×

ஹஸ்தம்

கன்னத்தில் கைவைத்து கவலைப்படாமல் அடுத்தடுத்தான காரியங்களில் கவனம் செலுத்துவீர்கள். நல்ல விகடகவித்துவம் பெற்றிருப்பீர்கள். வயது கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அலங்காரம் செய்து கொள்வீர்கள். சிந்தனைகளிலும் இளமை மேலோங்கியிருக்கும். ஜவுளிக் கடைக்கு போனால்கூட தன்னைவிட இருபது வயது குறைந்தோருக்கான உடையைத்தான் தேர்ந்தெடுப்பீர்கள். புதனுடைய ராசியில், சந்திரன் வருவதால் புதனுடைய ஏட்டறிவும், சந்திரனுடைய அனுபவ அறிவும் ஒருசேர சங்கமித்துக் காணப்படும். எவ்வளவு பெரியாளாக இருப்பினும் வாலியைப் போல எதிரியை எதிரேயே சந்தித்து பலமிழக்கச் செய்யும் தன்மை உங்கள் வாக்கு சாதூர்யத்திற்கு உண்டு. எத்தனை வருடமானாலும் சிறிய வயதில் ஒன்றாகப் படித்தவர்களை மறக்க மாட்டீர்கள். வியாபாரத்தில் அதிகம் முதலீடு செய்யாமல் லாபம் பார்க்கும் சாமர்த்தியமும் உங்களுக்கு உண்டு. கொஞ்சம் பாலிஷ் ஆக பொய் பேசுவீர்கள். நெருக்கடி நேரத்தில் பிறரை அழுத்திவிட்டு உங்களை உயர்த்திக் கொள்ளவும் தயங்க மாட்டீர்கள். எப்போதும் உங்களைச் சுற்றி ஒரு கூட்டத்தை வைத்திருப்பீர்கள்.உலகின் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும், சொந்த ஊருக்குச் செல்லாமல் இருக்கமாட்டீர்கள். எத்தனை செல்வச் செழிப்போடு இருந்தாலும், தலைகனம் என்பது உங்களை எப்போதும் தீண்டாது. சிறிய வயதிலேயே ராணுவம், காவல்துறையில் சேர வேண்டும் என்கிற ஆசை இருக்கும்.பள்ளி வாழ்க்கையில் இருக்கும்போது பெரிய மாற்றங்கள் அவ்வளவாக இருக்காது. எப்போதுமே ஷார்ட் டைம் கோர்ஸில் படித்து ஜெயிப்பீர்கள். அதுதான் உங்களுக்கு உதவும்படியாக அமையும். கல்வி வருகிறதோ இல்லையோ கலைத் துறையில் ஈடுபாடு அதிகமாக இருக்கும். ஆசிரியர்கள் அவ்வளவாக உங்களை குறை சொல்லாதபடிக்கு ஏதேனும் ஒரு விதத்தில் திறமையானவர்களாக வெளிப்படுத்துவீர்கள். புத்தியில் சூட்சுமம் அதிகரிக்கும். ஆனால், நடைமுறையில் அது ஒத்துவராது என்று புறக்கணிக்கப்படுவீர்கள். உயர்ந்து நிற்கும் மனிதர்களுக்கு ஆதாரமாகவும் நீங்கள் இருப்பீர்கள். ஆனால், உங்களை உயரவிடாது தடுக்கும் ஊழ்வினை சக்திகளிலிருந்து நீங்கள் விடுபட, ஜென்மாதி ஜென்ம கர்மங்களை போக்கும் வல்லமை கொண்ட ஒப்புயர்வற்ற கடவுளான ஒப்பிலா அப்பன் என்று அழைக்கப்படும் உப்பிலியப்பனை தரிசித்து விட்டு வாருங்கள். ஆழ்வார்களும், அரசர்களும் தவமாய் தவமிருந்து கேட்டதை பெற்றுச் சென்ற அற்புதத்தலம். ஒப்பிலா அப்பனை தரிசியுங்கள். இத்தலம் கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது….

The post ஹஸ்தம் appeared first on Dinakaran.

Tags : Hastam ,
× RELATED வற்றாத வளமருள்வார் வழுவூர் வள்ளல் தங்கக்கை ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள்