×

எதற்காக ஜாதகம் பார்க்க வேண்டும்? எப்பொழுது பார்க்க வேண்டும்?

இதம் சொல்லும் ஜோதிட அனுபவங்கள் – 6நல்வாக்கு நாயகர் ஜோதிடர் எஸ். கோகுலாச்சாரிஇதம் தரும் ஜோதிடம் என்கின்ற இந்தத் தொடர், நடந்து போன சில சம்பவங்களை, ஜோதிட விதிகளோடு பொருத்திப் பார்த்து ஆராய்கின்ற ஒரு தொடர். ஜாதகம் என்பது ஒருவர் வாழ்வியலோடு எப்படிப் பின்னிப் பிணைந்திருக்கிறது. அதன்மூலம் இந்த மனிதகுலம் எந்த எல்லைவரை நன்மையைப் பெற முடியும் என்பதைக் குறித்த சிந்தனையையும், விழிப்புணர்வையும்  தருவதேஇந்தத்  தொடரின் நோக்கம்.இதற்காக பல ஜாதகங்கள் வெவ்வேறு கோணங்களில் ஆராயப்பட்டு, இப்படிப்பட்ட விளைவுகளை ஜாதகங்கள்  காட்டுகின்ற பொழுது, அது நேர்மறையாக இருந்தால், அதனை எப்படித் தக்க வைத்துக் கொள்வது, எதிர்மறையாக இருந்தால், அதில் இருந்து எப்படித்  தப்பிப்பது, அதற்கு ஏதேனும் வழிகள் இருக்கிறதா, எப்படி நடந்து கொள்ள வேண்டும், என்பதைப் பற்றிய  சிந்தனைக்காகத்தான்   விரிவாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஜோதிடம் என்பது “ஜோதி” என்கின்ற சொல்லின் பொருளாகக் கொள்ளலாம். வெளிச்சத்தைக் காட்டுவது ஜோதிடம்.ஒரு இருட்டு அறையில் அமர்ந்திருக் கிறோம். எங்கே எந்த பொருள் இருக்கிறது என்று தெரியவில்லை. நம்முடைய அனுமானத்தில் சிலவற்றைத் தடவித்தடவி, இங்கே இந்த பொருள் இருக்கிறது, மேடு, தரை இருக்கிறது, இங்கே ஏதோ தட்டுப்படுகிறது என்றெல்லாம் அனுமானம் செய்து விடலாம்.அதுவே பழகிவிட்டால் மிக எளிதாகக்  கூட போய்விடும். ஆனால், அந்த இருட்டு அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து விட்டால், அது நமக்கு இன்னும் சௌகரியமாக இருக்கும். இப்பொழுது  நம்மைச்சுற்றி என்ன இருக்கிறது? நாம் எங்கு இருக்கிறோம்? நம்முடைய நிலை என்ன? நம்முடைய முன்னும் பின்னும் என்ன இருக்கிறது? நாம் வந்தவழி, எந்த வழி? எந்த வழியில் செல்ல முடியும்? என்பதையெல்லாம் மிக எளிதாகத் தீர்மானம்  செய்துகொள்ள முடியும்.அந்த வெளிச்சத்தின் மூலம் நாம் நம்முடைய நிலையை, கொஞ்சம் சௌகரியமாகத்  தெரிந்து கொள்ள முடியுமே தவிர, அதற்குப் பிறகு அதுவே, நம்மைத் தூக்கி வெளியில் கொண்டு போய் விடாது. அங்கேதான் நம்முடைய சுதந்திரமான அறிவுக்கு வேலை தொடங்குகிறது. இந்த இடத்திலே நீங்கள் ஜோதிடத்தை விட்டு வெளியே வந்து விட வேண்டும். உங்களுடைய முழுமையான அறிவாற்றலை அந்த சூழலுக்குத் தகுந்த மாதிரி நீங்கள் பயன்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டியது ஜாதகமோ,  ஜோதிடரோ அல்ல, நீங்கள்தான். 