×

மதுரை மீனாட்சி கோயில் ஆவணி பெருவிழா

மதுரை ‘திருவிழாக்களின் நகர்’ பெருமைக்குரியது. மாதம்தோறும் திருவிழா காண்கிற மகத்துவமிக்கதாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் இருக்கிறது. இக்கோயிலில் ஆகஸ்ட் மாதம் துவங்கும் ஆவணி மூலப் பெருவிழா, திருவிழா கொண்டாட்டங்களில் கூடுதல் குதூகலம் கொள்கிறது. மதுரையில் சிவபெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களின் முக்கிய பத்து திருவிளையாடல்களை இந்த ஆவணிப் பெருவிழாவே கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் 11ல் துவங்கி அடுத்தடுத்த பத்து நாட்களிலும், பத்து திருவிளையாடல்கள் நடந்தேறி ஆன்மிக அற்புதம் நிறைக்கிறது. இந்நாட்களில் கருங்குருவிக்கு உபதேசம், நாரைக்கு மோட்சமருளியது, மாணிக்கம் விற்றது, தருமிக்கு பொற்கிழி அருளியது, உலவாக்கோட்டை அருளியது. பாணனுக்கு அங்கம் வெட்டியது, வளையல் விற்றது மற்றும் சுவாமிக்கு பட்டாபிஷேகம், நரியை பரியாக்கியது, பிட்டுக்கு மண் சுமந்தது, விறகு விற்றதென அடுத்தடுத்து நிகழ்த்தப்படும் பத்து திருவிளையாடல்களும் ஆன்மிக வரலாற்றை அழுத்தத்துடன் சொல்கின்றன. கருங்குருவிக்கு உபதேசம் (11-08-2021): முக்கிய பட்டியலில் முதல் வரிசையில் துவங்கும் ‘கருங்குருவிக்கு உபதேசம்’ அற்புத திருவிளையாடலாகும். முற்பிறவியில் செய்த சிறிய பாவத்திற்கென ஒருவன் மறுபிறப்பில் கருங்குருவியாக பிறக்கிறான். இந்த கருங்குருவியை காகங்கள் துன்புறுத்தியதால், உயிருக்குப் பயந்து நெடுந்தூரம் பறந்து சென்று ஒரு மரக்கிளையில் அந்த குருவி வருத்தத்துடன் அமர்ந்திருக்கிறது. அந்நேரம், மரத்தின் கீழே சிலர், ‘பொற்றாமரைக்குளத்தில் நீராடி சோமசுந்தரரை வழிபட்டால் எண்ணியது நடக்கும்’ என்று உரையாடிக் கொண்டிருக்க, அதைக்கேட்ட கருங்குருவி அங்கிருந்து நேரே மதுரைக்கு வந்திருக்கிறது. பொற்றாமரைக் குளத்தில் நீராடி இறைவனை வணங்கியதால், அக்குருவியின் பக்திக்கு இரங்கிய இறைவன், ‘மிருத்யுஞ்சய மந்திரத்தை’ உபதேசித்து, கருங்குருவியின் இனத்தையே ‘எளியான்’ என்பதை மாற்றி ‘வலியான்’ என வழங்கச் செய்தாராம்.