×

கொடுத்துக் கெடுப்பான் ராகு, அலையவைப்பான் கேது. அப்படியென்றால்? : ராகு-கேது சில சந்தேகங்கள், விளக்கங்கள்

ராகுவை ஆங்கிலத்தில் Ascending Node என்றும் கேதுவை Descending Node என்றும் அழைப்பார்கள். அதாவது ராகு, தான் அமர்ந்திருக்கும் பாவகத்தின் தன்மையைக் கூட்டும் திறன் படைத்தவர். வேதியியலில் வினை ஊக்கி (catalyst) என்று சொல்வார்கள். ராகு, தான் இணைந்திருக்கும் கோளின் தன்மையையும், அமர்ந்திருக்கின்ற பாவகத்தின் தன்மையையும் வெகுவாக உயர்த்தி பலன் தரும் ஆற்றல் கொண்டவர். செவ்வாய் இயற்கையில் மிக வேகமாக, சுறுசுறுப்பாக செயல்படும் கிரஹம். இந்த செவ்வாயோடு ராகு இணைந்தால் செவ்வாயின் வேகம் இன்னமும் கூடும். கும்ப லக்னத்தில் பிறந்த ஒரு ஜாதகருக்கு ஜீவன ஸ்தானமாகிய பத்தாம் வீட்டில், அதாவது விருச்சிகத்தில் செவ்வாயும் ராகுவும் இணைந்திருந்தால் நிச்சயமாக அவர் பாதுகாப்புத்துறையில் மிகஉயர்ந்த பதவி வகிக்கக்கூடியவராக இருப்பார். காவல்துறையில் பணிபுரிந்தால் என்கவுன்டர், தீவிரவாதிகளை வேட்டையாடுவதில் புகழ் பெறுவார். இதனால் ராகு நற்பலனைத் தருகிறார் என்றே வைத்துக் கொண்டாலும், ஈவு, இரக்கமின்றி இப்படி எத்தனை பேரை சுட்டுக் கொன்றிருப்பாரோ என்ற பழிச்சொல்லுக்கு ஆளாவதோடு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவருடைய மனசாட்சியும் உறுத்தத் தொடங்கிவிடும். இந்தத் தன்மையைத்தான் கொடுத்துக் கெடுப்பான் ராகு என்கிறார்கள். கொள்ள லாபம் சம்பாதிக்கும் தொழிலதிபர்கள், குறுகிய காலத்தில் கோடீஸ்வரரானவர்களின் ஜாதகங்களில் ராகுவின் தாக்கத்தைக் காணமுடியும். நேர்மையான வழியில் சம்பாதிக்கும் யாராலும் மிகக்குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாக முடியாது. ஆக, தவறு, குற்றங்கள் மூலம், சம்பாதிக்கும் தன்மையை ராகு தருகிறார். ஆனால் நீண்ட நாட்களுக்கு அந்த தவறினை மறைக்க ராகுவால் இயலாது. அது தவறு என்று வெளியுலகிற்குத் தெரிந்து தண்டிக்கப்படும்போது மிகுந்த அவமானத்திற்கு அந்த ஜாதகர் உள்ளாகிறார். இதுவும் ராகுவினால் வருவதே. எனவேதான் கொடுத்துக் கெடுப்பான் ராகு என்கிறார்கள். அதேபோல கேது தான் இருக்கும் இடத்தின் பலத்தை வெகுவாக குறைப்பார். லக்னத்தில் கேது அமையப் பெற்றவர்கள் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள விரும்பமாட்டார்கள். எல்லாவற்றிலும், தான் செய்வது தவறாகிவிடுமோ, தன்னை மற்றவர்கள் தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்ற தயக்கம் அதிகமாக இருக்கும். எந்த பாவகத்தில் கேது சென்று அமர்கிறாரோ அந்த பாவகத்தின் வீரியத்தன்மையை அவர் குறைப்பதால், அலைய வைப்பான் கேது என்கிறார்கள். குறிப்பாக ஜீவன ஸ்தானத்தில் கேது தனியாக அமர்ந்திருந்தால் தொழில்முறையில் அதிக அலைச்சலை மேற்கொள்ளவேண்டியிருக்கும். சுக்கிரன்-கேது இணைந்திருந்தால் இரண்டும்கெட்டானாக அலைய வேண்டியிருக்கும். சுக்கிரன் அதிக ஆசையையும், சுகத்தினையும் தரக்கூடியது. கேது அதற்கு நேர்மாறாக, விரக்தி மனோபாவத்தைத் தரக்கூடியது. ஆக, ஒருவர் ஜாதகத்தில் ராகு, கேது எந்த கிரஹத்தின் இணைவினையும் பெறாமல் தனித்து அமர்ந்திருப்பதே நல்லது. யோககாரகன் ராகு, ஞான காரகன் கேது – ஏனிந்த முரண்பாடு?ராகுவிற்கு நேர் ஏழாம் பாவகத்தில் கேது சஞ்சரிப்பார். அதாவது ராகு சஞ்சரிக்கும் பாகைக்கு நேர் எதிரே, சரியாக 180வது பாகையில் கேது சஞ்சரிப்பார். பொதுவாக ஒரு பாகைக்கு நேர் எதிர் பாகை என்பது எதிரான குணத்தையே பெற்றிருக்கும். அதனால்தான் ராகு அதிக ஆசை பிடித்தவராகவும், கேது ஆசையைத் துறந்தவராகவும் இருக்கிறார்கள். ராகு அதிவேகம் கொண்டவராக செயல்படுவதால், கேது அதற்கு எதிரான குணத்தைத் தருகிறார். உதாரணத்திற்கு லக்னத்தில் ராகுவையும், ஏழாம் பாவகத்தில் கேதுவையும் கொண்டவருடைய ஜாதகத்தைப் பார்க்கலாம். லக்னத்தில் ராகுவைக் கொண்டவர் எதற்கெடுத்தாலும் அவசரப்படுபவராகவும், அடிக்கடி உணர்ச்சி வசப்படுபவராகவும் இருப்பார். அதேநேரத்தில் அவரது வாழ்க்கைத்துணை அவருக்கு நேரெதிராக ‘எது நடக்குமோ, அதுதான் நடக்கும், நம்மால் என்ன ஆகப்போகிறது?’ என்ற குணத்தினைக் கொண்டிருப்பார். பேராசைப்படும் குணத்தை ராகு கொண்டிருப்பதால், அதனை சமன் செய்யும் விதத்தில் முற்றும் துறந்த ஞானியாக கேதுவினை படைத்திருக்கிறான் இறைவன்! இதன் அடிப்படையில்தான் இறைவனின் படைப்புகளும் அமைந்திருக்கின்றன. யோகம் என்று நாம் கருதும் எதிர்பாராத அதிர்ஷ்டத்தைத் தருபவனாக ராகு இருப்பதால், அதற்கு நேர்மாறாக எதன்மீதும் ஆசைப்படாத தன்மையைத் தருபவராக கேது செயல்படுகிறார். இது முரண்பாடு அல்ல,  இயற்கையின் நியதியே!முடிவாக, ராகு-கேது இருவரையும் பாம்பு என்று மட்டும் எண்ணி அநாவசியமாக பயம் கொள்ளக்கூடாது. அவர்களுக்குள் பலனை சரிசமம் செய்யும் குணம் அமைந்திருப்பதால் அவர்களால் உண்டாகும் தீமையும், நன்மையும் சரிசமமாகவே இருக்கும். அதிக ஆசையும் தராமல், அதிக விரக்தியும் தராமல் இந்த உலக வாழ்க்கைக்கு எது தேவையோ அதனை சரியான அளவில் நாம் பெறுவதற்கு இறைவனைப் பிரார்த்திப்போம். வாழ்வினில் வளம் பெறுவோம்.…

The post கொடுத்துக் கெடுப்பான் ராகு, அலையவைப்பான் கேது. அப்படியென்றால்? : ராகு-கேது சில சந்தேகங்கள், விளக்கங்கள் appeared first on Dinakaran.

Tags : Rahu ,Ketu ,Rahu-Ketu ,
× RELATED சங்கடம் தரும் சர்ப்ப தோஷம்