×

வருத்தங்கள் போக்கும் வண்டார்குழலி!

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் வடாரண்யேஸ்வரர், அம்பிகை வண்டார்குழலி. இத்தலம் தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருவாலங்காடு எனும் ஊரில் அமைந்துள்ளது.இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். மேலும் நடராஜப்பெருமான் நித்தமும் நடமாடும் ஐம்பெரும் அம்பலங்களில் ரத்தின சபைகளில் இத்தலம் ஒன்றாகும். இறைவனால் அம்மையே என அழைக்கப்பெற்று சிறப்பிக்கப் பெற்ற காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து வந்து நடராஜரின் திருவடியை வந்தடைந்ததால், ஈசனின் ஆனந்த இன்ப வெள்ளத்தில் இத்திருக்கோயிலில் திளைத்திருப்பார். அதேபோல் அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காளி பீடம்.‘தலைவலி மருந்தீடு காமாலை சோகை சுரம்’ என்று துவங்கும் பழனி திருப்புகழ் பாடலில் ‘மாகாளி நாண முளம் அவைதனில் நடித்தோனை’ என்ற அடிகளில் திருவாலங்காட்டில் சிவபெருமான் ஆடிய போட்டி நடனத்தில் காளியை தோற்கடித்த வரலாற்றை அருணகிரிநாதர் தெரிவிக்கிறார். இத்தலம் காரைக்கால் அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகம் பெற்றது. தாமரை மலர் விரித்தாற் போல் அமைந்து அதன் மேல் அமைந்துள்ள ‘கமலத்தேர்’ இங்கு தனி சிறப்பு.காரைக்கால் அம்மையாருக்கு நடராஜ பெருமான் காட்சி தந்த தலம் திருவாலங்காடு. இத்தலத்தில் இறைவனின் காலடியில் இன்றும் காரைக்கால் அம்மையார் வாழ்கிறார். திருவாலங்காட்டில் உள்ள நடராஜ தாண்டவம் ஊர்த்துவ தாண்டவம் என்று சொல்லப்படும். வலது காலை உடம்புடன் ஒட்டி உச்சங்கால் வரை தூக்கி நிற்பது தான் ஊர்த்துவ தாண்டவம். ஆனால் இத்தலத்தில் நடராஜர் மற்ற ஊர்த்துவ தாண்டவங்களைப் போல் தனது பாதத்தை செங்குத்தாக உடலை ஒட்டி தூக்கி நின்று ஆடாமல் உடலின் முன்பக்கத்தில் முகத்திற்கு நேராக பாதத்தை தூக்கியிருக்கிறார். எட்டு கைகளுடன் சுமார் நான்கு அடி உயரமுள்ள இந்த திருஉருவத்தைக் காண நம் மெய் சிலிர்க்கும். யாருக்கும் அடங்காத காளி வெட்கித் தலை குனிய வைத்த நடனமான இந்த ஊர்த்துவ தாண்டவ நடனத்தை பார்த்துப் பரவசமடைய வேண்டியதாகும். ஒருமுறை காளிக்கும்,சிவனுக்கும் நடனப் போட்டி நடந்தது. சிவபெருமானை விட நன்றாக நடனமாடி வந்த காளி கடைசியில் சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும் காலை மேலே நேராகத் தூக்கியவுடன் காளியான சக்தி வெட்கித் தலைகுனிந்து தோற்றுப் போனாள் என்று புராணத்தில் இடம் பெற்றுள்ளது. நடராஜர் சந்நதிக்கு எதிரே காளியின் சந்நதி மற்றும் பல விக்கிரகங்கள் இருக்கின்றன. வடாரண்யேஸ்வரரை ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் தரிசனம் செய்தால் எல்லா வகையான இன்பங்களும் கிடைக்கும் என்கிறது தல புராணம்.பிராகாரத்தில் வலமாக வரும்போது ஆருத்ரா அபிஷேக மண்டபம், ரத்தினசபை வாயில் உள்ளது. சபைக்கு எதிரில் நிலைக்கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது. தெற்கு நோக்கி இருக்கும் அம்பாள் சந்நதியில் அம்பிகை நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள். சந்நதியிலுள்ள சிற்பங்கள் அனைத்தும் கலையழகு வாய்ந்த கல்தூண்களில் காணலாம். ரத்தின சபையில் நடராஜப் பெருமானின் ஊர்த்துவ தாண்டவ உற்சவத் திருமேனி தரிசிக்கத்தக்கது. சிவகாமி, காரைக்காலம்மையார் திருமேனிகள் அருகிலுள்ளன. ரத்தின சபையில் பெரிய ஸ்படிகலிங்கமும், சிறிய மரகதலிங்கமும் உள்ளன. இவற்றிற்கு நான்கு கால அபிஷேகம் நடைபெறுகிறது. ரத்தின சபையை வலம் வரும்போது சாளரத்தில் சண்டேஸ்வரரின் உருவம் உள்ளது. ரத்தினச் சபையின் விமானம் செப்புத் தகடு வேயப்பட்டு ஐந்து கலசங்களுடன் விளங்குகிறது.திருவாலங்காட்டுச் செப்பேடுகள் தமிழகத்தின் சரித்திரத்தின் முக்கியமான பகுதியை வெளிப்படுத்திய செப்பேடுகள் திருவாலங்காட்டில் கிடைத்தன. ஒரு பெரிய வளையத்தில் சேர்த்து சோழ முத்திரையுடன் தமிழிலும், வடமொழியிலும் பொறிக்கப்பட்ட சாசனங்களுடன் கிடைத்த அந்த 22 செப்பேடுகள் சோழ வம்ச சரித்திரத்தை நன்கு புலப்படச் செய்தன. இவை இன்று சென்னை அரும்பொருள் காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.சென்னை – அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது. ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ வசதிகள் உண்டு. திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்லும் பேருந்தில் சென்று திருவாலங்காடு நிறுத்தத்தில் இறங்கினால் கோவில் மிக அருகிலேயே இருக்கிறது. திருவள்ளூரில் இருந்து 18 கி.மீ. தொலைவிலும், அரக்கோணத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவிலும் திருவாலங்காடு தலம் உள்ளது.சீனு…

The post வருத்தங்கள் போக்கும் வண்டார்குழலி! appeared first on Dinakaran.

Tags : Thiruvalangadu Varanayeswarar Temple ,Thirunavukkrasar ,Chambander ,Sunderar ,Varanayeshwarar ,Ambikai ,
× RELATED ஆடி அமாவாசையில் அப்பர் கண்ட கயிலை