×

அருணாசல வலம் என்ன செய்யும்?

நன்றி குங்குமம் ஆன்மிகம்
வணக்கம் நலந்தானே!

‘‘அருணாசல கிரிவலம் வருவதற்கும் தியானம் முதலிய ஆன்மிக சாதனைகளை மேற்கொண்டு செய்வதற்கும் ஏதேனும் தொடர்புண்டா?’’  ‘‘தியானத்தின்போது உங்களுக்குள் ஏற்படும் போராட்டங்கள் அதிகமானது. நீங்கள் கொஞ்சம் அயர்ந்தாலும் மனம் ஓரிடத்தில் நிற்காது ஓடுவதை கவனிப்பீர்கள். உங்களின் சொரூபத்தை நாடிய உங்களின் முயற்சியில் பல்வேறு அவஸ்தைகளை அனுபவித்திருப்பீர்கள். ஆனால், கிரிவலம் செய்யும்போது நாளாவட்டத்தில் பெரும் முயற்சியின்றியே உங்களின் மனம் அடங்குவதை உணருவீர்கள். அவ்வளவு ஏன், உலகாயதமான பிரார்த்தனைகளுக்குக்கூட கிரிவலம் வருவோர் போகப்போக மனம் பக்குவம் பெற்று வைராக்கியத்தையும், தன்னில் மூழ்கும் விவேகத்தையும் பெறுவார்கள். இது எப்படியெனில் ஈர விறகானது காய்ந்து காய்ந்து ஒருநாள் சட்டென்று பற்றிக் கொள்வதுபோல உலக வாசனைகளில் மிக அதிகமாக ஊறிய மனம் கிரிப்பிரதட்சணம் வரவர தானே தீப்பற்றி எரிகிறது. ஒருமுறை கிரிவலம் வருவதாலேயே மீண்டும் மீண்டும் அந்த மலை ஈர்த்து தன்னை மீண்டும் வலம் வரச் செய்யும் மகத்துவம் வாய்ந்தது. குருவின் அருளும், உபதேசங்களும் ஒருவருக்குள் புகுந்து ஆத்மீகமான வாழ்க்கையில் ஒருவரை முன்னே செலுத்துகின்றன. அப்படி வெளிப்புறமாக சத்சங்கம் அமையாதவர்களுக்கும், மானிட உருவில் குரு இவர்தான் என்று தெரியாதவர்களுக்கும் இந்த அருணாசலமே குருவாகவும், சத்சங்கமாகவும் செயல்பட்டு அவர்களை நற்பாதையில் செலுத்திக் கொண்டபடியே செல்லும்.நாம் நம் உடலை நான் என்று அபிமானிப்பதுபோல இந்த அருணாசல மலையை சிவபெருமான் நான் என்று அபிமானிக்கிறார். ஞானமே உருகொண்ட ஈசன், தூல உருகொண்ட மலையாக தன்னையே இந்த மலையாக அபிமானித்திருக்கிறார். அதனால்தான் ரமண மகரிஷி. இந்த மலை வேறல்ல… சிவம் வேறல்ல. அருணாசல மலையே சிவபெருமான். சிவபெருமானே அருணாசல மலையாக வீற்றிருக்கிறார் என்கிறார். இதில் எள்ளளவும் ஐயம் வேண்டாம். உங்களின் ஆத்மாவை வலம் வந்திருக்கிறீர்களா?. ஆத்மப் பிரதட்சணம் செய்திருக்கிறீர்களா?. கவலைப்படாதீர்கள். இந்த அருணாசலத்தை வலம் வாருங்கள். இந்த கிரியை வலம் வருதலே கிருபையைப் பெறும் வழி. அசலமான மலையை சுற்றும்போது மனம் நிச்சலமாக மாறும் பாருங்கள். சலசலத்துக் கொண்டிருக்கும் மனதை அசலமாக்கும் மலை இதுவேயாகும். ஆதியந்தமற்ற அந்த ஆத்மா அருணாசலமாக இங்கு எழுந்தருளியுள்ளது. இந்த நான் எனும் அகந்தை தானாகச் சென்று ஆத்மாவைச் சென்று அடைந்து விட முடியாது. தானே தன்னை அழித்துக்  கொள்ளவும் முடியாத இயலாமையோடு கூடியது. அப்போதுதான் முதலில் இந்த அருணாசலம் எனும் நாமமும், அதனூடாக அருளும் உடனடியாக வருகிறது. இதை நாம் அறிந்தாலும் அறியாவிட்டாலும் நிகழும் அதிசயம். எனவே, அருணாசலம் எனும் இந்த மலை நான் எனும் அகந்தையை உள்ளுக்குள் தள்ளியும், உள்ளிருக்கும் அருணாசல ஆத்மா அதை கவர்ந்திழுக்கவும் செய்யும். இதுவே அருணாசல குரு செய்யும் அற்புதம் ஆகும்.கிருஷ்ணா(பொறுப்பாசிரியர்)

The post அருணாசல வலம் என்ன செய்யும்? appeared first on Dinakaran.

Tags : Arunachala Valam ,Kumkunum ,Anmigam ,Arunachala Krivalam ,
× RELATED தெய்வம் ஒருபோதும் அருள்புரியத் தவறாது!