×

பதினாறு செல்வங்களும் அருளும் பஞ்சநதீஸ்வரர்

புதுச்சேரி மாநிலம் மண்ணாடிப்பட்டு கொம்யூன் திருபுவனை அருகே உள்ளது திருவாண்டார்கோவில். நடுநாட்டைச் சேர்ந்த திருவாண்டார்கோவில் திருவடுகூர், திருவாறையுடை, திருவையாறு திருபுவனை, மாதேவி, சதுர்வேதி மங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது.சோழர்கால கோயில்:1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இத்திருக்கோவில் முதலாம் பராந்தக சோழ மன்னன் காலத்தில் கிபி 10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பரகேசரி என்னும் உத்தம சோழன் இராசகேசரி என்னும் முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்கன், விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன் போன்ற சோழ மன்னர்களாலும், விஜயநகர அரசர் விருப்பண்ணர், வீரபுக்கர், சாளுவ நரசிம்மன், கிருஷ்ணதேவராயர், அச்சுதராயர் என்னும் விஜயநகர் மன்னர்களாலும் ராஷ்டிரகூடர், கன்னர், தேவர் மூன்றாம் கிருஷ்ணராலும் பராமரிக்கப்பட்டு, புனரமைப்பு செய்யப்பட்ட சிறப்பினை உடையதாகும். திருவடுகூர் என்று திருஞானசம்மந்தரால் பாடப்பெற்ற பெருமையும் இதற்கு உண்டு.கும்பாபிஷேகம்:   வடுகபைரவர் என்னும் பிரம்மன் வழிபட்ட திருக்கோயில் என்ற பெருமையும் இந்த கோவிலுக்கு உண்டு இந்த கோயிலில் அருள்பாலிக்கும் இறைவன் அருள்மிகு பஞ்சநதீஸ்வரர் என்றும், பரமசுவாமி என்றும், வடுகூர் நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி திரிபுரசுந்தரி என்றும், வடுகையர் கன்னி என்றும் அழைக்கப்படுகிறார். இந்த திருக்கோவிலுக்கு கடந்த 1985ஆண்டும் 1991ஆண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்றது அதனை தொடர்ந்து  27 ஆண்டுகளுக்கு பிறகு 30.03.2018 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.கோயில் அமைப்பு:இத்திருக்கோவில் தொல்பொருள் ஆய்வுத்துறையால் பாதுகாக்கப்படுகிறது. நுழைவு வாயிலுக்கு வெளியில் கருங்கல்லால் அமைக்கப்பட்ட நந்தி உள்ளது. இராஜகோபுரம் இல்லாத கட்ட கோபுரம் நுழைவு வாயிலை கடந்து சென்றால் கொடி மர மேடை, நந்தி, பலி பீடங்கள் ஆகியவற்றுடன் பதினெட்டாங்கால் மண்டபம் ஒன்றை காணலாம் இதில் தான் தெற்கு நோக்கி அமைந்த தேவி திருக்கோவில் உள்ளது. இந்த மண்டபத்தை கடந்து சென்றால் முழுத்தூண்களும், அரைத்தூண்களுமாக 8 தூண்களை கொண்ட அர்த்த மண்டபம் உள்ளது. கருவறை சதுர வடிவில் ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது மூலஸ்தானத்தில் சந்திரசேகரர், திரிபுரசுந்தரி, கணபதி, திருநாவுக்கரசர் ஆகியோரின் உற்சவ மூர்த்திகள் காணப்படுகின்றன பிரகாரத்தை வலம் வரும்போது பிரகாரத்தில் நால்வர் திருக்கோவில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.கன்னி மூலையில் தனிக்கோயிலில் வலம்புரி விநாயகர் அருள் பாலிக்கிறார். திருதி மூலையில் ஆறுமுக கடவுள் வள்ளிதெய்வானையுடன் காட்சி தருகிறார். தெற்கு நோக்கிய மாடங்களில் பிச்சாடனர், பிள்ளையார், தட்சிணாமூர்த்தி ஆகியோரையும், மேற்கு நோக்கிய மாடத்தில் லிங்கோத்பவரையும், வடக்கு நோக்கிய மாடங்களில் பிரம்மா, எட்டு கரங்களோடு கோரப்பல் இல்லாத நிலையில் சாந்த மூர்த்தியாக விளங்கும் துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர், இடபாருடர் ஆகியோரையும் கண்டு தரிசிக்கலாம். வடக்கு பிரகாரத்தில் சண்டேசர் கோவில் உள்ளது. வடகிழக்கே பைரவர் மண்டபமும், கிழக்கே சூரிய மண்டபமும் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. கோயிலின் சிற்பங்களையும் அமைப்பையும் ஆராய்ந்த ஆய்வாளர்கள் இதனை முதலாம் பராந்தகச் சோழன் காலத்து திருப்பணி என்று கூறியுள்ளனர்.சிறப்புகள்:இந்த கோயிலில் மட்டும் 19 கல்வெட்டுகள் இருக்கின்றன. முதலாம் பராந்தக சோழன் பரகேசரி என்னும் பட்டம் பெற்றவன். அவனுக்கு அடுத்து முதலாம் ராஜராஜ சோழன், முதலாம் ராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்க சோழன் ஆகிய சோழமன்னர் காலத்தில் சிறந்து விளங்கியது. திருவாண்டார்கோவில் முதலாம் ஆதித்தசோழன் ஆட்சி காலத்திலிருந்தே சீரும், சிறப்புமாக விளங்கி வந்துள்ளது. பஞ்சநதீஸ்வரரை தரிசனம் செய்தால் பதினாறு செல்வங்களும் நம்மை வந்து சேரும். வாழ்க்கை வளமாகும். பெண்கள் மனமுருகி இறைவனை வழிபட்டால் திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.செல்வது எப்படி?புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருவாண்டார்கோவில் என்ற இடத்தில் சாலையின் வடபுறத்தில் இந்தக்கோயில் அமைந்துள்ளது….

The post பதினாறு செல்வங்களும் அருளும் பஞ்சநதீஸ்வரர் appeared first on Dinakaran.

Tags : Panchanadiswar ,Thiruvandarkovil ,Tiruphuvanai ,Mannadipattu ,Puducherry ,Thiruvadukur ,Thiruvaraiyudai ,Thiruvaiyaru Thiruphuvanai ,Thiruvandarko ,
× RELATED 50 பேர் மீது போலியாக கடன் பெற்று ₹35 லட்சம் மோசடி