×

ஆமுக்த மால்யத

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐந்து நூல்களையும் தமிழின் ஐம்பெருங்காப்பியங்கள் என்று சொல்கிறோம். ரகுவம்சம், குமாரசம்பவம், நைஷதம், சிசுபாலவதம், கிராதார்ஜுனீயம் ஆகிய ஐந்தும் வடமொழியின் ஐம்பெருங்காப்பியங்கள் ஆகும். அதுபோல், தெலுங்கு மொழியில் ஐம்பெருங்காப்பியங்கள் உள்ளன – ஆமுக்த மால்யத, மனு சரித்திரம், வசு சரித்திரம், பாரிஜாத அபகரணம், சிருங்கார நைஷதம் ஆகியவையே அந்த ஐந்து காப்பியங்கள்.அவற்றுள் ஆமுக்த மால்யத என்னும் காப்பியத்தை விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் அரசரான ஸ்ரீகிருஷ்ணதேவ ராயர் இயற்றினார். ஆமுக்த மால்யத என்றால் மாலையைச் சூடிக் கொடுத்தவள் என்று பொருள். இது பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் நாச்சியாரின் வரலாற்றை விரிவாக எடுத்துக் கூறும் நூலாகும். ஏழு அத்தியாயங்கள் உள்ள இந்நூலின் முதல் நான்கு அத்தியாயங்களில் பெரியாழ்வாரின் வரலாறும், அடுத்த மூன்று அத்தியாயங்களில் ஆண்டாளின் வரலாறும் சொல்லப்பட்டுள்ளது. விஷ்ணுசித்தர் எனப்படும் பெரியாழ்வாரின் வரலாறும் இந்நூலில் விரிவாக இடம்பெறுவதால், விஷ்ணுசித்தீயம் என்ற பெயரும் இந்நூலுக்கு உண்டு.கிருஷ்ண தேவராயர் ஒருமுறை கலிங்க தேசத்தை வெற்றி கொள்ள நினைத்தார். அதற்காகப் படைதிரட்டிக் கொண்டு போருக்குச் சென்றார். வழியில் விஜயவாடாவில் சில நாட்கள் முகாம் இட்டுத் தங்கி இருந்த அவர், அவ்விடத்துக்கு அருகில் உள்ள ஸ்ரீகாகுளத்தில் கோவில் கொண்டிருக்கும் ஆந்திரத் திருமால் கோவிலுக்கு ஒருநாள் சென்றார். அந்நாள் ஓர் ஏகாதசி நாள்.எனவே ஏகாதசி விரதம் இருந்து திருமாலைத் தரிசித்தார் கிருஷ்ண தேவராயர்.அன்று இரவு கிருஷ்ணதேவராயருக்கு ஒரு கனவு வந்தது. ஆந்திரத் திருமால் கார்மேக வண்ணத்தோடு, தாமரை போன்ற திருக்கண்களோடு, மஞ்சள் பட்டாடை அணிந்த வண்ணம் கிருஷ்ண தேவராயருக்குக் கனவில் காட்சி தந்தார். கிருஷ்ண தேவராயரைப் பார்த்து, கிருஷ்ண தேவராயா நீ இதுவரை பல நூல்கள் எழுதி இருக்கிறாய். உவமை, உருவக அணிகள் சிறக்க நீ எழுதிய நூல்கள் எல்லாமே வடமொழியில் உள்ளன. உனது மதாசல சரித்ரம், சத்யபாமா சரித்ரம், ஞானசிந்தாமணி, ரசமஞ்சரி ஆகிய அனைத்து வடமொழி நூல்களும் மிகசிறப்பானவை. உனது வடமொழிப் புலமையை நிருபித்த நீ, தெலுங்கு மொழியில் உனக்கு இருக்கும் புலமையை மெய்ப்பிக்க வேண்டாமா உனக்கு இது அரிய செயல் அன்று என்று கூறினார். எதைப் பற்றி நான் காப்பியம் படைக்க வேண்டும் என்று கிருஷ்ணதேவராயர் கேட்க, ஓர் இளம்பெண் என் மீது காதல் கொண்டு, தான் சூடிக்  களைந்த மாலையை எனக்கு அர்ப்பணித்தாள். நாங்கள் விரும்பியவாறே இருவரும் மணம்புரிந்து கொண்டோம். எனக்கும் ஆண்டாளுக்கும் நடந்த அந்தத் திருக்கல்யாணத்தையே ஒரு காப்பியமாக எழுது. அதையும் சுந்தரத் தெலுங்கிலே எழுது என்று கட்டளையிட்டார் திருமால்.திருமாலின் ஆணையை ஏற்று, தனது இஷ்டதெய்வமான திருமலையப்பனுக்கு அர்ப்பணித்து ஆமுக்த மால்யத என்ற தெலுங்குக் காப்பியத்தை இயற்ற முடிவெடுத்தார் கிருஷ்ண தேவராயர்.மறுநாள் காலை உறக்கத்திலிருந்து விழித்த கிருஷ்ண தேவராயர், சேனாபதியை அழைத்து, படையெடுப்பு இப்போது இல்லை நீங்கள் எல்லோரும் வீட்டுக்குப் போகலாம் என்று சொல்லி விட்டார். பின், பலதுறை அறிஞர்களையும், வேத ஆகம வித்தகர்களையும் அழைத்து, தான் கண்ட மங்களகரமான கனவைப் பற்றிச் சொன்னார். அவர்கள் நன்மொழிகள் கூறி மன்னரை ஆசீர்வதிக்கவே, அவர்களின் ஆசியுடன் ஆமுக்த மால்யத எனும் காப்பியத்தை இயற்றி வேங்கடவனுக்கு அர்ப்பணித்தார் கிருஷ்ணதேவ ராயர்.இக்காப்பியத்தைப் பாடி நிறைவு செய்த வாறே, ஆண்டாள் மற்றும் திருமாலின் அருளால் ஒரிசா பகுதியைக் கிருஷ்ண தேவராயர் வெற்றி கொண்டதாக, இக்காப்பியத்தின் நிறைவுப் பாடலின்மூலம் அறிய முடிகிறது. நீல மலையான பூரி ஜகந்நாத்தில் நீலவண்ண ஆடை அணிந்த பலராமனோடும், சுபத்திரையோடும் கண்ணன் வீற்றிருக்கிறான்.அந்தக் கண்ணன் குவளை மலர்களை வென்ற கண்களைக் கொண்டவன். அவனது கருணை மிகுந்த கடைக்கண் அருளால் ஒரிசா பகுதியின் அதிபதிகளான கஜபதி மன்னர்களை வீழ்த்தியவனும், தோள் வலிமையால் அவர்களை அஞ்சச் செய்தவனுமான கிருஷ்ணதேவராய மன்னர் இயற்றிய ஆமுக்த மால்யத காவியம் இனிய செய்யுட்களுடன் நிறைவடைகிறது என்று நூலை நிறைவு செய்துள்ளார்.திருக்குடந்தைடாக்டர்: உ.வே.வெங்கடேஷ்…

The post ஆமுக்த மால்யத appeared first on Dinakaran.

Tags : Amukta Mallyatha ,Silapathikaram ,Chintamani ,Malyatha ,
× RELATED சிறப்புகளைப் பெற்ற சிலப்பதிகாரம்!