×

உயர்ந்த இடத்தில்…

குசஸ்தலி எனும் இடத்தில்,தேவதைகள் எல்லாம்கூடி மந்திர ஆலோசனை செய்வதாகத் தீர்மானித்தார்கள். அதற்காகத் தேவதைகள் எல்லோரும் வந்து கொண்டிருந்தார்கள். குபேரனும்  வந்து கொண்டிருந்தார்.  அவரைச் சுற்றிக் கோரமான  வடிவத்துடன், பற்பல ஆயுதங்களைத் தாங்கியபடி முந்நூறு  மகாபத்ம (100 லட்சம் கோடி என்பது – ஒரு மகாபத்மம். 30000 லட்சம் கோடி பேர்கள் என்ற)எண்ணிக்கையில் வந்து கொண்டிருந்தார்கள். வரும் வழியில் யமுனைக் கரையில், ஏராளமான மரங்கள் பூத்துக் காற்றில் ஆடிக் குலுங்கிக் கொண்டிருந்தன. மரங்களில் அமர்ந்தபடி  பற்பலப் பறவைகள் ஓசையிட்டுக்  கொண்டிருந்தன.  அத்துடன்  அங்கே, சூரியனுக்கு எதிரில் நின்றபடி  கைகளை  மேலே தூக்கி–்க்கொண்டு, அகத்தியர் தவம் செய்து  கொண்டிருந்தார்;  ஒளிக் குவியலாக, நன்றாக மூட்டப்பட்ட அக்கினியைப்போல  ஜொலித்துக் கொண்டு, கடுந்தவத்தில் ஈடுபட்டிருந்தார்.அப்போது ஆகாயவீதி வழியாக விமானத்தில் போய்க் கொண்டிருந்த குபேரனும் அவர் தோழனான மணிமாறனும், கீழே தவம் செய்து கொண்டிருந்த அகத்தியரைப் பார்த்தார்கள். மணிமாறனுக்கு, அகத்தியரைக் கண்டதும் ஓர் அலட்சியம் பிறந்தது. மூர்க்கத்தனம், செல்வச் செருக்கு, அறியாமை ஆகியவற்றின்  காரணமாக, மணிமாறன் ஆகாயத்தில் இருந்தபடியே அகத்தியரின் தலையில்  எச்சிலை  உமிழ்ந்தான்.தவசீலரான  அகத்தியருக்குக் கடுங்கோபம்  மூண்டது. நிமிர்ந்து பார்த்தார், அவர்; குபேரனும் மணிமாறனும் ஆகாயத்தில்  தெரிந்தார்கள். நடந்ததை உணர்ந்து கொண்ட அகத்தியரின் வாயிலிருந்து, அப்போதே சாப வார்த்தைகள்  வெடித்து  வெளிப்பட்டன.‘‘குபேரா! கெட்ட  எண்ணம்  கொண்டவனும்  உனக்குத் தோழனுமான  இந்த  மணிமாறன் என்னை அவமதித்தான். அதுவும்  நீ  பார்த்துக்  கொண்டிருக்கும்போதே, என்  தலையில்உமிழும்  இந்த அக்கிரமத்தைச்  செய்தான். ஆகையால் மனமறிந்து தவறுசெய்த இந்த மணிமாறன்  சேனைகளுடன், ஒரு மனிதனால் வதம் செய்யப் படுவான். சேனைகளின் இழப்பையும் நண்பனின் முடிவையும் எண்ணி, நீ துயரப்படுவாய்!  மணிமாறனைக் கொன்றவனைப்  பார்ப்பதன் மூலம், நீ பாவத்தில் இருந்து விடுபடுவாய்.  நான் கொடுக்கும் சாபம், இந்த சேனை வீரர்களின்  பரம்பரையைத்  தாக்காது. அவர்கள் உன்  கட்டளையை  நிறைவேற்றுவார்கள்”  எனச்  சாபம்  கொடுத்தார், அகத்தியர். அகத்தியரின் அந்த சாபப்படியே, பாண்டவர்களின் வனவாசத்தின்போது  மணிமாறன் பீமனால் கொல்லப்பட்டான். பீமனைப் பார்த்ததன் மூலம் குபேரனும் சாபத்தில் இருந்து வெளிப்பட்டார். செல்வத்திலோ, பதவி யிலோ உயர்ந்தவர்கள் அமைதியாக அடக்கமாக இருந்தாலும், அவர்களைச்  சார்ந்த சிலர் ஆட்டம் போட்டு, அல்லல்படுவார்கள் என்பதை விளக்கும் கதை இது.  – V.R. சுந்தரி…

The post உயர்ந்த இடத்தில்… appeared first on Dinakaran.

Tags : Kusastali ,Gudi ,Kuberan ,
× RELATED மராட்டியம்: மராத்தியர்களின் புத்தாண்டான குடி பத்வா கோலாகல கொண்டாட்டம்