×

பஞ்சபூத தலங்களில் அம்பிகை

பஞ்சபூதத் தலங்கள் என்றாலே அங்கே கொலுவிருக்கும் ஈஸ்வரன்தான் நம் மனக்கண்ணில் தோன்றுவார். ஐயனுடன் இணைந்து அத்தலங்களில் அருட்பாலிக்கும் அம்பிகையரை இங்கு தரிசிக்கலாம்.1. திருவானைக்கா – நீர் ஓர் அசுரனை வதைத்த பின்னும் உக்கிரம் தணியாதிருந்த அகிலாண்டேஸ்வரி அன்னைக்கு ஆதிசங்கரர் சிவசக்ரம், சக்ரம் ஆகிய இரு தாடங்கங்களை தோடுகளாக அணிவித்த உடன் அன்னை சாந்தம் அடைந்ததாக வரலாறு. ஜம்புமாதவன் எனும் முனிவர் தனக்கு கிடைத்த அரிய நாவல் பழத்தை ஈசனுக்கு தர அதை ருசித்த ஈசன் அதன் கொட்டையை கீழே உமிழ்ந்தார். அதை உண்ட முனிவர் வயிற்றில் நாவல் மரம் வளர ஆரம்பித்துவிட்டது. ஈசன், காவிரிக்கரையில் அன்னை தவம் செய்ய வருவாள் என்றும், முனிவர் அங்கே காவல் மரமாக இருக்குமாறும் ஆணையிட்டார். அதனாலேயே இத்தலம் ஜம்புகேஸ்வரம் (நாவல் தலம்) என்று ஆயிற்று. அகிலாண்டேஸ்வரி இத்தலம் வந்து நீரால் லிங்கம் வடித்து இறைவனிடமிருந்து வேதாந்த ரகசியங்களைக் கற்றாள். அம்பிகை இங்கே கன்னியாகவே எழுந்தருளியிருக்கிறாள். அதனால் இக்கோயிலில் கல்யாண உற்சவம் கிடையாது. அன்னை ஈசனைப் பூஜிப்பதைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் ஒரு சிவாச்சார்யார் புடவை அணிந்து ஈசன் சந்நதிக்கு சென்று பூஜிப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. அம்பிகை நீரால் பிடித்த லிங்கம் அப்புலிங்கம் என வழங்கப்படுகிறது. மூல லிங்கத்தில் இன்றும் நீர் ஊறுகிறது. சக்தி பீடங்களில் திருவானைக்கா வாராஹி பீடம் எனும் ஞான பீடமாக போற்றப்படுகிறது.2. காஞ்சிபுரம் – நிலம் ஒரு சமயம் சிவபெருமானின் கண்களை விளையாட்டாய் பொத்தினாள் அன்னை. பரம்பொருளின் கண்கள் மூடியதால் இந்தப் பேரண்டமே இருண்டது. இதனால் கோபித்த ஈசன் விடுத்த சாபத்தால் பூலோகத்தில் காஞ்சிக்கு வந்த அம்பிகை வேகவதி ஆற்றங்கரையில் மணலால் லிங்கத்தை பிடித்து ஈசனை பூஜித்தாள். அவளை சோதிக்க வேகவதி வெள்ளமாகப் பெருக்கெடுக்க, மணல் லிங்கம் கரைந்துவிடப் போகிறதே என தன்னோடு சேர்ந்து தழுவிக் கொண்டாள் அன்னை. ஈஸ்வரன் மனமகிழ்ந்து காட்சியளித்தார். இவ்வாறு தவமிருந்த ஆதிசக்தியே காமாட்சியானாள். ஆதிசங்கரர் நிறுவிய காமகோடி பீடத்தின் நாயகி இத்தேவி. திருவீதி உலாவுக்காக ஆலயத்தை விட்டு வெளியே எழுந்தருளும்போதும், திரும்பி வரும்போதும் ஆதிசங்கரர் சந்நதி முன் நின்று உத்தரவு பெற்றே அன்னை செல்வது இன்றும் வழக்கத்தில் உள்ளது.3. திருவண்ணாமலை – அக்னி திருமால் மற்றும் நான்முகனுக்கு அடி, முடி காணக்கிடைக்காத நிலையில் இறைவன் ஜோதி ஸ்வரூபனாகத் தோன்றியதால் இத்தல நாயகன் அண்ணாமலை என்றானார். இங்கு அருள்புரியும் அம்மன் அபீதகுஜாம்பாள். இத்தேவியை உண்ணாமுலை நாச்சியார், திருக்காமக் கோட்டமுடைய நம்பிராட்டியார், உலகுடைய பெருமாள் நம்பிராட்டியார் என தேவார இலக்கியங்களிலும், கல்வெட்டுக்களிலும் பல பெயர்களில் அழைத்து ஆனந்தப்பட்டுள்ளனர். மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றிலும் சிறப்பு பெற்ற இத்தலத்தில் மேற்கொள்ளப்படும் கார்த்திகை தீப வைபவம், உமையம்மை இத்தலத்தில் நடத்திய பெருவிழா எனவும், அம்பிகைக்கு இறைவன் தீபத் திருநாள் அன்றுதான் ஜோதி உருவாய் மலைமீது காட்சி தந்து அவருக்கு தன் இடப்பாகம் அளித்த திருநாள் எனவும் தல புராணம் கூறுகிறது. 4. சிதம்பரம் – ஆகாயம்சித்சபையில் சபாநாயகரின் வலப்புறத்தில் உள்ள ஒரு சிறு வாயிலின் திரையை அகற்றினால் தங்கத்தினால் ஆன வில்வமாலை திருவாசியுடன் தொங்கவிடப் பட்டுள்ளதை தரிசிக்கலாம். மூர்த்தி இல்லாமலே வில்வமாலை தொங்குவது இறைவன் அங்கே ஆகாய உருவமாய் இருப்பதைக் குறிக்கிறது. இதைத்தான் சிதம்பர ரகசியம் என்பர். அன்னை சிவகாம சுந்தரி சின்னஞ் சிறு பெண் போல் சிற்றாடை இடை உடுத்தி சிவகங்கைக் குளத்திற்கு மேற்கே இரண்டு பிராகாரங்களுடன் தனிக் கோயிலில் அருளாட்சி புரிகிறாள். இதுதவிர, பஞ்சாட்சர படிகளின் மீது நடராஜப் பெருமான் ஆனந்த நடனம் புரியும் சித்சபையிலும் உற்சவ விக்ரகமாய் பொலிகிறாள் அன்னை. 5. ஸ்ரீகாளஹஸ்தி – வாயுஅம்பிகை இங்கு ஞானப் பூங்கோதை எனும் திருநாமம் கொண்டு அருள்கிறாள். அவள் திருமுன் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அர்த்தமேரு உள்ளது. அம்பிகையின் இடுப்பில் உள்ள ஒட்டியாணத்தில் கேது பகவானின் உருவம் காணப்படுகிறது. சந்நதிக்கு வெளியில் பிராகாரத்தின் மேல்விதானத்தில் ராசிச் சக்கரம் எழுதப்பட்டுள்ளது. அம்மனுக்கு வெள்ளிக்கிழமை தோறும் தங்கப் பாவாடை சாத்தப்படுகிறது. உற்சவ அம்மனுக்கு வெள்ளிதோறும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. இத்தலம், சக்தி பீடங்களில் புவனேஸ்வரி பீடமாய் போற்றப்படுகிறது. ஈசன் காளத்திநாதரின் கருவறையில் மற்ற தீபங்கள் நின்று ஒளிவிடும்போது ஒரு தீபம் மட்டும் ஆடிக் கொண்டே இருக்கும். கருவறையின் கதவுகளை காற்று புகாவண்ணம் மூடினாலும் அந்த தீபம் மட்டும் அசையும் அற்புதத்தை இத்தலத்தில் காணலாம்.ஜெயலட்சுமி…

The post பஞ்சபூத தலங்களில் அம்பிகை appeared first on Dinakaran.

Tags : Panchambhuta ,Eiswaran ,Ambikir ,Ayaan ,
× RELATED மதுரை ஈஸ்வரன் தற்கொலை வழக்கை...