நாரைக்கு முக்தி கொடுத்தது (12-08-2021): மதுரைக்கு தென்புறம் ஒரு தடாகத்தில் வாழ்ந்த நாரை, அங்கு நீர் வற்றியதால் மற்றொரு குளத்திற்கு சென்றது. அக்குளத்தில் நீராடிய முனிவர்கள் மீது மீன்கள் புரண்டு விளையாடியதால், அந்த மீன்களை உண்ணலாகாது எனக்கருதி நாரை உண்ணவில்லை. அங்கிருந்த முனிவர்களின் உரையாடல் மூலம் மதுரையின் பெருமை தெரிந்த நாரை, மதுரை வந்து பொற்றாமரைக் குளத்தில் நீராடி, சிவபெருமானை வணங்கி முக்தி பெற்றதென்பர். மேலும், அந்த நாரையானது, பொற்றாமரைக் குளத்திலே நீர்வாழ் உயிர்கள் ஏதும் இருக்கக் கூடாது, அவ்வாறு இருந்தால் மற்ற பறவைகள் அதனை உண்ணக்கூடும். இதனால் பாவம் வந்து சேரும். எனவே, நீர் வாழ் உயிரினங்கள் ஏதும் இருக்கக் கூடாதென்ற வரத்தை வாங்கியது. நாரைக்கு இறைவன் வழங்கிய வரத்தினால், இன்று வரை இந்த பொற்றாமரைக் குளத்தில் நீர்வாழ் உயிரினங்கள் ஏதும் இல்லை என்பதும் ஆச்சர்யத்திற்குரியது.மாணிக்கம் விற்றது (13-08-2021):  நீதியுடன் ஆட்சிபுரிந்த மன்னர் வீரபாண்டியனுக்கு ஒரு மகன் பிறந்தான். ஒருமுறை வேட்டைக்கு சென்ற அரசனை புலி கொன்று தின்றது. அப்போது, அரசனின் காமக்கிழத்தியரின் மக்கள் அரண்மனைக்குள் புகுந்து, செல்வங்கள், மணிமகுடம் கவர்ந்து சென்றனர். இளவரசனுக்கு முடிசூட்டிட அமைச்சர்கள் முடிவெடுத்தும், மணிமகுடம் போன்றவை களவு போனதால், சிவபெருமானிடம் முறையிட கோயிலுக்குச் சென்றனர். சிவபெருமானே நவரத்தின வியாபாரியாகத் தோன்றி, நடந்ததை கேட்டறிந்து, புதிய மணிமகுடத்திற்கென விலையுயர்ந்த நவமணிகள் வழங்கி, அதன் சிறப்புகளும் தெரிவித்தார். இதன்படி புதிய மகுடத்தை சூட்டி, இளவரசரை ‘அபிடேக பாண்டியன்’ என அழைத்திடக் கூறி மறைந்தார். கவர்ந்து செல்லப்பட்ட செல்வங்கள், மணிமகுடம் மீண்டும் கிடைத்தது. மன்னராட்சியும் சிறப்புடன் நடந்தது.தருமிக்கு பொற்கிழி அளித்தது (14-08-2021): வங்கிய சூடாமணி பாண்டியன், அரசியுடன் நந்தவனத்தில் தான் வளர்த்து வரும் செண்பக மரங்கள் பகுதியில் இருந்தார். அப்போது புதிய வாசனையை அவர் உணர்ந்தார். அது தன் தேவியின் கூந்தலில் இருந்து வருவதாக தெரிந்து, பெண்களின் கூந்தலுக்கு இயற்கையாகவே வாசனை உண்டா? என சந்தேகம் கொண்டார். ஐயத்தை நீக்கினால் ஆயிரம் செம்பொன் கொண்ட பொற்கிழி தருவதாகக் கூறி, அதனை சங்க மண்டபத்தில் தொங்கவிட்டார். பல புலவர்கள் பாடியும், மன்னரின் ஐயம் தீராத நிலையில், தருமி என்றொரு பிரம்மச்சாரி, திருமணமாகி சிவபெருமானை பூஜிக்கும் விருப்பத்தில், அந்த பரிசு தனக்கே கிடைத்தால், திருமணம் செய்து, சிவனையும் பூஜிப்பேன் என வேண்டிக் கொண்டார். இதைத் தொடர்ந்து, ‘கொங்குதேர்’ எனத்துவங்கும் செய்யுள் கொண்ட ஓலையினை சிவபெருமான் தருமிக்கு வழங்கினார். தருமி இதனைப்பாடி பரிசுக்கு தேர்வான நிலையில், நக்கீரர் அதனைத் தடுத்து, பாட்டில் குற்றம் இருப்பதாகக் கூறினார். சிவபெருமானின் பாடலில் குற்றம் கண்டதைக் கூறி, சிவனிடமே தருமி வேண்ட, புலவர் வடிவத்தில் சங்க மண்டபம் வந்த சிவனிடம், பொருள் குற்றம் இருப்பதாக நக்கீரர் தெரிவித்து, வாதாடினார். சிவபெருமான் முடிவில் நெற்றிக் கண் திறக்க, வந்திருப்பது யார் எனத்தெரிந்தும், தன் வாதத்தை நக்கீரர் விடவில்லை. வெப்பம் தாளாத நக்கீரர் பொற்றாமரைக்குளத்தில் விழ, சிவபெருமான் மறைந்தார். நக்கீரரின் தமிழ்புலமையை உலகுக்கு உணர்த்திய சிவபெருமான், அவரை பொற்றாமரைக்குளத்தில் இருந்து உயிர்ப்பித்தும் கொடுத்தார். தருமிக்கே பொற்கிழியும் வழங்கப்பட்டது.  உலவாக் கோட்டை அருளியது (15-08-2021):  மதுரையில் தினம் சிவனடியார்களுக்கு உணவளித்த பிறகே உண்பதை, ‘அடியார்க்கு நல்லார்’ எனும் ஓர் அடியார் வழக்கமாக்கிக் கொண்டார். செல்வம் வற்றி, கடன் பெற்றும் வாங்கியாவது கடமை தொடர்ந்தார். முடிவில், இயலாத நிலையில் சிவனை தரிசித்து தன் மனைவியுடன் உயிர் நீத்திட முடிவெடுத்து கோயில் சென்றார். இதுகண்ட சிவபெருமான்  அசரீரியாக, ‘வீடு போ அங்கே உனக்கென அள்ளக் குறையாத நெல்மணிகளைக் கொண்ட உலவாக்கோட்டை இருக்கிறது’ என்றதும், அதன்படி இருவரும் வீடு திரும்பி, உலவாக்கோட்டை மூலம் கிடைத்த நெல்மணி களைக் கொண்டு தன் கடைசி காலம் வரையிலும் சிவனடியார்க்கு உணவளித்து வாழ்ந்தனர்.பாணனுக்கு அங்கம் வெட்டியது (16-08-2021): பாணன் என்ற வயது முதிர்ந்த வாள்வித்தை ஆசான் ஒருவர் குலோத்துங்க பாண்டிய மன்னன் காலத்தில் வாழ்ந்தார். இவரது சிஷ்யர்களில் ஒருவரான சித்தன் தீய குணங்களோடு இருந்தார். பயிற்சி முடித்த சித்தன், தான் தனியாக பள்ளி துவங்கி, ஆசானின் மாணவர்களை எல்லாம் அங்கே அழைத்துக் கொண்டார். ஆசானின் மனைவியிடமும் தவறாக நடக்க முயன்றதால், இதனை அப்பெண் சிவபெருமானிடம் முறையிட்டாள். ஆசிரியர் வேடம் தாங்கிச் சென்ற சிவபெருமான், சித்தனை அழைத்து, ஆசானின் மனைவியை நினைத்த நெஞ்சு, பேசிய நாக்கு, அப்பெண்ணைத் தொட்ட கைகள், கண்ட கண்கள் போன்றவற்றை காத்துக் கொள் என்றபடி, ஒவ்வொரு அங்கமாக வெட்டி இறுதியில் அவன் தலையையும் வெட்டிக் கொன்றார்.