×

மூன்றடுக்கு கருவறை கொண்ட வைகுண்ட பெருமாள் கோயில்

நன்றி குங்குமம் ஆன்மிகம் சிற்பமும் சிறப்பும்

ஆலயம்: வைகுண்ட பெருமாள் கோவில் (பரமேஸ்வர விண்ணகரம்), காஞ்சிபுரம், தமிழ்நாடு.

காலம்: பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் (பொ.ஆ. 731-795).108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான வைகுண்ட பெருமாள் கோயிலைப் போற்றி, திருமங்கை ஆழ்வார் ‘மங்களாசாஸனம்’ (10 பாசுரங்கள்) பாடியுள்ளார்.‘தூம்புடைத் திண் கைவந்தாள் களிற்றின் துயர் தீர்த்து அரவம் வெருவ முன நாள் பூம்புனல் பொய்கை புக்கனவனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி தேம் பொழில் குன்றேயில் தென்னவனைத் திசைப்பச் செருமேல் வியந்து அன்று சென்ற பாம்புடைப் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே’ ‘பரமேஸ்வர விண்ணகரம்’ என்றும் அழைக்கப்படுகிற இவ்வாலயத்தில் பெருமாள் ‘வைகுண்டநாதன்’ என்றும் தாயார் ஸ்ரீவைகுண்டவல்லி என்றும் வணங்கப் படுகிறார். வைணவக் கோயிலுக்கு ‘பரமேஸ்வர’ என சிவன் பெயர் கொண்டு அமைந்திருப்பது சற்றே வியப்பூட்டும்.இக்கோயிலைக்கட்டிய இரண்டாம் நந்திவர்மனைப் பற்றி இவ்வாலயத்தில் உள்ள கல்வெட்டில், ‘பல்லவ மன்னரான பரமேஸ்வரன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், இவ்வாலயம் மன்னனின் இயற்பெயர் கொண்டு அழைக்கப்பட்டுள்ளதை அறியலாம்.மிகப்பெரிய பரப்பளவில் அமைந்த ஆலயம் இல்லைதான் என்றாலும், மணற்கற்களாலான அழகிய கட்டுமான நேர்த்தியும், சிங்க வடிவத் தூண்களின் வரிசையும் பிரமிக்க வைக்கிறது.சுற்றுச்சுவர்களில் பல்லவ மன்னர்களின் பட்டாபிஷேக காட்சிகள், போர்க்காட்சிகள், வெற்றி விழாக்களின் புடைப்புச் சிற்பங்கள் என அக்கால நிகழ்வுகளுக்குச் சான்றாகத் திகழ்கின்றன. திருச்சுற்றுக்கு நடுவே அமைந்துள்ள கருவறையின் புறச்சுவர்களில், விஷ்ணுவின் பல்வேறு திருக்கோலங்கள் அழகுற வடிக்கப்பட்டுள்ளன.கருடன் தோள்மீது அமர்ந்திருக்கும் திருமால், அடியார்களும், தெய்வங்களும் தொழுது நிற்க சங்கு – சக்கரம் ஏந்திய திருமால், ஐந்து தலை நாகத்தின் கீழ் மாலவன்  அமர்ந்திருக்க, திருமகள் வணங்குவது, நரசிம்மர் வடிவம் என ஒவ்வொரு சிற்பமும் பேரழகு.இந்தக் கோயிலின் தனித்துவமான கட்டிடக்கலை, செங்குத்தாக மூன்று அடுக்குகளில் உள்ள கருவறை ஆகும். பெரும்பாலான கோயில்களில் உள்ள ஒரே சந்நதி போல் இல்லாமல், இந்தக் கோயிலில் மூன்று சந்நதிகள் ஒன்றன் மேல் ஒன்றாக அமைந்துள்ளன.விஷ்ணு கீழ்த்தளத்தில் வீற்றிருந்த கோலத்தில் வைகுண்டப் பெருமாளாகவும், அடுத்த தளத்தில் கிடந்த கோலத்தில் ரங்கநாதப் பெருமாளாகவும், மேல் தளத்தில் நின்ற கோலத்தில் பரமபதநாதப் பெருமாளாகவும் வீற்றிருக்கிறார்.தொகுப்பு: மது ஜெகதீஷ்

The post மூன்றடுக்கு கருவறை கொண்ட வைகுண்ட பெருமாள் கோயில் appeared first on Dinakaran.

Tags : Vaikunda ,Perumal temple ,Kumkum Spiritual Sculpture and Excellence Temple ,Vaikunda Perumal Temple ,Parameswara ,Vinnakaram ,Kanchipuram, Tamil Nadu ,
× RELATED நெல்லை வரதராஜ பெருமாள் கோயில்...