×

லட்சுமியை விரதம் இருந்து அழையுங்கள்!

நன்றி குங்குமம் தோழி மகாலட்சுமியை வெள்ளிக்கிழமைகளில் நாம் எந்த அளவுக்கு விரதம் இருந்து மனப்பூர்வமாக வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு செல்வ செழிப்பு உண்டாகும். இன்றைய உலகில் பணம்தான் பிரதானம் என்று ஆகிவிட்டது. பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே என்று கூட சொல்வார்கள். பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற நிலைதான் இன்று உள்ளது. இந்த பணத்தை சம்பாதிக்க உடல் உழைப்பு, அறிவு மட்டும் இருந்தால் போதாது. கடவுளின் அனுக்கிரகமும் வேண்டும். செல்வத்தையும், பணத்தையும் வாரி வழங்கும் இறை அம்சமாக லட்சுமி தேவி கருதப்படுகிறாள்.லட்சுமியின் அம்சமாக பல்வேறு லட்சுமியின் அவதாரங்கள் உள்ளன. அதில் மிகுந்த முக்கியத்துவமும், தனித்துவமும் கொண்டது வரலட்சுமி அவதாரம். நாம் வேண்டும் வரங்களை எல்லாம் மறுக்காமல் தருபவள்  வரலட்சுமி.இந்தாண்டு வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி வர உள்ளது. அன்றைய தினத்தில், சுமங்கலி பெண்களாக இருந்தால் கணவர் நலமாக இருக்க வேண்டும், நீடூழி வாழ வேண்டும், அதற்கு வரலட்சுமி அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள். கன்னிப் பெண்களாக இருந்தால் தங்களுக்கு நல்ல கணவர் அமைய வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள்.வரலட்சுமியை வீட்டுக்குள் வரவழைத்த பிறகு உரிய முறையில் ஐதீகம் தவறாமல் பூஜைகளை செய்ய வேண்டும். இந்த பூஜை முறைகள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாறுபட்டதாக இருக்கும். கலச பூஜை, பாடல்கள், நைவேத்தியம், தானம் உள்பட அனைத்து முறைகளிலும் வித விதமான சம்பிரதாயங்கள் உள்ளன. எனவே உங்கள் குடும்ப முறைக்கு எந்த பூஜை முறையை கடைபிடிக்கிறார்களோ அதை தெரிந்து கொண்டு பூஜைகள் செய்ய வேண்டும்.பொதுவாக வரலட்சுமி விரத பூஜை என்றதுமே கலச பூஜையை பிரதானமாக பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். கலச பூஜையை எல்லோரும் நினைத்தவுடன் செய்து விட முடியாது. அதற்கு என்று சில ஐதீகங்கள் உள்ளன. எனவே கலச பூஜை செய்து பழக்கம் இல்லாத குடும்பத்தினர் லட்சுமி படத்தை வணங்கினாலே போதும். பாரம்பரியமாக கலச பூஜை செய்பவர்கள் ஒவ்ெவாரு ஆண்டும் அதை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். கலச பூஜையை மட்டும் செய்வதை தவற விடவே கூடாது. அதுபோல லட்சுமியை ஆராதனை செய்து கையில் ரட்சை கட்டுபவர்களும் அந்த பூஜையினை தவறாது கடைப்பிடிக்க வேண்டும். ஆண்கள் ரட்சை கட்டக்கூடாது. பெண்கள் மட்டுமே வலது கையில் ரட்சை கயிறை கட்டிக் கொள்ள வேண்டும். ஒரு வாரம் கழித்து அதை அவிழ்த்து விடலாம்.கலச பூஜை செய்து பழக்கம் இல்லாதவர்கள் பூஜை அறையில் லட்சுமி படத்தை வைத்து தாமரை பூ, தாழம்பூ வைத்து அலங்கரித்த லட்சுமியை வழிபடலாம். குத்துவிளக்கை நன்றாக சுத்தம் செய்து அதில் பூ சுற்றி அதையே லட்சுமியாக கருதி வழிபடலாம். ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் அனைத்து தரப்பினரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். நீங்கள் கலசத்தை லட்சுமியாக நினைத்தாலும் சரி, குத்து விளக்கை லட்சுமியாக நினைத்தாலும் சரி. இரண்டிற்குமே தீப ஆராதனைகளை சரியாக செய்ய வேண்டும். லட்சுமி அஷ்டோத்திரம் பாட வேண்டும். இல்லையெனில் தெரிந்த லட்சுமி பாடல்களையாவது பாட வேண்டும். பூஜை முடிந்த பிறகு சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், பூ, தட்சணை வைத்து கொடுக்க வேண்டும். உங்கள் சக்திக்கேற்ப எத்தனை சுமங்கலி பெண்களுக்கு வேண்டுமானாலும் செய்யலாம். குறைந்தபட்சம் 2 சுமங்கலி பெண்களுக்காவது தானம் செய்ய வேண்டும்.சிலர் தங்கள் வீட்டுக்கு சுமங்கலி பெண்களை அழைக்க இயலாத சூழ்நிலையில் இருந்தால் ஆலயங்களுக்கு எடுத்து சென்று தானங்களை செய்யலாம். மொத்தத்தில் லட்சுமி மனம் குளிர வேண்டும். அதற்கு என்ன வேண்டுமோ அதை செய்ய வேண்டும். லட்சுமிக்கு தாமரை பூ மிகவும் பிடிக்கும். எனவே அதை தவறாமல் படையுங்கள். நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல் படைக்கலாம். வரலட்சுமி பூஜையினை காலை, மாலை என இருவேளைகளில் உங்களுக்கு எந்த நேரம் வசதியோ அப்போது செய்யலாம். காலை பூஜை செய்வதாக இருந்தால், அதிகாலையிலே முடித்து விட வேண்டும். மாலை நேரத்து பூஜையை 6 மணி அளவில் செய்யலாம். மாலையில் பால் நைவேத்தியம் செய்வது நல்லது. பூஜையின் போது வாசலில் மாவிலை கட்டுவது மிகவும் விசேஷம். இவ்வாறு வரலட்சுமி விரத பூஜைக்கு நிறைய ஐதீகங்கள் உள்ளன. அதை முறைப்படி கடைப்பிடித்து உங்கள் இல்லத்திற்கு லட்சுமியை மனம் உருகி அழையுங்கள். அவளின் அருள் கிட்டும்.தொகுப்பு: மகி

The post லட்சுமியை விரதம் இருந்து அழையுங்கள்! appeared first on Dinakaran.

Tags : lakshmi ,Saffron ,Makalakshmi ,
× RELATED லட்சுமி கடாட்சம் கிடைக்கும் எனக்கூறி...