12 கட்டங்கள், ஒன்பது கோள்கள், 27 நட்சத்திரங்கள். கோடான கோடி பேர்களின் ஜாதகங்களை மட்டுமல்ல, இந்தப்  பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரும், இந்த இணைப்புகளின் மூலம் வெவ்வேறு நிலைகள் மூலம் பலன்களை  அடைகின்றன. இங்கே இன்னும் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இன்று என்ன நடக்கும், நாளை என்ன நடக்கும் என்பதை, நொடிக்கு நொடி தெரிந்து கொள்ள ஜோதிடத்தை நாடவேண்டிய அவசியமில்லை. அது தேவையற்றது. ஒரு காலத்தில் அடிக்கடி ஜாதகம் பார்க்கும் பழக்கம் மக்களுக்கு இல்லை. காரணம், மக்கள் வாழ்வு மன்னரைச் சார்ந்தது. எனவே மன்னனின் ஜாதகம் மக்களின் வாழ்வையும், நாட்டின் வாழ்வையும் சுட்டிக் காட்டுவதாக இருப்பதால், மன்னர்கள் தங்கள் அரசவையில் ஜோதிடர்களை நியமித்திருந்தார்கள், “நாட்டில் எப்பொழுது பஞ்சம் வரும்? எப்போதும் மழை பொய்க்கும்? என்று கோள்  நிலை பார்த்து  தெரிந்து கொண்டு   எச்சரிக்கை செய்தார்கள். காலம் சரியாக இல்லாவிட்டால், எதிரிகளால் நாடு  அபாயத்தை எதிர்கொள்ளும்  கிரக நிலைகளை அறிந்து படைகளை எல்லைகளில் வலுப்படுத்தச்  சொன்னார்கள். ஆனால், கிரக நிலைகள் சொல்வது நடைமுறையில் இருக்கிறதா என்பதை, தங்களுடைய ஒற்றர்கள் மூலமாக அரசர்கள் தெரிந்து கொண்டார்கள்.  இங்கே சாஸ்திரமும் கள நிலவரமும் இணைந்து வேலை செய்து பிரச்சனைகளுக்குத்  தீர்வு கண்டது. அதனால்தான் வேதக் கல்வியின் ஒரு அங்கமாக ஜோதிட சாஸ்திரத்தை வைத்தார்கள். இன்னும் ஒருபடி மேலே போய், பிரம்மத்தையும், தெய்வீகத்தன்மையையும், அறிவதற்காகவும்  அதன் மூலமாக நம்முடைய வாழ்வின் நோக்கத்தைப்  புரிந்துகொண்டு கடமைகளைச் செய்வதற்காகவும் ஜோதிடத்தைப்  பின்பற்றினார்கள்.ஜாதகங்களில் மூன்று முக்கிய விஷயங்கள் உண்டு.1.  ஒருவனுக்கு வாழ்க்கை   அமைப்பும், சூழலும், எப்படி  நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டும் அவனுடைய பிறப்பு ஜாதக கட்டங்கள்,  அதில் நிற்கின்ற கிரக நிலைகள். 2.  எப்போது நடக்கலாம் என்பதை தீர்மானிக்கின்ற காலகட்டம். (இதற்கு தசாபுத்தி அந்தரம் என்று ஜோதிட வல்லுநர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.)3.  துல்லியமாக எப்போது நடக்கும் என்பதை தீர்மானிக்கிற கோள்சார  நிலைகள்.இந்த மூன்றும் இணையக் கூடிய சூழல் இல்லை என்று சொன்னால் , ஜாதக கட்டத்தில் உள்ள பல விஷயங்கள், அது நன்மையாக இருந்தாலும் தீமையாக இருந்தாலும் நடக்காமல் போய்விடும்.  