×

துயர் துடைக்கும் மலைமண்டல பெருமாள்

உலகப் புகழ்பெற்ற மாமல்லபுரம் அருகே உள்ள சதுரங்கப்பட்டினம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீமலை மண்டல பெருமாள் கோயில் அமைந்துள்ளது. சதுரங்கப்பட்டினம் மலை மண்டல பெருமாள் கோயில்  தென் பத்ரி என்று அழைக்கப்படுகிறது. பத்ரி நாராயண பெருமாள், விஷ்வரூப ஆஞ்சநேயர் ஆகியோர் பூமிக்கடியில் புதைந்து உள்ளனர். மலை மண்டல பெருமாளுக்கு கிரி வரதர், வரதராஜன் என்ற  பெயர்களும் உண்டு. பெருமாளின் பாதமும் கருடனின் தலையும் ஒரே அளவு உள்ளது. தலையில் ஒரு பாம்பு, காதில் இரண்டு பாம்பு,  தோளில் இரண்டு பாம்பு, மார்பில் இரண்டு பாம்பு, இடுப்பில் ஒரு  பாம்பு என அஷ்ட நாக கருடனாக காட்சி அளிக்கிறார். ஆகவே நாகதோஷம் உள்ள பக்தர்கள் இவரை தரிசித்தால் சர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாக விளங்கி வருகிறது. அதுமட்டுமில்லாது பெருமாளின்  சக்கரம் கீழாகவும், சங்கு மேல் பகுதியிலும் உள்ளது. மலைமண்டல பெருமாளை கிரி வரதராஜப் பெருமாள் என்றும் தாயார் பெருந்தேவி எனும் திருநாமத்தோடு சேவை சாதிக்கின்றார்கள். இது பதினெட்டு சித்தர்கள் வழிபட்ட தலமாகும். மாமல்லபுரம்  பூதத்தாழ்வார் மற்றும் மகான் ராகவேந்திரர் வழிபட்ட ஸ்தலமாகவும் போக சித்தருக்கு பறக்கும் ரகசியத்தை கற்றுக் கொடுத்த கருட ஸ்தலமாக விளங்கி வருகிறது. மற்ற கோயில்களில் ஸ்ரீதேவிதான்  பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். ஆனால், இங்கு பூதேவிதான் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். இத்தலம் சற்றே மலை போன்ற அமைப்பின் மேல் உள்ளதால் மலை மண்டல பெருமாள் என்று  அழைக்கப்படுகின்றார். சர்ப்பதோஷ நிவர்த்தி ஸ்தலமான சதுரங்கப்பட்டினம் டச்சுக்காரர்களின் துறைமுகப் பட்டினமாக அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியதாகும். ராமேஸ்வரம் கடலில் குளித்தால் என்ன பலன்  கிடைக்குமோ அதே பலன் அர்த்த சேது என்னும் சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் குளித்தாலும் கிடைக்கும் என்பது ஐதீகம். மலை மண்டல பெருமாள் சமுத்திர ராஜனின் மகளை திருமணம் செய்ததால்  இங்கே சதுரங்கப்பட்டினம் மீனவ மக்கள் இந்த மாசி மக பெருவிழாவை விமரிசையாக நடத்துகின்றனர். பெருமாள் மாமனார் வீட்டுக்குச் செல்லும் வைபவம் ஆகவும், அப்போது வரும் வழியில் மீனவ  மக்களுக்கு காட்சி தரும் வைபவம் ஆகவும், அதேபோல் கடலில் உள்ள ஜீவராசிகளுக்கும் காட்சி கொடுப்பது மட்டுமில்லாது அனைத்து தரப்பு மக்களுக்கும் நேரில் வந்து காட்சி கொடுத்து  அருள்பாலிப்பார். அம்பாளின் அண்ணனாகிய பெருமாள் கடலில் குளிக்க வரும் போது அருள்மிகு ஸ்ரீ பெரியபாளையத்தம்மன்  அருள்மிகு ஸ்ரீ சியாமளா தேவி, ஊத்துக்காடு அம்மன், ஸ்ரீ செல்லி அம்மன்  ஆகிய அம்மன்கள் பெருமாளுக்கு சீர்வரிசை வைத்து மலை மண்டல பெருமாளை கடற்கரைக்கு அழைத்து வந்து கடலில் புனித நீராடுதல் நிகழ்ச்சி கடந்த 22 ஆண்டுகளாக சிறப்பாக நடந்து வருகிறது.  