×

சாமந்தான்பேட்டை கிராமத்தில் மீன்பிடி இறங்குதளம் அமைக்காததால் சட்டமன்ற தேர்தல் புறக்கணிப்பு-மீனவ பஞ்சாயத்தார்கள் அறிவிப்பு

நாகை : நாகை அருகே சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில் மீன்பிடி இறங்குதளம் அமைக்காததால் தேர்தலை புறக்கணிப்பதாக சாமந்தான்பேட்டை மீனவ பஞ்சாயத்தார்கள் தெரிவித்துள்ளனர்.நாகை அருகே சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்துக்கு 2015ம் ஆண்டு சட்டமன்றத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 110 விதியின்கீழ் மீன்பிடி இறங்கு தளம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் பணிகள் இதுவரை துவங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மீனவர்கள், சட்டமன்ற தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களையும் புறக்கணிக்க போவதாக அறிவித்து கடந்தாண்டு டிசம்பர் 21ம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவங்கினர். இதைதொடர்ந்து 25ம் தேதி வரை போராட்டம் நடந்தது.சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்துக்கு ஆதரவு தெரிவித்து தாலுகா மீனவர்களும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து சாமந்தான்பேட்டை பஞ்சாயத்தார்களை அழைத்து மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கலெக்டர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் டிசம்பர் 26ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் மற்றும் தேர்தல் புறக்கணிப்பு போராட்டங்களை வாபஸ் பெற்றனர். ஆனால் அதறகான முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் எடுக்காத சூழ்நிலையில் மீண்டும் தேர்தலை புறக்கணிப்பதாக சாமந்தான்பேட்டை மீனவ பஞ்சாயத்தார்கள் தெரிவித்து தங்களது மீனவ கிராமத்தில் பதாகைகள் வைத்துள்ளனர்.இதுகுறித்து சாமந்தான்பேட்டை மீனவ பஞ்சாயத்தார்கள் கூறியதாவது: சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்துக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த 110 விதியின்கீழ் மீன்பிடி இறங்குதளம் அமைத்து தரக்கோரி கடந்த டிசம்பர் 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக கூறியும், வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டோம். பின்னர் அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டதால் போராட்டங்களை வாபஸ் பெற்றோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் நாகை தொகுதி எம்எல்ஏ தமீமுன் அன்சாரியுடன் சாமந்தான்பேட்டை மீனவ பஞ்சாயத்தார்கள் கடந்த மாதம் சென்னை சென்றோம். அங்கு அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனால் வரும் சட்டன்ற தேர்தலை புறக்கணிப்பதாக சாமந்தான்பேட்டை மீனவ பஞ்சாயத்தார்கள் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. இதைதொடர்ந்து வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு செய்யப்பட்டு எங்களது மீனவ கிராமத்தில் தேர்தலை புறக்கணிப்பதாக பதாகைகள் வைத்துள்ளோம். எங்கள் பகுதியில் 1,500 வாக்குகள் உள்ளது.மீன்பிடி இறங்குதளம் அமைப்பது தொடர்பாக சுமூக தீர்வு எட்டவில்லை என்றால் ஒருவர் கூட வாக்களிக்க மாட்டோம் என்றனர்….

The post சாமந்தான்பேட்டை கிராமத்தில் மீன்பிடி இறங்குதளம் அமைக்காததால் சட்டமன்ற தேர்தல் புறக்கணிப்பு-மீனவ பஞ்சாயத்தார்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Samanthanpet ,Meenava Panchayats ,Nagai ,Fisherman Panchayats ,Samanthanpet village ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...