உதாரணமாக ஒருவருக்கு இரண்டில் ராகு தீமையான நிலையிலேயே இருக்கிறது. இரண்டில் இருப்பதால் குடும்பம் பாதிக்கும் என்பது  பொதுவிதி. ஆனால் அதனை உறுதிப்படுத்துகின்ற தசா புத்தி அந்தரங்களும்  கோள் சாரங்களும், அவருடைய வாழ்நாளில் வராமல் போய் விட்டால்  அந்த பலன்  நடக்காமல் கூட போய்விடும்.ஜாதக கட்டங்கள் சாதாரணமானவையல்ல. அதில் உள்ள விஷயங்கள் ஒரு மனித உயிரின் பயண விபரங்களை பதிவு செய்து வைத்திருக்கும் ரகசிய ஆவணம். ஒருவருக்கு எப்படி எல்லாம் இந்த ஜாதக அமைப்பில் கொடுக்கப் பட்டிருக்கிறது என்பதை ஆராய்ந்தால் வியப்பாக  இருக்கும். அதில் போன ஜென்மம் ஆரம்பித்து அடுத்த ஜென்மம் வரை அத்தனைவிஷயங்களும் உண்டு. ஒருவனுடைய லக்கினத்தின் பன்னிரண்டாவது ராசி அவன் வாழ்வின் நிறைவைக் காட்டும். அதேநேரம் அது அடுத்த வாழ்வின் துவக்கத்தையும் அல்லது பிறவா நிலையையும்  காட்டும் சூட்சுமத்தைக் கொண்டிருக்கிறது.  லக்னத்தின் ஐந்தாவது ராசி ஒருவனுடைய ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ராசி.  அதற்கு ஐந்தாம் இடமான ஒன்பதாம் ராசி பாக்கிய ஸ்தானம். அதன் பூர்த்தியைக் காட்டுவது ஐந்தாம் ராசியின்  அஷ்டம ராசியான 12வது ராசி. பூர்வ புண்ணியத்தில், எதிர்வினை எப்படி இருக்கிறது என்பதை இலக்கின சூட்சுமம் காட்டும். பூர்வ புண்ணியம் இந்தப் பிறப்பிலிருந்து பெற்ற வினைத்தொகுப்பை சேர்த்து அடுத்த பிறப்பின் விதியைத்   தீர்மானிக்கிறது. அது தான் நாம் வாழும் தர்ம வாழ்க்கையில் இருக்கிறது. எத்தனை பழ வினை இருப்பினும், போர்க்களத்தில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவன் வீர ஸ்வர்கம் அடைகிறான் என்று சாத்திரம் கூறுவதைக் கவனித்தால் இதன் சூட்சுமம் புரியும். காரணம் 5-ஆம் இடத்துக்கு திரிகோணம் 1-ஆம் இடம்.பகவத் கீதையிலே ஒரு அற்புதமான ஸ்லோகம் உண்டு. அனன்யாஸ் சிந்தயந்தோமாம் யே ஜனா: பர்யுபாஸதே தேஷாம் நித்யாபி யுக்தானாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம். “என்னைத் தவிர வேறு எதனையும் எண்ணாமல், என்னிலே உறைந்து, என்னையே சார்ந்து வாழ்கிறவனுக்குத் தேவைப்படுகிற யோக ஷேமங்களை  நான் அளித்து விடுகிறேன். (கீதை 9-22) யோக ஷேமங்களை என்ற  இந்த வார்த்தையின் சூட்சுமத்தை அறிந்து கொண்டால், அத்தனை விபரங்களும் புரிந்து போகும். இதை ஜோதிட சாஸ்திரத்தில் பூர்வபுண்ணியம், பாக்கியம் என்று கொள்ளலாம்.  இந்த திரிகோண நிலைகளை லட்சுமி ஸ்தானம் என்று சொல்லுவார்கள்.  