”- என்றபடி, தாயார் பார்த்துவிட்டால் அடிப்பாள் என்று, அந்தத் தயிரை மறைப்பதாகத் துடைத்துக்கொள்ள ஆரம்பித்தான். வெண்ணெய் எடுத்த கையைக்கழுவாமல் அப்படியே வாயை துடைத்தால் என்னவாகும்.? வாய்நிறையச் சுற்றிலும் பூசிக்கொண்டு திருட்டுத்தனம் உறுதியாகியது. பிறகு யசோதை கண்ணனைப் பிடித்து பழைய கயிறு கொண்டு, ‘‘இனி திருடுவாயா? திருடுவாயா” என அடித்தாள். யாரை? பரம்பொருளை… பிட்டுக்கு மண் சுமந்து அடிபட்டது போல், இங்கே வெண்ணெய்க்கு அடி பட்டு அழுதான். அஞ்சினாற்போல் நோக்கினான். வாய் துடிக்கும்படி விக்கி விக்கி அழுதான். கடைசியாக “அம்மா அடிக்காதே அடிக்காதே” என்று கை கூப்பி அஞ்சலி பண்ணினான்.இந்த ஒரு சம்பவத்தை பாடி விட்டு ஆறு மாதம், “இத்தனை எளிமையா கண்ணன்?” என்று மயக்கமாகி அப்படியே கிடந்தாராம் நம்மாழ்வார். அந்தப் பாசுரம்;பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரியவித்தகன் மலர்மகள் விரும்பும்நம் அரும்பெறல் அடிகள்மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடையாப்புண் எத்திறம் உரலினொடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே(திருவாய்மொழி 1-3-1)ஆக, இக்கோலங்களையெல்லாம் கண்டு ஆனந்தத்தின் எல்லையிலே நிற்கும்படியான பாக்கியம் யசோதைக்குக் கிடைத்ததேயன்றி, அவளை வயிற்றில் சுமந்துபெற்ற எனக்குக் கிடைக்காமற் போயிற்றே! என்று வருந்துகின்றாள். “தொல்லையின்  பத்திறுதி கண்டாளே” என்ற பதம் அற்புதம்.உரையாசிரியர் உருகி எழுதுகிறார்.உபநிஷத்தின்படி – தொல்லையின்பம் என்று எம்பெருமானாகிய கண்ணனையே சொல்லியது. அபரிச்சிந்நனான அவனை யசோதை பரிச்சிந்நனாக்கி விட்டாள்! அழுகையும் தொழுகையும் பரிச்சிந்நர்களுடைய க்ருத்யமிறே. (பரிச் சிந்நர்- ஓரளவு பட்டவர். தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே என்ற வரியில் பெற்ற தாயின் ஆற்றாமையை அப்படியே பிசைந்து கொடுக்கிறார்குலசேகராழ்வார். சரி, குழந்தையை வந்து பார்க்கிறவர்கள்” இதோ பார், இந்தக் குழந்தையின் மென்மையான கையைப் பார். கண்களைப்பார்…பாதங்களைபார்…” என்றெல்லாம் ஒருவருக்கு ஒருவர் மகிழ்ச்சியாகப் பேசுவதைக்கண்டு, யசோதை மகிழ்ச்சி அடைகிறாள். குழந்தையின் பாதம் முதல் தலைவரை இருபது பாடல்களால் வர்ணிக்கிறார் பிள்ளைத்தமிழ் பாடிய பெரியாழ்வார். பொதுவாக ஒரு பதிகத்தில் 10 பாசுரங்கள்தான் இருக்கும். இந்தப் பதிகத்தில் மட்டும் இருபது பாசுரங்கள். இந்த அழகு வேறு எந்த நூலிலும் நாம் பார்க்க முடியாது. துண்டு துண்டாக அவயவ வர்ணனை இருக்குமே தவிர, கண்ணனின் பாதாதிகேச வர்ணனை இத்தனை அழகான தமிழில் கொடுத்தவர் பெரியாழ்வாரைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது. இந்த இருபது பாடல்களையும் புதிதாகக் குழந்தை பிறந்தவர்கள், அல்லது கர்ப்பம் தரித்த பெண்கள் பூஜையறையில் பாட வேண்டும். ‘‘இப்படிப்பட்ட குழந்தை வேண்டும்” என்று இந்த இருபது பாடல்களையும் பக்தியோடு படித்தால் அழகான குழந்தை பிறக்கும் என்பார்கள். அதில் முதல் பாடல் என்ன அழகாக இருக்கிறது பாருங்கள். சீதக்கடலுள் அமுதன்ன