×

மார்கழி ஊர்வலம்!

மாதம் முழுவதும் அதிகாலையில் எழுந்து  திருப்பாவை, திருவெம்பாவை ஓதிச்செல்லும் சிறுவர்-சிறுமியர்!சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே தமிழக அளவில் பிரசித்திபெற்ற சிவன் திருத்தலங்களில் ஒன்றான தான்தோன்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ள பேளூரில், வேறெந்த பகுதியிலும் இல்லாத வகையில், நூறாண்டுக்கு மேலாக சிறுவர்- சிறுமியரின் மார்கழி வழிபாட்டு ஊர்வலம் மரபு மாறாமல்  நடைபெற்று வருகிறது. திருப்பாவை, திருவெம்பாவை ஓதியபடி வலம் வரும் சிறார்களை வரவேற்று கடவுளின் தூதுவர்களாக கருதி பக்தர்கள் வழிபடுகின்றனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர்,  புராண காலத்திலேயே வேள்வியூர் என்ற பெயரில் சிறந்த ஆன்மிக தலங்களில் ஒன்றாக விளங்கியுள்ளது. கல்வெட்டுகளும், புராணங்களும் இதனை உறுதிபடுத்துகின்றன. பேளூரில், ராமன் தாகம் தீர்க்க வசிஷ்டர் அருளிய புனித நதியாக கருதப்படும் வசிஷ்டநதியின் வடகரையில், பஞ்சபூத சிவன்  திருத்தலங்களில் முதல் தலமான தான்தோன்றீஸ்வரர் கோவிலும், மறுகரையில், அஷ்டபுஜ பால மதன வேணுகோபால சுவாமியெனும், பழமையான  பெருமாள் கோவிலும் அமைந்துள்ளது.  இறைவழிபாட்டிற்கு உகந்த தமிழ் மாதமான மார்கழியில், பேளூரில் அதிகாலையில் எழும் சிறுவர்- சிறுமியர், பெருமாள் கோவிலில் கூடி திருப்பாவை, திருவெம்பாவை பாடி, பாரம்பரிய முறைப்படி சங்கு ஊதி வழிபாடு நடத்துவதும், பின்னர் அங்கிருந்து சிவனை போற்றிப்பாடி முக்கிய வீதிகளில் வழியாக, தான்தோன்றீஸ்வரர் கோவிலுக்கு ஊர்வலமாகச் சென்று வழிபாடு நடத்துவதும், நூறாண்டுக்கும் மேலாக மரபு மாறாமல் தொடர்ந்து வருகிறது.தமிழகத்தின் வேறெந்த பகுதியிலும் இல்லாத வகையில், சைவ-வைணவ மத நல்லிணக்கத்தையும், மார்கழி மாத வழிபாட்டின் மகிமையையும் பறைசாற்றும் வகையில், வழிவழியாக தொடர்ந்து வரும் இந்த ஆன்மிக ஊர்வலத்தில் பங்கேற்கும் சிறுவர்-சிறுமியருக்கு, பொதுமக்களும், பக்தர்களும் வழிநெடுக கோலங்களை வரைந்து வைத்தும், இறைவனின் தூதுவர்களாக கருதியும்  வரவேற்று  வழிபடுகின்றனர்.  நடுங்கும் குளிரிலும், மார்கழி முதல் நாளில் இருந்து தொடர்ந்து அனைத்து நாட்களும், ஒரு நாள் தவறாது அதிகாலையில் விழித்தெழுந்து ஊர்வலத்தை நடத்தி, திருப்பாவை, திருவெம்பாவை ஓதி சிவனையும், பெருமாளையும் வணங்கி இறைநெறி பரப்பும் பேளூர்  சிறுவர்- சிறுமியருக்கு நிறைவு நாளில் விழா எடுக்கும் பேளூர் பொதுமக்கள் மற்றும் ஊர் பெரியதனக்காரர்களும், சைவ-வைணவ வழிபாட்டுக்குழுவினரும் பாராட்டி ஊக்கப்படுத்துவதும் குறிப்பிடதக்கதாகும்.  – பெ. பெரியார் மன்னன்பேளூர்…

The post மார்கழி ஊர்வலம்! appeared first on Dinakaran.

Tags : Tirupavai ,Tiruvemba ,Shiva ,Tamil Nadu ,Vazhappadi, Salem district ,Margazhi Procession ,
× RELATED 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிவகாசி சிவன்...