×

இழந்த செல்வங்களை மீட்டுத்தருவார் பீமேஸ்வரர் : ஓமந்தூர்

பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த காலம் அது. 14 வருட வனவாசத்தில் 13 வருடங்கள் காட்டிலும், ஒரு வருடம் அஞ்ஞான வாசம், அதாவது யார் கண்ணிலும் படாமல் வாழ வேண்டும் என்பது கட்டளை.  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அப்போது பெரும் காடு. இங்குள்ள முன்னூர் காட்டுப்பகுதியில்தான் பஞ்சபாண்டவர்கள் தங்கியிருந்ததாக ஐதீகம். ஒருநாள் அனைவருக்கும் கடும்பசி. அப்போது தர்மர் பீமனை அனுப்பி உணவு கொண்டுவா என்று கூறினார். உடனே அவரும் உணவு தேடினான். ஆனால் எங்குமே உணவு கிடைக்கவில்லை. கடைசியில் பசி மயக்கத்தில் ஓமந்தூரில் உள்ள சிவன் கோயிலில் வந்து சிவபெருமானையும், பார்வதி தேவியையும் வேண்டி ரொம்பவும் பசிக்குது. உணவு தாருங்கள் என்று கேட்டான். சிவபெருமான் கேட்டுக்கொண்டதால் பார்வதிதேவி பீமனுக்கு பாலூட்டி பசியாற்றினார். சிறிது நேரத்தில் பீமன் அசந்து தூங்கி விட்டான்.சற்று நேரத்தில் சிவபெருமான் பீமனை எழுப்பி கோயிலுக்கு வந்து விட்டாய், எங்களுக்கு பூஜை செய் என்று கூறினார். அதற்கு பீமன், நான் சத்திரியன், நான் எப்படி உங்களுக்கு பூஜை செய்வது? என்றுகேட்க, அதற்கு சிவபெருமான் நான் சொல்கிறேன், நீ பூஜை செய் என்று மறுபடியும் கட்டளையிட பீமனும் மனமுவந்து சிவபெருமானையும், பார்வதி தேவியையும் பூஜை செய்து வணங்கினான். அதனால்தான் இங்குள்ள சிவன் பீமேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். பீமனுக்கு பாலூட்டியதால் சீராம்பிகை (பாலாம்பிகை) என்று பார்வதி அழைக்கப்படுகிறார். ஓம் என்பது அயன், ஹரி,ஹரன் ஆகியோரை உள்ளடக்கிய பிரணவ மந்திரம். அந்தூர் என்ற சொல்லுக்கு பாத கிண்கிணி என்று பொருள். பண்டைக்காலத்தில் இந்த ஓமந்தூர் கிடங்கல் எனும் பகுதியை தலைநகராக கொண்டு ஆட்சிபுரிந்த நல்லியக்கோடனின் ஒய்மா நாட்டின் ஒரு பகுதியாக இந்த ஓமந்தூர் இருந்துள்ளது என்பது சிறுபாணாற்றுப்படை என்ற புறந்தமிழ் இலக்கியத்தின் மூலம் தெரியவருகிறது.ராஜராஜசோழனின் 11வது ஆட்சியாண்டு (985-1014) கல்வெட்டு இத்தலத்தை ஒவ்வூர் என்றும், முதலாம் ராஜநாராயண சம்புவராயர் (1337-1368) கல்வெட்டு ஒய்மா நாட்டு ஓகந்தூர் என்றும் குறிப்பிடுகிறது. அது மருவி தற்போது ஓமந்தூராக விளங்கி வருகிறது. குறிப்பிட்ட சில சிவன் கோயில்களைப்போல இங்கும் சிவபெருமான் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கோயிலின் கருவறை, இடைக்கட்டு அர்த்த மண்டபம், மகா மண்டபம், முன் மண்டபம் ஆகியவை எழில்மிகு தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. விஜயநகர பேரரசர்களும், சம்புவராய மன்னர்களும் இந்த கோயில் திருப்பணியை செய்து வழிபட்டுள்ளனர். சதுரமான கருவறையில் 5 அடி உயர லிங்க வடிவில் பீமேஸ்வரர் அருள்பாலிக்கிறார். பீமேஸ்வரருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் கோள்சார நிலைகளால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை.தாமரை மலர்களின் மேல் நர்த்தனமாடும் விநாயக பெருமானும், கல்லால மரத்தின் மீது அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு ஞானஉபதேசம் வழங்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி, கிழக்கே சங்கு சக்கரம் ஏந்தி நிற்கும் திருமால், வடக்கே நான்முகன் பிரம்மன், திரிபங்க நிலையில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் துர்க்கை போன்ற கடவுளர்கள் உள்ளனர். கருவறையின் வெளியே வலதுபுறம் பைரவமூர்த்தி, ராஜேஸ்வரி, இடதுபுறம் சூரியபகவான் ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள். சின்முத்திரையுடன் காணப்படும் தட்சிணாமூர்த்தி தரிசனம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. நினைவாற்றல் திறன் குறைந்த மாணவர்கள் வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.  இங்கு பிரதோஷம் மிகவும் சிறப்பாக நடைபெறும். பிரதோஷ வேளையில் இறைவனை மனமுருக வேண்டினால் சகல செல்வங்களும் வந்து சேரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. பஞ்சபாண்டவர்கள் இங்கு வந்து சிவபெருமானை வழிபட்ட பின்னர்தான் இழந்த ராஜ்யத்தை போரிட்டு மீட்டனர். அதனால் பீமேஸ்வரரை வழிபட்டால் இழந்த சொத்துக்கள், செல்வங்கள் நம்மை மீண்டும் தேடிவரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பீமேஸ்வரரை வழிபட்டால் திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சென்னை மாகாண முதல்வராக இருந்தபோது 1954ம் ஆண்டு இக்கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் திருப்பணி நடைபெற்று சில ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது….

The post இழந்த செல்வங்களை மீட்டுத்தருவார் பீமேஸ்வரர் : ஓமந்தூர் appeared first on Dinakaran.

Tags : Bhimeswarar ,Omantur ,Pancha ,Pandavas ,Agnostic ,
× RELATED சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில்...