×

ஆனந்த வாழ்வருளும் அனந்தீஸ்வரர்

சிதம்பரம்தில்லை, புலியூர் என்றெல்லாம் அழைக்கப்பட்ட சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவரால் புற்று மணலால் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு வாய்ந்த தலம்தான் `ஸ்ரீஅனந்தீஸ்வரர்’ ஆலயம். இந்த ஆலயம் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை விட மிகப் பழமைவாய்ந்த ஆலயம் என்று கூறப்படுகிறது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த ஆலயம் கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஆலயத்தில் மூலவர் ஸ்ரீ அனந்தீஸ்வரர், பின்னால் நாகத்துடன் காட்சியளிப்பார். தனி சந்நதியில் ஸ்ரீசௌந்தநாயகி அம்பாள் அருள்பாலிக்கிறார்கள்.பாற்கடலில் பள்ளிகொண்டிருந்த திருமாலைத் தாங்கிக் கொண்டிருப்பவர் ஆதிசேடன். ஒரு சமயம் வழக்கத்தை விட, சுவாமியின் எடை அதிகமாகத் தெரியவே, ஆதிசேடன் காரணம் கேட்டார். அவர், சிவனின் நாட்டியத்தை மனதில் நினைத்ததால் உண்டான ஆனந்தத்தில் எடை அதிகமாகிவிட்டதாகக் கூறினார். ஆதிசேடன், தனக்கு அந்த தரிசனம் கிடைக்க அருளும்படி வேண்டினார். அவர் பூலோகத்தில் சிதம்பரம் சென்று, வியாக்ரபாதருடன் சேர்ந்து சிவனை வழிபட, அந்த தரிசனம் கிடைக்குமென்றார். அதன்படி, ஆதிசேடன் பூலோகத்தில் அத்திரி முனிவர், அனுசுயா தம்பதியருக்கு சிதம்பரத்தில் உள்ள நாகம்சிறியகுளத்தில் (நாகச்சேரி குளம்) அவதரித்தார். பாம்பு உடலோடும் மனித முகத்தோடும் பதஞ்சலி எனப் பெயர் பெற்றார். தில்லை வனம் எனப்பட்ட இப்பகுதியில் தங்கியவர், தீர்த்தம் உண்டாக்கி, அதன் கரையில் புற்று மணலால் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்தார். (மணலால் சிவலிங்கம், ராமேஸ்வரத்துக்கு அடுத்தபடியாக சிதம்பரத்திலுள்ள அனந்தீஸ்வரர்தான்) இவருக்கு பதஞ்சலியின் பெயரால், “அனந்தீஸ்வரர்” என்ற பெயர் ஏற்பட்டது. பதஞ் சலிக்கு அனந்தன் என்றும் பெயருண்டு. அனந்தம் என்றால் நாகம் என்று பொருள். பதஞ்சலி முனிவர் நாகத்தின் உடலமைப்பை பெற்றிருந்ததால், தில்லை நடராஜரை தரிசனம் செய்ய முடியாமல் இருந்தார். இதனால்தான் அவர் புற்று மணலால் ஒரு சிவலிங்கத்தை பிடித்து வைத்து பூஜை செய்து வந்தார். தை மாதம் அமாவாசை அன்று தில்லை நடராஜரின் தரிசனம் கிடைக்கப் பெற்றார். இத்திருத்தலத்தில் பதஞ்சலி முனிவருக்கு தனிச் சந்நதி உள்ளது. பெருமாள் ராமாவதாரம் எடுத்தபோது, லட்சுமணராக அவதாரம் செய்தவர் பதஞ்சலியே ஆவார். இவரது நட்சத்திரம் பூசம் என்பதால், இந்நாளில் விசேஷபூஜை நடக்கிறது. மார்கழி திருவாதிரையன்று நடராஜருடன் பதஞ்சலி முனிவரும் புறப்பாடாவார். யோக சூத்திரத்தை எழுதியவர் பதஞ்சலி என்பதால், யோகாசனக் கலையில் தேற விரும்புவோர் இங்கு வேண்டிக் கொள்கின்றனர். வெளிநாட்டிலிருந்து கூட இங்கு வந்து யோகக் கலையைக் கற்க பதஞ்சலி முனிவரை வணங்கிச் செல்கிறார்கள். இந்த கோயிலிலுள்ள சில தூண்களில் யோகாசன முறைகள் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டோர் தோஷம் நீங்கவும், கல்வி, கலைகளில் சிறந்த இடம் பெறவும் பதஞ்சலியை வணங்குகின்றனர். இந்த ஆலயத்தின் தலவிருட்சமாக வில்வமரம் உள்ளது. சிதம்பரம் நடராஜர்கோயிலுக்கு நேர் பின்புறமாக மேற்குப் பக்கம் அமைந்த கோயில் இது. கோயிலுக்குள் நுழைந்ததும் பதஞ்சலி தீர்த்தம் உள்ளது. இத்தீர்த்தத்தின் இடப்புறம் ராஜ சண்டிகேஸ்வரர் இருக்கிறார். ராஜயோகம் கிடைக்க இவரையும், செல்வம் பெருக அருகிலுள்ள வடக்கு நோக்கிய விநாயகரையும் வணங்குகின்றனர். பிரகாரத்தில் அருகருகில் சூரியன், சந்திரன் உள்ளனர். எனவே, இத்தலத்தை நித்ய அமாவாசை தலமாகக் கருதுகின்றனர். முன்னோருக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதோரும், பிதுர்தோஷம் உள்ளோரும் நிவர்த்திக்காக இங்கு சிவனையும், சூரிய சந்திரரையும் வணங்குகின்றனர்.இந்த ஆலயம், நித்திய அமாவாசை ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. திருத்தலத்தில், அமாவாசை மட்டுமல்ல.. எல்லா நாட்களிலும் இந்த திருத்தலத்தில் சூரியன் சந்திரன் சந்நதிக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம் என்பது மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். திருவாரூர் தவிர, உலகிலுள்ள அனைத்து சிவாலயங்களிலுள்ள சுவாமிகளும், சிதம்பரத்தில் ஒடுங்குவதாக ஐதீகம். எனவே, நடராஜர்கோயிலில் நடக்கும் அர்த்தஜாம பூஜை (இரவு 10 மணி) மிகவும் விசேஷம். இப்பூஜையை தினமும் அனைத்து முனிவர்களும் வந்து தரிசிப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் தினமும் உச்சிக் காலத்தில் இங்கு அனந்தீஸ்வரரை தரிசனம் செய்வதாக தல வரலாறு சொல்கிறது. எனவே, உச்சிக் காலத்தில் இத்தலத்தையும், அர்த்தஜாமத்தில் சிதம்பரம் நடராஜரையும் தரிசிப்பது விசேஷம். இங்குள்ள நடராஜர் அருகில் பதஞ்சலி இருக்கிறார். ஆனி திருமஞ்சனம் மற்றும் மார்கழி திருவாதிரை நாட்களில் இவர் புறப்பாடாவார்.கோயில் முன் மண்டபத்திலுள்ள ஒரு தூணில் ஆஞ்சநேயர், தலைக்கு மேலே வாலை வைத்து வணங்கிய படி காட்சியளிக்கிறார். பிரகாரத்தில் கன்னி மூல கணபதி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், கஜலட்சுமி, சனீஸ்வரர், நவக்கிரகம், பைரவர் உள்ளனர். சிவன் சந்நதி கோஷ்டத்தில் வல்லபை கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா உள்ளனர்.திருவிழாஆனித் திருமஞ்சனம், நவராத்திரி, கந்த சஷ்டி, தை மாதம் அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை, சிவராத்திரிபிரார்த்தனைகள்நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டோர் தோஷம் நீங்கவும், கல்வி, கலைகளில் சிறந்த இடம் பெறவும், பதஞ்சலியை வணங்குகின்றனர். ராஜயோகம் கிடைக்க சண்டிகேஸ்வரையும், செல்வம் பெருக விநாயகரையும் வணங்குகின்றனர். முன்னோருக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதோரும், பிதுர் தோஷம் உள்ளோரும் நிவர்த்திக்காக இங்குள்ள சிவனையும், சூரிய சந்திரரையும் வணங்குகின்றனர். வாழ்வில் மங்கலம் உண்டாக, கன்னிப் பெண்களுக்கு நல்ல வரன் அமைய இங்குள்ள அஷ்ட புஜ துர்க்கைக்கு மஞ்சள் புடவை அணிவித்து வேண்டிக் கொள்கின்றனர்.நேர்த்திக்கடன்வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்புப் பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.இந்த ஆலயத்தில் பிரசாதமாக தயிர் சாதம் மட்டுமே நிவேதனமாக செய்யப்படுகிறது.ஆலயம் இருப்பிடம்சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் மேற்கே, சிதம்பரம் நகர பகுதியில் ஆனந்தீஸ்வரன்கோயில் தெருவில் இவ்வாலயம் உள்ளது.தொகுப்பு: பொ.பாலாஜி கணேஷ்

The post ஆனந்த வாழ்வருளும் அனந்தீஸ்வரர் appeared first on Dinakaran.

Tags : Anantheeswarar ,Sage Patanjali ,Chidambaram ,Puliyur ,
× RELATED பரம்பரை சொத்துவரிக்கு எதிரான...