×

வெற்றிமேல் வெற்றி தரும் சிவயோக நாயகி

யோகம் என்பதற்கு அகராதிகள் இணைவு, ஒருமித்த சிந்தனைக் குவிப்பு, உயர்ந்தது, நிறைந்திருப்பது, சேர்ந்திருப்பது என்று பல பொருள்களைக் கூறுகின்றன.தமது சிந்தனை, செயல், மனம் அறிவு ஆகியவற்றை ஒரே கதியில் செலுத்தி உயர்ந்த குறிக்கோளை எட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியைப் பெறுபவர்கள் யோகியர் எனப்பட்டனர். மாணிக்கவாசக சுவாமிகள், சிவபெருமானை ஒழிவர நிறந்த யோகமே என்று போற்றுகின்றனர். இங்கு யோகம் என்பதற்கு எல்லாவற்றிலும் நிறைந்திருப்பது என்பது பொருள்.உலகிலுள்ள யோகியருக்கெல்லாம் தலைமை யோகியாக விளங்குபவர் சிவபெருமான். அதனால் அவரை யோகேஸ்வரன் என்று அழைக்கின்றனர். அவனுடைய மனைவியான உமையன்னையும் யோகேஸ்வரியாக, யோக நாயகியாக விளங்குகிறாள். அவளைத் தமிழில் அருந்தவ நாயகி என அழைக்கின்றனர். திருமூலர் பராசக்தியை அருந்தவப் பெண் பிள்ளை என்பர். அன்னை பராசக்தி அருந்தவ நாயகியாகவும், சிவயோக நாயகியாகவும் விளங்கும் வேளையில் அருவத்திரு மேனியாகக் கொண்டு விளங்குகிறாள் என்பர். அப்படி விளங்கும் தலங்களில் முதன்மை பெற்றது ஆவுடையார் கோயில் என்னும் திருப்பெருந் துறையாகும். இங்கு, அம்பிகை சிவயோக நாயகி எனும் பெயரில் எழுந்தருளியுள்ளார்.இங்கு கருவறைக்கு வலதுபுறம் அம்பிகை சந்நதி உள்ளது. அதனுள் அமைந்த பீடத்தில் அம்பிகை அருவ வடிவில் எழுந்தருளியுள்ளார். அவளுக்கு அபிஷேக அலங்காரம் செய்து மலரிட்டு வணங்க ஏதுவாக, தங்கத்தாலான யந்திரத்தினை பீடமாக அமைத்து அதன் மீது அம்பிகையின் பாதுகைகளை அமைத்துள்ளனர். இந்த பாதுகைக்கும் பீடமாக அமைந்த சக்கரத்திற்குமே தினமும் அபிஷேகம் அர்ச்சனை முதலானவை நடைபெறுகிறது. சிவயோக நாயகி பிள்ளைத் தமிழ் என்னும் நூல் இவளுடைய பெருமைகளை விரிவாகப் பேசுகிறது. இவளுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை உட்கொண்டு வந்தால் சித்த பிரமை முதலான நோய்களும் தீரும் என்கின்றனர். இந்நூலில் இங்குள்ள சக்கரத்தின் வடிவமும், அதன் மீது அருவ வடிவில் விளங்கும் அம்பிகையின் அருட்கோலமும் விளக்கப்பட்டுள்ளன.அம்பிகை சந்நதிக்கான வாயில் வடக்கில் உள்ளது. கிழக்கில் பெரிய ஜன்னல் அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழியாகவே அம்பிகையை அன்பர்கள் தரிசனம் செய்கின்றனர். ஜன்னலுக்கு முன்புறம் அன்ன பூரணியும் இருபுறமும் துவார பாலகர்கள் திருவுருவங்களும் அமைந்துள்ளன. ஜன்னலுக்கு முன்புறம் அமைந்துள்ள விதானத்தில் கருவறையிலுள்ள சக்கரத்தின் பிரதியொன்று அர்த்த மேரு வடிவில் பொறிக்கப்பட்டுள்ளது. சிவயோக நாயகி அருவமாக வீற்றிருக்கும் மற்றோர் தலம் திருப்பாதிரிப்புலியூர் ஆகும். இங்குள்ள பாடலீஸ்வரர் ஆலயத்தில் தல விருட்சமான (பட்டுப் போய் விட்டது) பாதிரி மரத்தின் கீழ் அருந்தவ நாயகி சந்நதி உள்ளது. இதில் சிறிய மலர்ப்பீடம் உள்ளது. இவளைத் தோகை நாயகி எனவும் அழைக்கின்றனர்.காலப்போக்கில் அருவமாக விளங்கும் அன்னையைப் போற்றி வழிபட ஏதுவாக சக்கரத்தினை அமைக்கும் வழக்கம் வந்தது. திருக்குற்றாலத்திலுள்ள பராசக்தி பீடத்தில் யோகாம்பிகையை சக்கர வடிவில் காண்கிறோம். அனைத்து யோகங்களுக்கும் அவளே மூலமாக இருக்கிறாள். அவளை சாக்தர்கள் யோகேஸ்வரி என்று கொண்டாடுகின்றனர்.சிவயோக ராஜதானியாக விளங்கும் திருவாரூரிலும் அம்பிகையை யோக நாயகியாகக் காண்கிறோம். இங்கு அம்மன் சந்நதிப் பிராகாரத்தில் அட்சர பீடம் உள்ளது. இதில் பீடமும் திருவாசியும் மட்டும் உள்ளன. திருவாசியில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சிவபெருமான் யோகேஸ்வரனாக விளங்கும் வேளையில் அம்பிகை சித்தேஸ்வரியாக அவனருகில் வீற்றிருக்கின்றாள். அவர்கள் அமர்ந்திருக்கும் பீடம் சித்தயோகேஸ்வரி பீடம் என்பதாகும். அது காசியில் சித்தேஸ்வரியாக அவர்அருகில் வீற்றிருக்கின்றாள். அவர்கள் அமர்ந்திருக்கும் பீடம் சித்தயோகேஸ்வரி பீடம் என்பதாகும். அது காசியில் சந்திரேஸ்வரர் கோயிலில் இருப்பதாகக் கூறப்படுகிறது.இதை விளக்கும் வகையில் அமைந்த சித்த நாயகி உடனாய யோகேஸ்வரர் திருவுருவம் திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் உள்ளது. இவரை வணங்கி வாழ்வில் மேன்மை பெறலாம். சிவசக்தியை அன்றி திருமகள், சரஸ்வதி, பிரம்மா ஆகியோரும் யோக நாயகர்களாகப் போற்றப்படுகின்றனர். திருமகளை அன்பர்கள் யோக லட்சுமியாக வணங்குகின்றனர். இவள் ஞானிகளிடம் யோக வித்தையை நிலை பெறச் செய்கிறாள். அதனாலேயே அவர்கள் அரிய பெரிய காரியங்களை இயல்பாகச் செய்கின்றனர். யோக லட்சுமியை உபாசிப்பவர்களுக்கு மகாலட்சுமி சித்த லட்சுமியாக இருந்து எல்லா காரியங்களில் வெற்றியைத் தேடித் தருகிறாள். திருமகள் யோக லட்சுமியாக இருக்கும் போது திருமால் யோக நாராயணராக விளங்குகிறார்.யோக லட்சுமி உடனாய யோக நாராயணர் மனதைத் தெளிவாக வைத்து எடுத்த காரியங்களில் வெற்றியை அளிக்கிறார். சரஸ்வதி தேவியும், யோக சரஸ்வதியாக விளங்குகிறாள். அவளுடன் பிரம்மன் யோகப் பிரம்மனாக விளங்குகிறான். காளிதேவியும் யோக நாயகியாக வீற்றிருக்கின்றாள். அவளை யோகிருந்த பிடாரி யார் என அழைக்கின்றனர். இவள் போர்க்களத்தில் வீரர்களுக்கு வெற்றியை அளிக்கிறாள். ஞானிகள் மனதை அடக்கி தவயோக சாதனையை மேற்கொள்ளும் போது சாதனைகளில் வெற்றியை அளிக்கிறாள்.இப்படி பல்வேறு நிலைகளிலும் யோக சக்தி அன்பர்களுக்கு வெற்றியை அளிப்பவளாக இருப்பதைக் காண்கிறோம். யோக நாயகியை வணங்குவதால் மனம் ஒருமைப்படுகிறது. சிந்தனை வளம் பெருகுகிறது. எடுத்த காரியங்கள் நிச்சயமான வெற்றி கிடைக்கும் என்பது உறுதியாகும்.   …

The post வெற்றிமேல் வெற்றி தரும் சிவயோக நாயகி appeared first on Dinakaran.

Tags :
× RELATED முதற்படைவீடு