தேவகிகோதை குழலாள் அசோதைக்குப் போத்தந்தபேதைக்குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்பாதக்கமலங்கள் காணீரேபவளவாயீர் வந்து காணீரே அழகான திருப்பாற்கடல். அது தோன்றிய திருமகள் போன்றவள் தேவகி. தேவகி பெற்று, யசோதைக்கு கொடுக்கப்பட்ட குழந்தை கண்ணன். குழந்தை தொட்டிலில் அழகான ஒரு காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறது. தன்னுடைய கால் கட்டை விரலைத் தூக்கி, வாயில் வைத்துக் கொண்டு சுவைத்துக் கொண்டிருக்கிறது. தன்னுடைய அழகான மென்மையான பாதங்களை எடுத்துக் காட்டுகிறது. ஒரே நேரத்தில் அவனுடைய திருவடி, திருவாய் இரண்டும் இணைந்து இருக்கிறது. ‘‘பச்சை மாமலைபோல் மேனி, பவளவாய் கமலச் செங்கண்” என்று ஆழ்வார் சொன்னதுபோல, பவளம் போன்ற இந்த வாயை வந்து பாருங்கள். தன்னுடைய கால் கட்டை விரலை பிடித்து சுவைத்துச் சாப்பிடும் அழகை பாருங்கள். கண்ணனின் அழகிய வடிவங்களை நீங்கள் எத்தனையோ படங்களில் பார்த்து இருக்கலாம். யசோதை இடுப்பில் தூக்கி வைத்திருப்பது போல… யசோதை தயிர் கடையும் பொழுது பக்கத்தில் கண்ணன் கட்டிக் கொள்வதைப் போல…. இப்படிப் பல படங்களை நீங்கள் பார்த்து இருக்கலாம். ஆனால், ஒரு ஆலின் இலையில் படுத்துக்கொண்டு, சின்னஞ்சிறு பாலகனாய், தன்னுடைய கால் கட்டைவிரலை, தானே சுவைக்கக் கூடிய அந்த அழகான காட்சி அற்புதத்திலும் அற்புதம் அல்லவா! பரமாத்மாவாகிய கண்ணன் ஏன் தன் கால் கட்டை விரலை தானே சுவைக்கிறான்? கிருஷ்ணாவதாரத்தின் பின்புலம்  இந்த ரகசியத்தில் அடங்கியிருக்கிறது. நம்முடைய நண்பர் அந்தாதி கவிஞர் ஆர்.வீ.சுவாமி அவர்கள் பெரியவர்களிடம் கேட்டு இதற்கு ஒரு அற்புதமான விளக்கத்தைத்  தந்திருக்கிறார். அவர் தந்த விளக்கத்தை அப்படியே தருகின்றேன்.வைகுந்தத்தில் ஒரு காட்சிபிராட்டியர் (தேவி), அனந்தன், கருடன், விஷ்வக்சேனர், நித்யர், முக்தர்கள் என எல்லோரும் தத்தம் கைங்கர்யங்களை மிகமிக உகப்போடு பகவானுக்குச் செய்துகொண்டுள்ளார்கள். அப்போது, எம்பெருமான் மிகமிக மெல்லிய குரலில் பிராட்டியிடம், ‘‘அது என்ன பிராட்டி? நித்யர்கள், முக்தர்கள், ஆழ்வார்கள், ஆசார்யர்கள், தவசீலர்கள், அடியார்கள் என எல்லோரும் எனது திருவடியே அவர்களுக்கு உகப்பென்றும், அதன் சுவை அமுதத்தை விஞ்சியதென்றும், அதன் சுவைக்கு இணையானது வேறொன்றும் இல்லை என்றும் ஓயாது, ஒழியாது, புகழ்ந்து, போற்றிப் பிதற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.அதனைச் சுவைக்கத் துடித்துக்கொண்டே இருக்கிறார்கள். “தேனே மலரும் திருப்பாதம்…” என்று கூட நம்மாழ்வார் பாடியிருக்கிறார். அப்படியென்ன எனது திருமேனியின் மற்ற அவயவங்களுக்கு இல்லாத பொல்லாச்சுவை திருவடிகளுக்கு மட்டும் என்று தெரியவில்லையே! எனவே, அவற்றை நானும் சுவைத்துப் பார்த்து, அவர்கள் சொல்வது எந்த அளவுக்கு உண்மை என அறிந்துகொள்ள வேண்டும்” என்று கூறினான்.  பிராட்டிக்கு பகவானின் ஆசை விபரீதமாகத் தோன்றியது. உடனே அவள், ‘‘பிரபு! இது வைகுந்தம்! நிலஉலகல்ல! இங்குள்ள நித்யர்கள், முக்தர்கள் அறியாது நீங்கள் எந்தச் செயலையும் செய்ய இயலாது! அவர்கள் கண்கள் இம்மியளவுகூட இமைப்பதில்லை! இருந்தபோதும் சோர்வதில்லை! இங்கு இரவுமில்லை! பகலுமில்லை! கனவுமில்லை! நனவுமில்லை! சங்கு, சக்ரம் ஏந்திக்கொண்டு, நான்கு திருத்தோள்களோடு அவர்கள் இங்கே உலவுவதைத் தேவரீரும் பார்க்கவில்லையா? அவர்கள் அறியாது ஒரு காரியமும் நீங்கள் செய்ய இயலாது என்று தெரிந்தும், உங்கள் திருவடியை நீங்களே சுவைத்துப் பார்க்கும் இந்த விபரீத ஆசை ஏன் வந்தது? இத்துடன் அந்த ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வேறு வேலையைப் பாருங்கள்!” என்றாள்.ஆனால், எம்பெருமானால் அப்படி இருக்க இயலவில்லை. ‘‘என்னசெய்யலாம்” என யோசித்தான். நன்கு யோசித்த பிறகு, இப்படிச் செய்தால் என்ன என்று ஒரு யோசனை வந்தது. குதூகலித்தான்! அவனுக்கு அப்போது திருவாராதனம் நடந்துகொண்டு இருந்தது. தூபக் கைங்கர்யம் வெகு விமர்சையாக நடந்து கொண்டிருக்க, அதனைச் செய்து கொண்டிருந்த நித்யர், முக்தர்களை உற்சாகப்படுத்திப் பாராட்டி, அதனைத் தான் மிகமிக உகப்பதாய்க் காட்டிக்கொள்ள, அவர்கள் மிகவும் உற்சாகமடைந்து, மீண்டும் மீண்டும் என தூபப்புகையை எம்பெருமானது உகப்புக்காகக் கூட்டினார்கள். வைகுந்தமெங்கும் நறுமணத்தோடு கூடிய தூபப்புகை மண்டலம் உருவாகியது. திருமாமணி மண்டபத்தில் ஒருவரை ஒருவர் பார்க்க இயலவில்லை! பார்த்தான் பரந்தாமன்!‘‘ஆகா! இதுதான் அற்புதமான வாய்ப்பு!” என்று அந்தத் தூபப்புகை குறைவதற்கு முன்னர் திருவடமதுரையிலே வசுதேவர் – தேவகி தம்பதியர்களுக்கு திருமகனாய் அவதரித்து, திருவாய்ப்பாடியிலே நந்தகோபர் – யசோதை திருமகனாய் வளர்ந்து, பாலலீலைகள் பலபுரிந்து, அவனது அளவற்ற ஆசையான தனது திருவடியைத் தானே சுவைத்துப் பார்க்கும் போராசையை நிறைவேற்றி மகிழ்ந்தான்! ஆம்! தனது திருவடியின் பெருவிரலைத் தனது திருப்பவள வாய்க்குள் வைத்து ஆசைதீரச்சுவைத்து மகிழ்ந்து, “எனதடியார்கள் வார்த்தை சத்தியம்! சத்தியம்!” என உகந்தான். அதற்குமேல் என்ன சொல்ல?அவனது கிருஷ்ணாவதாரத்தின் ஏனைய காரியங்கள் அனைத்தையும் முடித்துக்கொண்டு தூபப்புகை மண்டலம் குறையுமுன்னர் மீண்டும் வைகுந்தம் திரும்பினான். ஆக, கிருஷ்ணாவதாரத்தின் சீரிய காரணம், சீரிய பின்புலம் எம்பெருமான் மிகமிக உகந்த காரணம் அடியார்களுக்குத் திருமோட்சம் அளித்தளித்தே அமுதச்சுவை கூடிக்கொண்டே இருக்கும் தனது திருவடிச் சுவையினை சுவைத்து இன்புறவே என்பது புலனாகிறதன்றோ? இதுவே கிருஷ்ணாவதாரத்தின் சுவையான பின்புலம் என்பதை ஒப்புக் கொள்வீர்கள் தானே? இப்போது பெரியாழ்வாரின் இந்தப் பாடலை படியுங்கள், திருவடியின் மேன்மை புரியும்.சீதக்கடலுள் அமுதன்ன தேவகிகோதை குழலாள் அசோதைக்குப் போத்தந்தபேதைக்குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்பாதக்கமலங்கள் காணீரேபவளவாயீர் வந்து காணீரே! சுதர்சன்…

The post பாதக் கமலங்கள் காணீரே! பவளவாயீர் வந்து காணீரே! appeared first on Dinakaran.

Tags : Periyazwar Jayanti ,
× RELATED சிதம்பர ரகசியம் என்றால் என்ன?