இதேபோல இதைச் சுற்றியுள்ள கல்பாக்கம் உட்பட பல்வேறு கிராமத்திலுள்ள கோயில்களின் அனைத்து மூர்த்தங்களும் இங்குள்ள கடற்கரைக்கு வந்து தீர்த்தவாரி எடுத்துக்கொண்டு பக்தர்களுக்கு  அருள்பாலித்துவிட்டுச் செல்வர். அப்போதைய சதுரங்கப்பட்டினம் பகுதி கடற்கரை பகுதியாக இருந்ததால் துறைமுகப் பட்டினமாக இயங்கி வந்தது. காஞ்சிபுரம் பல்லவர்களின் தலைநகராக இயங்கியது. அப்போது சீனப் பயணி யுவான்  சுவாங் இந்தத் துறைமுகம் வழியாக வந்து இறங்கி காஞ்சிபுரம் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னைப் பட்டினம் முதல் சதுரங்கப்பட்டினம் வரை உள்ள கடற்கரை கிராமங்களில் மிக  முக்கியமானது திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள். கடல்மல்லை என்னும் மாமல்லபுரத்தில் உள்ள தலசயனப் பெருமாள் கோவில் அதன் அருகிலுள்ள சதுரங்கப்பட்டினம் மலை மண்டல பெருமாள்  ஆகிய பெருமாள் கோவில் குளம் விஜயநகரப் பேரரசின் கீழ் ஒரு குடையின்கீழ் இருந்த நகரங்களாகும். இந்த மூன்று பகுதிகளுக்கும் முன் பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன. பூதத்தாழ்வார்  மாமல்லபுரத்தில் அவதரித்து திருவிடந்தையில் பாடல் பாடியுள்ளார். நித்திய கல்யாண பெருமாள், மாமல்லபுரம் தலசயன பெருமாள், சதுரங்க பட்டினம் மலைமண்டல பெருமாள் ஆகிய மூன்றிலும்  உள்ள தாயார்களை வழிபட்டால் சகல பிரச்னைகளும் தீரும் என்பது நம்பிக்கை. சதுரங்கப்பட்டினம் துறைமுகமாக இயங்கியதால் டச்சுக்காரர்கள் கோட்டையை கட்டி கடல் வழியாக வரும் பொருட்களை கோட்டையில் இறக்கி வைத்து வாணிபம் செய்து வந்தனர். அப்போது இந்த  நகரின் வரை படத்தில் மலை மண்டல பெருமாள் கோவில் வரைபடமும் தயாரிக்கப்பட்டது. இந்த சதுரங்க பட்டினம் பகுதியின் வரைபடம் டென்மார்க் நாட்டின் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பது  கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு டென்மார்க்கில் இருந்து வந்த ஒரு இளம்பெண் மூலம் தெரியவந்துள்ளது. அவர் வந்து இந்த மலை மண்டல பெருமாளை தரிசித்த பிறகு இந்தியாவில் இருப்பதாகவே  நான் உணரவில்லை. எங்கள் நாட்டிலே இருப்பதாகவே நான் உணர்கிறேன் காரணம் என்னுடைய முதல் மூதாதையர்கள் இந்த சதுரங்கபட்டினத்தில் வாணிபம் செய்து வாழ்ந்து வந்தார்கள். அதனால்  அப்போது கூட நான் இங்கேயே பிறந்து இருக்கலாம். பின்னர் எனது சொந்த ஊருக்கு சொந்த நாட்டுக்கு சென்று இருக்கலாம். மேலும் இந்தப் பகுதியின் சிறப்பை என்னுடைய முன்னோர்கள் என்னிடம்  சொல்லி யிருக்கிறார்கள். அதனால்தான் இதை நான் காண வந்திருக்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.சென்னையிலிருந்து கல்பாக்கம் செல்லும் பாதையில் கல்பாக்கத்திற்கு அருகேயே  இத்தலம் அமைந்துள்ளது. மாமல்லபுரத்திலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. படம்: எஸ்.பாலாஜிஇரத்தின.கேசவன்…

The post துயர் துடைக்கும் மலைமண்டல பெருமாள் appeared first on Dinakaran.

Tags : Perumal ,Srimalai Mandal Perumal Temple ,Chaturangapatnam ,Mamallapuram ,
× RELATED பெருமாள் கோயிலில் நகை திருட்டு