இவைகள் ஒரு ஜாதகத்தில் பலம் பெற்றுவிட்டால் அவனைப்போல அதிர்ஷ்டசாலி யாரும் இருக்க முடியாது. ஆனால் பலருக்கு இந்த அமைப்பு இருக்காது. பாக்கியம்  இருக்கும்வீட்டில் நான்கு கார்கள் இருக்கும். அறுசுவை விருந்து படைப்பதற்கு ஏராளமான சமையல்காரர்கள் இருப்பார்கள். ஆனால், இவர் நோயாளியாக இன்சுலின் போட்டுக் கொண்டு, உப்பில்லா கஞ்சி குடித்துக் கொண்டு, தன்னுடைய காரை பின்னால் வரச்சொல்லி, தினம் 4 கிலோ மீட்டர் நடப்பார். இங்கே யோகம் உண்டு. ஆனால் அதை அனுபவிக்கக்கூடிய ஷேமம்  இல்லை. சிலர்  வசதி இல்லாதவர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் மேலே சொன்னவரிடத்தில் வேலை பார்ப்பார்கள். முதலாளி நடந்துவர, இவர்கள் குளிர்சாதன காரில் வருவார்கள். மதியம் அவர் கஞ்சி குடிக்க, இவர்கள் நல்ல உணவு உட்கொள்வார்கள். யோகம் க்ஷேமம் இணைய வேண்டும் என்று சொன்னால், பகவான் அருள் வேண்டும். அதனால் தான் “என்னை நினை. நான் யோகம் ,க்ஷேமம் இரண்டையும் பார்த்துக்  கொள்கிறேன்” என்றார். இன்னும் ஒரு கேள்வி இருக்கிறது. நடப்பதுதான் நடக்கிறது. இதற்கு எதற்கு ஜோதிடம் பார்த்து குழப்பிக் கொள்வது என்ற கேள்வி வரும். வரவேண்டும். மூன்று   வகையினர் ஜோதிடம் பார்க்க வேண்டிய தேவையில்லை1. ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள், அதை சாத்திரமாகக்  கருதாதவர்கள். 2. எப்பொழுதும் விழிப்புணர்வோடு இருப்பவர்கள். ஜாக்கிரதையாக இருக்கும் இயல்பைப்  கொண்டவனுக்கு “ஜாக்கிரதையாக இரு” என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.3. எல்லாவற்றையும் இறைவனிடம் ஒப்படைத்து பல தியாகம் செய்துவிட்டு, “நாள் என் செயும்? வினைதான் என்செயும்? எனை நாடி வந்த கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்?” என்று தன்னுடைய கடமையைச் செய்பவர்கள்.ஜோதிடத்தை முறையாகப் புரிந்து கொண்டால்தான், அது ஒரு நலமான வழிகாட்டிச் சாதனமாக இருக்கும். இப்பொழுது அன்பர்களுக்காக ஒரு ஜோதிட கட்டத்தைத்  தந்திருக்கிறேன். இந்த ஜாதகத்தை வைத்துக் கொண்டு பதினோரு வருடங்களுக்கு முன்னால் ஒரு உறவினர், மிகவும் நெருங்கியவர், பரபரப்போடு வந்தார். ஒரு ஜோதிடரிடம் இந்த ஜாதகத்தைக் காட்டியதாகவும், அவர் சொன்ன பலன்கள் குறித்தும் என்னிடம் கேட்டு, மேற்கொண்டு என்ன செய்யலாம் என்றார். மேலே ஜாதகத்தைப்  பாருங்கள். என்ன காரணத்தால் பரபரப்போடு அவர் வந்திருக்கக்கூடும் என்பதை யோசனை செய்யுங்கள். என்ன அப்படி ஜோதிடர் சொல்லியிருப்பார் என்று சிந்தியுங்கள். அடுத்த பதிவில் சந்திக்கிறேன். (இதம் சொல்வோம்)

The post எதற்காக ஜாதகம் பார்க்க வேண்டும்? எப்பொழுது பார்க்க வேண்டும்? appeared first on Dinakaran.

Tags : Nayak ,Gokulachari ,
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...