வளையல் விற்றது (17-08-2021): தங்கள் மனைவியரே கற்பில் சிறந்தவர்கள் என தாருகாவனத்து ரிஷிகள் செருக்குடன் இருந்தனர். இதனை அடக்க எண்ணிய சிவபெருமான் பிட்சாடனர் கோலத்தில் தாருகாவனத்திற்கு சென்றார். பிச்சையிட வந்த அத்தனை ரிஷி பத்தினிகளும் அவரது அழகில் மயங்கி ஆடைகள், அணிகலன்கள் நெகிழ்ந்திட நின்றனர். இதுகண்டு ஆத்திரமுற்ற ரிஷிகள் மதுரையில் சாதாரண வணிகர் குலத்தில் பிறக்கும்படி சபித்தனர். தங்கள் தவறுணர்ந்த பத்தினிகளுக்கு இறைவனே வந்து உங்கள் கைகளில் வளையல் சூடுவார், அப்போது சாபம் தீரும் என்றுரைத்தனர். அவ்வாறே மதுரையில் பிறந்து வளர்ந்திட்ட இப்பெண்களுக்கு, இறைவன் வளையல் வியாபாரியாக அத்தெருவில் வந்து, பெண்களின் கரங்கள் தொட்டு வளையல் அணிவித்திட, சாபம் தீர்ந்து அப்பெண்கள் சிவலோகம் சென்றனர்.சுவாமிக்கு பட்டாபிஷேகம் (17-08-2021): இதுதவிர, ஆவணி மூலத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ‘சுவாமி பட்டாபிஷேகம்’ இருக்கிறது. மதுரை மீனாட்சி கோயிலின் சித்திரைத் திருவிழாவின் 8ம்நாள் விழாவில் மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. இவ்விழாவில் திருக்கோயில்  நிர்வாகத் தலைமை அதிகாரி பாண்டிய மன்னனாகவும், தலைமைக் கணக்கர் பாண்டிய அமைச்சராகவும் வேடம் புனைந்து செங்கோளை மீனாட்சி அம்மனிடம் வழங்கும் சடங்கு நடக்கிறது. அந்த சித்திரை மாதம் துவங்கி வைகாசி, ஆனி, ஆடி ஆகிய 4மாதங்களுக்கு மீனாட்சி ஆட்சி நடைபெறுவதாக ஐதீக மரபு. இந்நிலையில், ஆவணி மூலத்திருவிழாவின் 7ம் நாளில், அம்மனிடமிருந்து சுவாமிக்கு ஆட்சி அதிகாரம் மாறும் வகையில் பட்டாபிஷேகம் நடத்தப்பட்டு, அதுவரையான அம்மன் ஆட்சி நிறைவுற, சுவாமியின் ஆட்சி அரங்கேறுவதாக ஐதீகம் இருக்கிறது.நரி பரியானது (18-08-2021):  சிவபெருமானின் திருவிளையாடல்களில் முக்கியமானது ‘நரி பரியான’ லீலையாகும். மன்னர் அரிமர்த்தன பாண்டியனிடம், ‘தென்னவன் பிரமராயன்’ பட்டத்துடன் மாணிக்க வாசகர் அமைச்சராக இருந்தார். தன் நாட்டுப் படைக்கு என குதிரைகள் வாங்கிட, பெரும் பொருளைக் கொடுத்து மாணிக்கவாசகரை மன்னரும் அனுப்பி வைத்தார். ‘திருப்பெருந்துறை’ அடைந்த மாணிக்கவாசகர், இறைவனைக் குருவாக்கி, அங்கேயே சிவாலய, சிவனடியார் திருப்பணிகளில் தன்னிடமிருந்த முழுப்பொருளையும் செலவிட்டார். அரசன் குதிரைகளுடன் வரும்படி அழைப்பு விட, செய்வதறியாத மாணிக்கவாசகர், இறைவனைத் தொழுதார். ஆவணி மூலத்தன்று குதிரைகள் வந்து சேரும் என்ற இறை அசரீரிப்படி, இதனையே மன்னரிடமும் தெரிவித்தார். ஆவணி மூலத் திருநாளில் குதிரைகள் வராமல் போக, மாணிக்கவாசகரை சிறையில் அடைத்து மன்னன் துன்புறுத்திட, இதனை மாணிக்கவாசகர் இறைவனிடம் முறையிட காட்டிலுள்ள நரிகள் எல்லாம் குதிரைகளாகி, சிவகணங்கள் குதிரைப் பாகர்களாகி, மதுரை வந்ததால், மன்னரும் மகிழ்ந்து மாணிக்கவாசகரைப் பாராட்டினார். ஆனாலோ அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரிகளாகி, காடு நோக்கி ஓடியதால், மாணிக்கவாசகரை கட்டி சுடுமணலில் மன்னன் கிடக்கச் செய்தார், அவரைக் காக்கும் வகையில், இறைவன் வைகையாற்றில் வெள்ளப் பெருக்கெடுக்கச் செய்தார்.  பிட்டுக்கு மண் சுமந்தது (19-08-2021): வைகையாற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தை அடைக்க வீட்டிற்கொருவர் வர வேண்டும் என்று அரசர் ஆணையிடுகிறார். ‘வந்தி’ எனும் பிட்டு விற்கும் மூதாட்டிக்கு உறவென யாரும் இல்லை. இறைவனே கூலி ஆளாக வடிவெடுத்து வந்து, மூதாட்டி தரும் பிட்டுக்காக மண் சுமக்க சம்மதித்தார். ஆனால், தன் பங்கிற்கு கரையை அடைக்காமல் பிட்டு உண்டு ஆடிப்பாடி ஆழ்ந்து உறங்கிப் போனார். பார்வையிட வந்த மன்னனோ, தன் கையிலிருந்த பிரம்பால் முதுகில் அடிக்க, அனைத்து உலக உயிர்கள் முதுகிலும் அந்த அடிபட்டது. இதன்பிறகே இறைத் திருவிளையாடலை அரசன் உணர்ந்தார்.  விறகு விற்றது (20-08-2021): ஏமநாதன் எனும் புலவர், வரகுண பாண்டியன் ஆட்சிக்காலத்தில் பாண்டிய நாடு வந்தார். யாழ் வாசிப்பில் திறன்மிக்க ஏமநாதன், மன்னர் முன்பு வாசிக்க, மன்னரும் பாராட்டினார். இதில் செருக்கடைந்த ஏமநாதன் சீடர்களுடன் சேர்ந்து, ‘என்னுடன் போட்டியிட யாராவது உண்டா?’ என ஆணவத்தில் சவால் விட்டார். யாரும் முன்வராத நிலையில், மன்னர் அங்கிருந்த தனது அரசவை ஆஸ்தான வித்வான் பாணபத்திரனை, ஏமநாதனுடன் போட்டியிட பணித்தார். ஏமநாதனை வெல்லும் வழியின்றி சிவபெருமானை பாணபத்திரர் வேண்டி நிற்க, முதியவர் கோலத்தில் ஒரு விறகு விற்பவராக சிவபெருமான் ஏமநாதன் வீடு சென்று, தான் கொண்டு வந்த யாழ் உடன், திண்ணையில் அமர்ந்து பாடினார். வெளியில் வந்த ஏமநாதன், நீ யார்? எனக்கேட்க, முதியவரோ, பாணபத்திரரால் ஒதுக்கப்பட்ட ஆள் என்றார். ஒதுக்கப்பட்ட ஆளுக்கே இவ்வளவு திறமை என்றால், பாணபத்திரரை வெல்ல முடியுமா? என அஞ்சிய ஏமநாதன் இரவோடு இரவாக ஊரைக் காலி செய்து சென்றுவிட்டார்.  படங்கள்: ஜி.டி.மணிகண்டன்…

The post மதுரை மீனாட்சி கோயில் ஆவணி பெருவிழா appeared first on Dinakaran.

Tags : Madurai Meenatshi Temple Naawani Peru Festival ,Madurai ,Move of Festivals' ,Temple ,of Madurai Meenathsiyamman ,Ikhoil ,Madurai Meenatshi Temple Nawani Festival ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி