×

விழித்திருந்து மனதைக் கட்டுப்படுத்து!

ஸ்ரீ  கிருஷ்ண அமுதம் – 22(பகவத் கீதை உரை)எந்தச் சூழலிலும் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதுதான் ஞானியின் இலக்கணம் மற்றும் இயல்பு என்று விளக்குகிறார் கிருஷ்ணன். இந்தப் பக்குவம் இல்லாததால்தான் இருவகையாக சிந்தித்து குழம்பிப் போகிறான், அர்ஜுனன். அவனிடம் போரிட வேண்டும் என்ற உத்வேகமும் இருக்கிறது. சமாதானமாகப் போய்விடலாமே என்ற பலவீனமும் இருக்கிறது! ஒரே எண்ணம், ஒரே குறிக்கோள், ஒரே இலக்கு என்பதில் உறுதி பிறக்குமானால் இந்திரியங்களும் அதற்கு ஒத்துழைக்கும். புத்தர் பெருமான் தன்னிடமிருந்து ஞானோதயம் பெற்ற சீடர்களை உலகின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி, அங்குள்ள மக்களுக்கு அஹிம்சா தர்மத்தை போதிக்க எண்ணினார். அந்தவகையில், தன் பிரதான சீடனான பூர்ணாவை அழைத்தார். ‘‘பூர்ணா நீ சூனாபராந்தம் நாட்டிற்குச் செல். ஆனால், அங்குள்ள மக்கள் மிகவும் விரோத குணம் கொண்டவர்கள் என்று கேள்விப்பட்டேன். உன் எண்ணத்துக்கு அவர்களை உன்னால் ஆட்படுத்த முடியுமா?’’ என்று கேட்டார்.‘‘முடியும் என்றுதான் நம்புகிறேன் ஐயனே’’, என்றார் பூர்ணா.‘‘அவர்கள் உன்னை பார்த்த மாத்திரத்திலேயே இழி சொற்களால் ஏசினால் நீ அதை எப்படி எதிர்கொள்வாய்?’’‘‘வெறும் ஏச்சோடு நின்றுகொண்டார்களே, அடிக்க ஆரம்பிக்கவில்லையே, என்று ஆறுதல் அடைவேன். அதனால், அவர்களை அஹிம்சா மார்க்கத்துக்குத் திருப்ப முடியும் என்று நம்புவேன்’’.‘‘அவர்களுடைய ஏச்சுகளை நீ அமைதிப் புன்னகையுடன் ஏற்றுக்கொள்வதை, அது தங்களுக்குச் செய்யப்பட்ட ‘அவமரியாதை’ என்று கருதி அவர்கள் உன்னை அடித்தார்களென்றால்?’’‘‘கை, கால்களால் அடித்து உதைக்கும் இவர்கள் ஆயுதத்தைப் பயன்படுத்தவில்லையே, அதுவரையில் நலமே, என்று பொறுமையாக இருப்பேன்.’’“வசவு பாராட்டியும், அடித்தும்கூட இவன் முகத்திலிருந்து சாந்தம் விலகவில்லையே என்று கருதி, மிக மூர்க்கமாக உன்னை ஆயுதங்களால் தாக்கினார்கள் என்றால் என்ன செய்வாய்?’’‘‘வசவு, கை மற்றும் ஆயுதத் தாக்குதல்களால் அவர்களுக்குத் திருப்தி ஏற்படவில்லையே, அவர்கள் விரைவில் திருப்தியுறட்டும் என்று என் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் அமைதியாக இருப்பேன்.’’‘‘என்ன செய்தும் கோபப்படாத உன்னை, வலியை வெளிக்காட்டாத உன்னை ஆயுதங்களால் அடித்தே கொன்றுவிட்டார்களென்றால்…?’’‘‘அட, என்ன ஒரு பாக்கியம்! முக்தியடைய இப்படியும் ஓர் எளிய வழி இருக்கிறதா என்ற சந்தோஷத்தில் நான் சாந்தமாகவே உயிர் துறப்பேன்.’’‘‘சபாஷ் பூரணா. இந்தப் பணிக்குப் பொறுத்தமானவன் நீதான். போய்வா.’’இப்படி ஒரு சம்பவத்தை பொறுமையின் பெருமைக்கு உதாரணமாகச் சொல்வார்கள். கிருஷ்ணன், குறிப்பிடும் ஞானியும் இத்தகையவனே. அவன் மனவேதனை, உடல் வலி என்று எந்த உணர்வையும் அறியாதவனாக இருப்பான். அதேபோல் சந்தோஷம், மன திருப்தி போன்ற உணர்வையும் அறியாதவனாக இருப்பான். அவனுடைய ஒரே பணி, தன் ஆத்மாவைத் தூய்மைபடுத்திக்கொண்டே இருப்பதுதான். அப்படிச் செய்ய வேண்டுமானால், அதற்கு உணர்ச்சிவசப்படுதல் மிகப்பெரிய இடையூறு என்பதை உணர்ந்து அதை எள்ளளவும் கைக்கொள்ளாதவனாக அவன் இருப்பான்.ஞானிபற்றி ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன ஒரு எடுத்துக்காட்டும் இங்கே குறிப்பிடத்தக்கது. கொடிய விஷமுள்ள ஒரு பாம்பை நாம் கையால் பிடித்தால், அது உடனே நம்மைக் கடித்துவிடுகிறது. அதே ஒரு பாம்பாட்டி தன்னுடைய மகுடியை ஊதி அதை மயக்கித் தன் வயப்படுத்திக்கொள்கிறான். அதுமட்டுமல்ல, அந்த நாகத்தைத் தன் கழுத்தைச் சுற்றிப் படரவிட்டு ஆபரணமாகவும் ஆக்கிக் கொள்கிறான். அவனை அந்தப் பாம்பு கடிப்பதில்லை. இந்தப் பாம்பாட்டியைப் போன்றவன்தான் ஞானி. அவனால் எந்தச் சூழ்நிலையையும் சந்திக்க முடியும். அதேசமயம் அந்த சூழ்நிலைபால், எந்த உணர்வுபூர்வமான தாக்கத்தையும் அவன் மேற்கொள்ளமாட்டான்.விஷயா வினிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹினரஸவர்ஜம் ரஸோப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே (2:59)‘‘தன் புலன்களைக் கட்டுப்படுத்தும் ஒருவனுக்கு அவை சம்பந்தமான விஷயங்கள் தெரியாமல் போகலாம். அவை சம்பந்தமான அனுபவங்கள் கிட்டாமல் போகலாம். ஆனாலும், அந்த விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் விருப்பம் அவனிடம் இருக்கக்கூடும். அந்த விருப்பமும், அவன் பரமாத்மாவைத் தரிசித்தானால் அவனைவிட்டு விலகிவிடும்.’’ நோய் போன்ற ஏதேனும் பாதிப்பு காரணமாக ஒருவன் படுத்திருக்கிறான் என்றால், அவனுடைய ஐம்புலன்களும் பலவீனப்பட்டுப் போயிருக்கும். இத்தருணத்தில், அந்தப் புலன்கள் அவனுடைய எண்ணப்படி செயல்பட முடியாமல் கிடக்கும். ஆனாலும், அவனுக்கு அவற்றால் விளையும் அனுபவங்களை அடைய ஆசையும் இருக்கும். உடல்நிலை சரியில்லாத காலகட்டத்தில் அந்த விருப்பத்தை ஈடேற்றிக்கொள்ள முடியாது. அதனால், உடல்நலம் தேறியவுடன் அவற்றை அனுபவித்துவிட வேண்டும் என்று அவன் காத்திருப்பான். அதேபோலதான் தனிமைப்படுத்தப்பட்டவனும். ஏதேனும் குற்றம் புரிந்த காரணத்துக்காக அவன் சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட்டவனாக அல்லது சிறையில் அடைக்கப்பட்டவனாக இருந்தானானால் அவனுக்கு உலக வாழ்க்கையின் விஷயங்கள், அனுபவங்கள் எல்லாம் மறுக்கப்படுகின்றன. தனிமையில், நான்கு சுவர்களுக்குள்தான் வாழ்க்கை என்ற நிர்ப்பந்தத்தில் அவனால் காட்சிகளைக் காண, ஒலியைக் கேட்க, வாசனையை நுகர, யாருடனாவது பேச, தென்றலை மேனியால் ஸ்பரிசிக்க இயலாமல் போய்விடுகிறது. எப்போது விடுதலையாவோம், புலன் நுகர்ச்சியை அனுபவிப்போம் என்று அவன் ஏங்குகிறான். ஞானியும் இதுபோன்ற விருப்ப வயப்பட்டவன்தான். ஆனால், அவனே பரமாத்மாவைத் தரிசிக்கக்கூடுமானால் அந்த விருப்பத்தையும் கைகழுவி விடுவான். ஆமாம்! தான் நுகர விரும்பும் எல்லா விஷயங்களுமே பரமாத்ம சொரூபம் என்று அவன் தெளிவடைவானானால் அந்த விஷயங்களில் அவன் தொடர்ந்து விருப்பம் கொள்ளமாட்டான். ‘‘ஒரு சிறுவன் சிங்கம்போல் வேடம் பூண்டு அவனுடைய தங்கையை பயமுறுத்துகிறான். அவனை சிங்கமாகவே நினைத்து அவள் பயந்து ஓடுகிறாள். உடனே, சிறுவன் தன் வேடத்தைக் கலைத்துவிட்டுத் தன்னைக் காட்டுகிறான். அவனைப் பார்த்து அவள் பயம் நீங்கியவளாக ஓடிவந்து அவனைக் கட்டிக்கொள்கிறாள். ‘நீதானா அண்ணா, நான் ஏதோ சிங்கம்தான்னு நினைச்சு பயந்துட்டேன்’. என்று சொல்லி ஆறுதல் அடைகிறாள். உலகியல் பொருட்கள் மீது பற்றுக் கொண்டவர்கள் இந்தச் சிறுமியைப் போன்றவர்களே. அந்தப் பற்று காரணமாக அவர்கள் ஆசை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அல்லது பயம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அந்தப் புனைகோலத்தில் ஒளிந்திருப்பவன் தன் அண்ணன்தான் என்பதை தங்கை எப்படி அடையாளம் கண்டுகொண்டு நிம்மதி அடைகிறாளோ, அதேபோல் உலகியல் விஷயங்களில் எல்லாம் அந்தப் பரம்பொருள் தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை உணர்ந்து கொண்டோமானால் ஆசைக்கோ அல்லது அச்சத்திற்கோ வாய்ப்பே இல்லை. ஒரு ஞானிக்கான விளக்கமாக ராமகிருஷ்ண பரமஹம்ஸர் அருளிய வாக்கு இது.யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்சிதஇந்த்ரியாணி ப்ரமாதீனி ஹரந்தி ப்ரஸபம் மன (2:60)‘‘அர்ஜுனா, குந்தியின் மைந்தனே, புலன்கள் படுத்தும்பாடு எண்ணிலடங்காது. நன்னெறிவழி வாழும் நல்ல அறிஞர்களையே மனச் சலனத்திற்கு உட்படுத்தி அவர்களைக் கீழிறக்குகின்றன. எவ்வளவுதான் அவர்கள் அந்தப் புலனீர்ப்பிலிருந்து தப்பிக்க முயற்சித்தாலும், அவை அந்த அறிஞரைவிட கெடுபலம் அதிகம் கொண்டதாகி அவர்களைத் தம் வயப்படுத்திக்கொள்வதில் வெற்றி காண்கின்றன’’. ஒரு தாய், தன் குழந்தையை ஓரிடத்தில் அமர்த்தி வைக்கிறாள். அந்தக் குழந்தையோ சற்றுத் தொலைவில் உள்ள ஒரு பொருளைப் பார்த்து, அதனால் ஈர்க்கப்பட்டு, அதை நோக்கித் தவழ்ந்து செல்கிறது. அதைப் பார்த்துவிட்ட அந்தத் தாய் உடனே ஓடிப்போய் அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டுவந்து மறுபடி உட்கார வைக்கிறாள். ஆனால் இன்னொரு திசையில், இன்னொரு பொருளைக் காணும் அந்தக் குழந்தை, இதை நோக்கியும் ஓடுகிறது. தாய் இப்போதும் அதை நோக்கி ஓடிச்சென்று குழந்தையைப் பற்றித் தூக்கி வருகிறாள். அமரவைத்த இடத்திலிருந்து நகரக் கூடாது என்பது அந்தக் குழந்தைக்குத் தெரியவில்லை. தன்னை ஈர்க்கும் ஒரு பொருளை நாடி, அது ஆசைப்பட்டுச் செல்கிறது. தன்னைக் கவரும் அந்தப் பொருள் தனக்கு நன்மை செய்யுமா, தீமை செய்யுமா என்பது அந்தக் குழந்தைக்குத் தெரியாது. ஆனாலும், அதன் உள்ளம் அதை நோக்கி விழைகிறது. இப்படி ஒரு குழந்தை சுபாவத்தில்தான் நன்கு கற்றறிந்த ஆன்றோர்கள்கூட மனம் தடுமாறி புலனிச்சையில் தத்தளிக்கிறார்கள். மெத்தப் படித்தவர்களே இப்படிப் புலன் பொறிகளில் சிக்கிக் கொள்ளும்போது, சாதாரண மனிதர்களைப்பற்றி கேட்கவே வேண்டாம். சற்றே சிதிலமடைந்த வீட்டில் வசிக்க வேண்டிய கட்டாயம் ஒரு குடும்பத்திற்கு நேருகிறது என்று வைத்துக்கொள்வோம்.அந்த வீட்டில் பல்லி, பூச்சிகள் மற்றும் தேள் போன்ற விஷ ஜந்துகளும், அவர்களுடன் கூடவே வாழும். அவற்றை அழிக்க அல்லது அந்த வீட்டைவிட்டு விரட்ட அந்தக் குடும்பத்தாரால் இயலவில்லை. ஆனாலும், அவற்றுடனேயே அந்த வீட்டிலேயே வாழவேண்டும். என்ன செய்வது? அந்த ஜந்துக்களால் தங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடாதபடி அவர்கள் அவற்றுடனேயே எச்சரிக்கையுடன் வாழவேண்டும். இதேபோல் புலன்களின் தாக்கங்களுக்கும் ஆட்படாமல், ஆனால் அந்தப் புலன்களுடனேயே வாழக் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். ருசியான ஓர் உணவை உண்ணும் ஒருவன் ஓரளவுக்கு உண்டபின், ‘போதும்’ என்ற திருப்தியை அடைவானானால், அப்போதே அந்த உணவை எடுத்துக்கொள்வதை நிறுத்திவிட வேண்டும். ருசி ஆசை காரணமாக, மேலும்மேலும் அவன் தின்றுகொண்டே இருந்தானானால் அது அவனுடைய நாவைத் திருப்திபடுத்தலாமே தவிர, அவனுடைய ஒட்டுமொத்த உடல்நலத்தையும் பாதிக்கும் என்பதை அவன் அனுபவப்பட்ட பிறகுதான் உணர்வான். அஜீரணம், வயிற்றுக் கோளாறு என்ற உபாதைகள் நிவர்த்தியாகுமானால், உடனே அடுத்த உணவை அதேபோல் உட்கொள்ள அவன் ஆவல் கொள்கிறான். இப்போதும் அதே ஈர்ப்பு, பாதிப்பு, உபாதை. இதில் எந்த அளவில் உணவை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதைவிட, அந்த உணவின் மீது பற்றின்மையை வளர்த்துக்கொண்டால், அது குறிப்பிட்ட அளவை விஞ்சாது என்ற உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். பசியுணர்வு காரணமாக