×

கரடியும் ஆடும்

நன்றி குங்குமம் ஆன்மிகம் ஒருவரிடம் ஏராளமான ஆடுகள் இருந்தன. அவர் தினந்தோறும் தன் ஆடுகளை, மேய்ச்சலுக்கு ஓட்டிக் கொண்டு போவார்; அதற்குப் பாதுகாப்பாக ஒரு பெரும் நாயையும் கூட்டிப் போவார். அந்த நாயும் சுற்றிச்சுற்றிக் காவல் காக்கும்.ஒரு நாள்… அவர் தன் வழக்கப்படி ஆடுகளை மேய்க்க, காட்டிற்கு ஓட்டிக்கொண்டுப் போனார்; நாயும் கூடப் போனது. ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. நாய் சுற்றிச்சுற்றி வந்து காவல் காத்தது. சுற்றிச்சுற்றி வந்த நாயின் பார்வையில், செடி-கொடிகள் அடர்ந்த இடம் ஒன்று தெரிந்தது. அங்கு ஒரு கரடி, நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தது. அதன் உடல் முழுதும் மயிர்கள் அடர்ந்து இருந்தன. அதைப் பார்த்த நாய் விவரம் அறியாமல், ‘‘ஆகா! இந்தப்பெரிய செம்மறி ஆடு, மேய்வதை விட்டுவிட்டு இங்கு வந்து, யாருக்கும் தெரியாமல் சோம்பேறித் தனமாகத் தூங்கிக் கொண்டிருக்கிறது. இதை எழுப்ப வேண்டும்” என எண்ணி,  தூங்கிக் கொண்டிருந்த கரடியை எழுப்பத் துணிந்தது. வாயால் கடித்து, கால் நகங்களால் கரடியைச் சீண்டி எழுப்பியது.நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த கரடி, திடுக்கிட்டு எழுந்தது; எழுப்பிய நாயின் மேல் பாய்ந்து, இறுக்கமாக அதைப் பிடித்துக் கொண்டது; நன்றாக அழுத்தி, தன் கால் நகங்களால் நாயைக் கீறி, மேலும் அழுத்தியது. நாயால் வாய் விட்டுக் குரைக்கக்கூட முடியாமல், இறந்தது. எதையும் ஆராய்ச்சி செய்யாமல், செயலில் இறங்குவதன் விளைவைச் சுட்டிக்காட்டும் கதை இது. காட்டுக் கரடி நிலை காணாமல் ஆட்டுக் கிடை நாய் அழிந்த கதை போல எனப் பழந்தமிழ்ப் பாடல் வரிகள் இந்நிகழ்வைச் சொல்லி, நம்மை எச்சரிக்கின்றன.தொகுப்பு: பி.என்.பரசுராமன்

The post கரடியும் ஆடும் appeared first on Dinakaran.

Tags : Kunkum Anmigam ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி