×

சேலத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சி; ஆடு, கோழிகளை கடித்தவாறு பக்தர்கள் ஆக்ரோஷ ஊர்வலம்: முன்னோர் சமாதியில் படையலிட்டு வழிபாடு

சேலம்: மாசி அமாவாசையையொட்டி, சேலம் மாநகரத்தில் இன்று மயானக்கொள்ளை நிகழ்ச்சியில், அம்மன் வேடம் அணிந்த பக்தர்கள் ஆடு, கோழியை வாயில் கடித்தப்படி ஆக்ரோஷமாக வந்த காட்சி பக்தர்களை பரவசப்படுத்தியது. சேலத்தில் மாசி அமாவாசையில் நடைபெறும் மயானக்கொள்ளை நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. ஒவ்வொரு பகுதியிலும் உள்ள காளியம்மன், பெரியாண்டிச்சியம்மன் கோயில்களில் இருந்து ஊர்வலமாக மயானங்களுக்கு வரும் பக்தர்கள், அங்கு சிறப்பு பூஜை செய்து வழிபடுவர். அப்போது மருளாடி வரும் நபர், பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கும் ஆடு, கோழிகளை கடித்து ரத்தத்தை குடித்தவாறு ஊர்வலமாக வந்து, மயானத்தில் பூஜை செய்து வழக்கம். இதையொட்டி நேற்று குறக்கூடை எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. சேலம் கிச்சிப் பாளையம், நாராயணா நகர், செவ்வாய்பேட்டை ஆகிய பகுதிகளில் பம்பை மேளத்துடன் கடவுள் வேடமணிந்து புறப்பட்ட பக்தர்கள், ஒவ்வொரு வீதியாக சென்று யாசகம் பெற்றனர். சேலம் மாநகரத்தில் பக்தர்கள் அம்மன் வேடமிட்டு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக தேர்மண்டி தெருவில் உள்ள அங்காளம்மன் கோயிலுக்கு வந்தனர். அங்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இதேபோல் செவ்வாய்பேட்டை நெய்விளக்கு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் இன்று காலை சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் இருந்து நெய்விளக்கு அங்காள பரமேஸ்வரி அம்மனுடைய சக்தி பூங்கரகம் செவ்வாய்பேட்டை பஜார், அப்புச்செட்டி தெரு, மீனாட்சியம்மன் கோயில் தெரு வழியாக ஊர்வலமாக வந்தது. மதியம் அங்காள பரமேஸ்வரி வேடம் அணிந்தவர் வள்ளாள மகாராஜன் கோட்டையை இடித்து அவர் மனைவி குடலை பிடுங்கி அடைந்து மயான சூறையாடல் பூஜை நடந்தது. இதேபோல் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அங்காள அம்மன் வேட மணிந்து காக்காயன் சுடுகாட்டிற்கு ஊர்வலமாக வந்தனர். வரும் வழியில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த வேண்டி ஆடு, கோழிகளை கொண்டு வந்தனர்.அம்மன் வேடம் அணிந்த பக்தர்கள் அதனை ஆவேசமாக பிடுங்கி குரல் வளையில் கடித்து ரத்தம் குடித்தனர். தலை துண்டிக்கப்பட்ட ஆடு, கோழிகளை பக்தர்களிடம் வழங்கினர். வேடமிட்டு ஆவேசமாக வருபவர்கள் முன்னிலையில் பக்தர்கள் தரையில் படுத்தனர். அவர்கள் மீது ஆக்ரோஷமாக சத்தமிட்டபடி ஏறி மிதித்துச் சென்றனர். இவ்வாறு செய்வதால் அவர்கள் குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள், சண்டைகள் மறையும் எனவும், நீண்டநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமண தோஷம் நீங்கும், பேய், பிசாசு பிடித்தவர்கள் குணம் அடைவார்கள் என்று நம்புகின்றனர். முன்னதாக காக்காயன் சுடுகாட்டிற்கு  திரளானோர் வந்து சமாதிகளை சுத்தப்படுத்தி வெள்ளை அடித்து தூய்மை செய்தனர். பின்னர் இறந்தவர்களின் நினைவாக சுடுகாட்டில் அவர்களுக்கு பிடித்த சாப்பாடு, கறி, மீன், கருவாடு, அவரைகொட்டை, கீரை உள்ளிட்டவைகளை சமாதி முன் படையலிட்டு வழிபட்டனர். இதேபோல் சேலம் பள்ளப்பட்டி, செவ்வாய்பேட்டை, அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி,  ஜாகீர் அம்மாபாளையம் உள்ளிட்ட இடங்களிலும், மாவட்ட பகுதியில் வீரகனூர், ஆத்தூர், ஓமலூர், வாழப்பாடி வேப்பிலைப்பட்டி, சிங்கிபுரம் உள்பட பல்வேறு இடங்களிலும் மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இவ்விழாவையொட்டி நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்….

The post சேலத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சி; ஆடு, கோழிகளை கடித்தவாறு பக்தர்கள் ஆக்ரோஷ ஊர்வலம்: முன்னோர் சமாதியில் படையலிட்டு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Amman ,Mayanakkulai show ,Salem ,
× RELATED அரிமளம் அருகே நெடுங்குடி பெரியநாயகி அம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்