எடுத்துக்கொள்ளப்படும் உணவின் அளவு, தேவைக்கும் குறைவானதாகவே இருக்கும் பட்சத்தில் எந்த உணவின் மீதும் மனம் மோகம் கொள்ளாது. ‘பசித்திரு, தனித்திரு, விழித்திரு’ என்று சுவாமி ராமலிங்க அடிகளார் சொன்னார். இப்படி பசித்து, தனித்து, விழித்து இருந்தால் ஆத்ம தரிசனம் கிட்டும் என்றும் அவர் விளக்கினார். அதாவது, பசி உணர்வில் அடக்கம் வந்துவிட்டால் பிற எல்லா புற ஈர்ப்புகளும் வலுவிழந்து போய்விடும். இல்லாதவன் பட்டினி கிடப்பது இயற்கை. தவிர்க்க முடியாதது. ஆனால் எல்லாம் இருந்தும் பசியை, ருசியைக் கட்டுப்படுத்துபவன்தான் ஞானி. அதேபோல், தனித்திருப்பது என்பது பிறவற்றிலிருந்து முற்றிலுமாக விலகி இருப்பது அல்ல. மக்களும், சம்பவங்களும் சூழ இருந்தாலும், அவற்றிலெல்லாம் எந்த ஆர்வமும் காட்டாமல் ஒதுங்கி இருப்பது. அதாவது, உடலளவில் நாம் அங்கே இருந்தோமென்றாலும், மனத்தளவில் அந்த விஷயங்களில் எந்த ஈடுபாடும் காட்டாத தன்மை. சுற்றுச் சூழ நிகழும் காட்சிகளைக் கண்கள் காணும், காதுகள் கேட்கும், நாசி நுகரும், வாய் அபிப்ராயம் சொல்லும். ஆனாலும், மனதை அந்தப் புலன்களிடமிருந்து பிரித்துத் தனித்து வைத்துக் கொள்ளவேண்டும். அவற்றின் கவர்ச்சிக்கு மனதை அடிமையாக்கக் கூடாது. விழித்திருத்தல் என்பது வெறும் கண்விழித்தல் அல்ல, விழிப்பாயிருத்தல். எந்த கவர்ச்சியாலும், மனம் விழுந்துவிடக் கூடாததாகிய விழிப்பு. களவு போய்விடாதபடி காவலாளி விழித்திருக்கிறாரே, கண்காணித்திருக்கிறாரே, அந்த எச்சரிக்கை விழிப்பு. தன்னை எதுவும் கவர்ந்துவிடாதபடி அல்லது இழுத்துக்கொண்டு ஓடிவிடாதபடி பாதுகாத்துக் கொள்ளும் விழிப்பு. இதையே சுவாமி விவேகானந்தர் வேறு மாதிரி சொன்னார்;விழிமின், எழுமின், உழைமின். ‘உறங்கியது போதும், விழித்தெழு, நீ ஆற்ற வேண்டிய கடமைகள் எத்தனையோ இருக்கின்றன, எழுந்திரு’. என்ற பொருளில் அவர் அவ்வாறு இளைஞர்களை நோக்கிச் சொன்னாலும், அந்த சொற்றொடரிலும் கிருஷ்ணன் உரைத்த தத்துவம் பொதிந்திருக்கிறது என்றே சொல்லலாம். அதாவது, ஆன்மாவுக்கு திருப்தியளிக்கும் கடமையை மனதில் கொண்டு அதை நிறைவேற்றப் பாடுபடவேண்டும். அந்த நோக்கத்திற்கு இடையூறாக இருக்கக்கூடிய புலன் நுகர்ச்சிகளை விழித்து, தெரிந்து , வீழ்த்திவிடு. அப்படிச் செய்தால் நீ ஆரோக்கியமாக எழுவாய். இந்த ஆரோக்கியம் ஆத்ம திருப்திக்காக உழைக்கும் முழு வலுவையும் தரும் என்றார் விவேகானந்தர்.(கீதை இசைக்கும்)பிரபு சங்கர்…

The post விழித்திருந்து மனதைக் கட்டுப்படுத்து! appeared first on Dinakaran.

Tags :
× RELATED கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?