×

ஐயப்பன் பட்டாபிஷேகம்

நன்றி குங்குமம் ஆன்மிகம் சமய வழிபாட்டில் தெய்வங்களுக்கு நடத்தப்படும் கல்யாணவிழா சிறப்பு பெற்றது. அனைத்துத் தெய்வ ஆலயங்களிலும் திருக்கல்யாண விழா சிறப்புடன் கொண்டாடப் படுகிறது. அதற்கு அடுத்தபடியாக இருப்பது, பட்டாபிஷேக விழாவாகும்.மதுரையில், சோமசுந்தரப் பெருமானுக்கு ஆவணி மாதத்திலும், மீனாட்சி அம்மனுக்கு சித்திரை மாதத்திலும் பட்டாபிஷேக விழாக்கள் நடத்தப்படுகின்றன.நடைமுறையில் இல்லாவிட்டாலும், புராணங்களிலும் இதிகாசங்களிலும் அனேக பட்டாபிஷேக நிகழ்ச்சிகளைக் காண்கிறோம். இராமாயணத்தில் இராமர் பட்டாபிஷேகம் சிறப்புடன் சொல்லப் பட்டுள்ளது. அக்காட்சியை, பெரிய ஓவியமாகத் தீட்டி வீடுகளில் வைத்து வழிபடுகின்றனர். இதனையொட்டி இராமனுக்கு பட்டாபிராமன் என்பது பெயரானது. இராமர் பட்டாபிஷேக கோலத்தில் எழுந்தருளியுள்ள கோயில் பட்டாபிராமர் கோயில் என்று அழைக்கப்படுகின்றது.மகாபாரதத்தில் தருமர் பட்டாபிஷேகம் போற்றப்படுகிறது. பாரதக்கூத்தின் நிறைவில், தருமர் பட்டாபிஷேக விழாவைக் கொண்டாடுகின்றனர்.கிருஷ்ணர் துவராகையின் அரசனாகப் போற்றப்பட்டாலும், அவர் முடிசூட்டப்பட்டவரில்லை. ஆனாலும், அவர் கோவர்த்தன கிரியை குடையாகப் பிடித்து, கோகுலமக்களைக் காத்த அதிசயத்தைக் கண்டு அஞ்சி இந்திரன் அவரைப் பணிந்தான். அவருக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்தான். அது கோவிந்த பட்டாபிஷேகம் எனப்படுகிறது. திருப்பதி முதலிய பெரிய கோயில்களிலும் கோவிந்த பட்டாபிஷேகம் நடத்தப்படுகிறது.முருகனுக்குத் தேவசேனாதிபதியாகவும், விநாயகருக்கு கணங்களின் அதிபதியாகவும் பட்டம் சூட்டப்பட்டதைப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இதுபோல், ஐயப்பனுக்கு தேவர்கள் சேனாதிபதியாகப் பட்டம் சூட்டியதை அவரது வரலாற்றால் அறிகிறோம்.ஐயப்பன் தன் அன்னையின் தலைவலியைப் போக்க, புலிப்பால் கொண்டுவர புலிகளைத் தேடி அடர்ந்த காட்டுக்குள் சென்றார். அங்கே தேவர்கள் அவரை வரவேற்று காந்தமலை உச்சியில் தாங்கள் ஒரு மேட்டில் அமைந்திருந்த பெரிய மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் மகிஷிமுகி என்னும் பெண்ணால் தாங்கள் பெருந்துன்பம் அடைவதாகவும், அவளை அழித்துத் தங்களைக் காக்கவேண்டும் என்றும் விண்ணப்பித்தனர்.பிறகு அவரை உயர்ந்த சிம்மாசனத்தில் அமர்த்தி, வேதமந்திரங்கள் முழங்க அவருக்கு பட்டாபிஷேகம் செய்தனர். அதுவே, ஐயப்ப பட்டாபிஷேகமாகும். புராணங்களில் இது சிறப்புடன் சொல்லப்பட்டாலும், நடைமுறையில் இந்த விழாவைக் காணமுடியவில்லை.காஞ்சிப்புராணத்தில், காஞ்சியில் தர்ம சாஸ்தாவுக்கு பூதங்களின் நாயகனாக சிவபெருமான் பட்டாபிஷேகம் செய்து வைத்தது சொல்லப் பட்டுள்ளது. இவ்வகையில், அவர் மகாசாஸ்தாவாக இருக்கும்போது, ஒருமுறை மண்ணுலகில் ஐயப்பனாக வந்தபோது, தேவர்களால் இரண்டாவது முறையும் பட்டாபிஷேகம் செய்து வைக்கப்பட்டதை அறிகிறோம்.தொகுப்பு: நிர்மலா

The post ஐயப்பன் பட்டாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Ayyappan Pattabhishekam ,Kunmukum Anmigam ,Thirukalyana ,
× RELATED வெங்கடேஸ்வர சுவாமி திருக்கல்யாண வைபவம்