×

அனுஷம்

அனுஷ நட்சத்திரத்தை செவ்வாயும், சனியும் சேர்ந்து ஆட்சி செய்கின்றன. செவ்வாயும், சனியும் எதிரெதிரான முரண்பாட்டை உருவாக்கும் அமைப்பாகும். இதனால் அவ்வளவு சீக்கிரம் எதையும் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள். இதனால் உங்களைச்சுற்றிலும் சர்ச்சைகள் எழுந்தெழுந்து அடங்கிய வண்ணம் இருக்கும். எல்லாவற்றிலும் வித்தியாசப்படுவீர்கள். அசாத்தியமான, அமானுஷ்யமான விஷயங்களை அனுமானிக்கும் திறன் உங்களுக்கு உண்டு. முதுகுக்கு பின்னால் பேசுவதும், முணுமுணுப்பதும் சுத்தமாக பிடிக்காது. நல்லதோ, கெட்டதோ நேரடியாக சொல்ல வேண்டும். இல்லையெனில் அவர்கள் என்ன நினைக்கிறார்களோ, என்ன செய்வார்களோ என்று விபரீதக் கற்பனை உங்களிடத்தில் உண்டு. பெரிதாக காசு, பணம் பண்ணத் தெரியாது. பூ, காய் பார்த்து ஏமாறாமல் ஆணிவேரை அறிந்து கொள்ள ஆவல்படுவீர்கள். கோபம் இருக்குமிடத்தில் குணமிருக்கும் என்பதற்கு உதாரணமே நீங்கள்தான். எத்தனைதான் அடுத்தவர்களை குத்திக்காட்டிப் பேசினாலும், பேச்சில் நகைச்சுவை உணர்வு நிரம்பியிருக்கும். சிரிக்கச் சிரிக்க பேசி சிந்திக்க வைப்பதில் சிறந்தவர்கள் நீங்கள். எதை முதலில் செய்ய வேண்டுமோ, அதை கடைசியாக செய்வீர்கள். சட்டென்று முடிவெடுக்க வேண்டிய விஷயங்களில் காலதாமதப்படுத்தி கோட்டை விடுவீர்கள். மனோகாரகன் சந்திரன் உங்கள் நட்சத்திரத்தில் நீச்சமாகிறான். இதனால் முடிவெடுத்தபிறகு யோசிப்பீர்கள். சனியினுடைய ஆதிக்கத்தில் இருப்பதால் ஊழ்வினையும், கர்மவினையும் துரத்திக் கொண்டிருக்கும். சில்லறை காசை சேமித்து வைத்தபோதெல்லாம் கட்டுப்பணம் நம் கையில் கிட்டாதா என கவலைப்பட்டதுண்டு. ஆனால், கட்டுக்கட்டாய் பணம் பொழிந்த பின்னர் இவையெல்லாம் அச்சடித்த காகிதங்கள் என்று விட்டெறிந்ததும் உண்டு. ஞானமும், செல்வமும், மனநிம்மதியும் ஒரு சேர இருக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். செல்வமும், ஞானமும் பெருக்கெடுத்தோடும் தலங்களுக்கு சென்று வரும்போது உங்கள் வாழ்க்கைத் தரமும், ஞானத் தேடலும் இணையாக பெருகும். அப்படிப்பட்ட தலத்தில் ஒன்றே விருத்தாசலம். இத்தலத்திலுள்ள விருத்தகிரீஸ்வரரை தரிசியுங்கள். விபசித்து எனும் முனிவர் இந்த மணிமுத்தாறு ஆற்றில் தங்கத்தை இட்டு சுந்தரரை திருவாரூர் கமலாலயத்தில் எடுத்துக் கொள்ளச் சொன்னாராம். செல்வத் தேடலும், ஞானத் தேடலும் ஒரு புள்ளியில் சந்திக்கும் சூட்சும தலம் இது. விருத்தகிரீஸ்வரரின் பிரமாண்டத்தை காணும்போது நிச்சயம் உங்களுக்குள் ஒரு மாற்றம் நிகழும்….

The post அனுஷம் appeared first on Dinakaran.

Tags : Mars ,Saturn ,Anusham ,
× RELATED ஏன் பார்க்க வேண்டும் திருமணப் பொருத்தம்?