×

ராமாநுஜருக்கு உபதேசித்த திருக்கோஷ்டியூர்நம்பி

திருக்கோஷ்டியூர் நம்பி என்பவர் யார்?சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் செல்வநம்பி என்றொரு மகான் வாழ்ந்து வந்தார். ஆண்டாளின் தந்தையான பெரியாழ்வாருக்கு செல்வநம்பி மேல் மிகவும் மதிப்பு இருந்திருப்பதை,“அல்வழக்கு ஒன்றுமில்லா அணிகோட்டியர் கோன் அபிமானதுங்கன்செல்வனைப் போலத் திருமாலே! நானும் உனக்குப் பழவடியேன்”- என்ற பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு பாசுரத்தின் வாயிலாக அறியமுடிகிறது. “திருமாலே! நன்னெறிக்கண் வாழ்பவரும், இறை அடியார்களிடம் அபிமானம் கொண்டவருமான திருக்கோஷ்டியூர் செல்வநம்பியைப்போல அடியேனும் உனக்குத் தொண்டனாகி விட்டேன்!” என்று இப்பாசுரத்தில் தெரிவிக்கிறார் பெரியாழ்வார்.அத்தகைய ஏற்றம் பெற்ற செல்வநம்பியின் வம்சத்தில், 987ம் ஆண்டு, சர்வஜித் வருடம், வைகாசி மாதம், ரோகிணி நட்சத்திரத்தில் திருக்கோஷ்டியூர் நம்பி அவதரித்தார். இவரது இயற்பெயர் குருகேசர். நம்பி என்ற சொல் குருவைக் குறிக்கும். திருக்கோஷ்டியூரில் வாழ்ந்த குரு என்பதால், திருக்கோஷ்டியூர் நம்பி என்று இவர் பெயர் பெற்றார். வைகுண்டத்தில் திருமாலுக்குத் தொண்டு செய்யும் நித்தியசூரிகளுள் ஒருவரான புண்டரீகர் என்பவர் தான்திருக்கோஷ்டியூர் நம்பியாக அவதரித்ததாகப் பெரியோர்கள் கூறுவர். ராமாநுஜரின் ஐந்து குருமார்களில்திருக்கோஷ்டியூர் நம்பியும் ஒருவர்.ராமாநுஜருக்கு உபதேசம் செய்த திருக்கோஷ்டியூர் நம்பி:    ராமாநுஜரின் மானசீக குருவாகத் திகழ்ந்தவர் ஆளவந்தார் என்னும் வைணவப் பெரியவர். அந்த ஆளவந்தாருக்கு சீடராக இருந்தார் திருக்கோஷ்டியூர் நம்பி. ஆளவந்தார் ஒரு விக்கிரகத்தைத் திருக்கோஷ்டியூர் நம்பியிடம் அளித்து, “இதற்கு பவிஷ்யத் அசார்ய விக்கிரகம் (வருங்கால குருவின் வடிவம்) என்று பெயர். இந்த விக்கிரகத்தில் இருப்பவர், பின்னாளில் மிகப்பெரிய ஆச்சாரிய வள்ளலாக விளங்கி, வைணவ நெறியை வளர்க்கப் போகிறார். அவர் உங்களைத் தேடி வரும்போது, கீதையில் கண்ணன் கூறிய “ஸர்வ தர்மான் பரித்யஜ்ய…” என்னும் சரம சுலோகத்தின் பொருளை அவருக்கு நீங்கள் உபதேசிக்க வேண்டும்!” என்று கூறினார்.ஆளவந்தார் தந்த விக்கிரகம் ராமாநுஜருடைய விக்கிரகமே. அவர் சொன்னபடியே, பின்னாளில் சரம சுலோகத்தின் பொருளை அறிவதற்காகத் திருக்கோஷ்டியூர் நம்பியைத் தேடி வந்தார் ராமாநுஜர்.ஆனால் திருக்கோஷ்டியூர் நம்பியோ, “உலகியல் விஷயங்களில் உள்ள பற்றையெல்லாம் விட்டுவிட்டு வாருங்கள், பின் உபதேசிக்கிறேன்!” என்று சொல்லி ராமாநுஜரைத் திரும்ப அனுப்பினார்.திருவரங்கத்துக்குத் திரும்பிய ராமாநுஜர், தம்மைத் தாமே சுயபரிசோதனை செய்து பார்த்து, தனக்கு உலகியல் ஆசைகள் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு இரண்டாம் முறை திருக்கோஷ்டியூர் நம்பியிடம் சென்றார்.“அகங்கார – மமகாரம் (நான், எனது என்னும் எண்ணங்கள்) தவிர்த்து வாருங்கள், பின் உபதேசிக்கிறேன்!” என்றார் நம்பி. திருவரங்கத்துக்குத் திரும்பி, மீண்டும் தம்மைத் தாமே பரீட்சித்துப் பார்த்து, நான், எனது என்னும் எண்ணங்கள் தமக்கில்லை என்றுணர்ந்து மூன்றாம் முறை சென்றார் ராமாநுஜர்.“ஆத்மஞானம் கிடைத்தபின் வாரும்!” என்றார் நம்பி. மீண்டும் தம்மைத் தாமே சுயபரிசோதனை செய்து, அந்தத் தகுதியும் தமக்குண்டு என்றுணர்ந்தவாறே, நான்காம் முறை நம்பியை நாடிச் சென்றார் ராமாநுஜர்.இம்முறை, “உடல் வேறு, ஆத்மா வேறு என்ற எண்ணம் வந்தபின் வாரும்!” என்றார் நம்பி. அந்த எண்ணமும் தனக்கு உண்டு என்பதை உறுதிசெய்து கொண்டு ஐந்தாம் முறை நம்பியிடம் சென்றார் ராமாநுஜர்.“இறைவனுக்கு உரியவனான ஜீவாத்மா, இறைவனை அநுபவிப்பதில் தான் நாட்டம் கொள்ளவேண்டும். ஜீவாத்மா தன்னைத் தானே அநுபவித்து இன்புறுதல் கூடாது. எனவே ஆத்மாநுபவத்தில் உள்ள ஆசையை விட்டு விட்டு வாருங்கள்!” என்றார் நம்பி. தமக்கு என்றுமே இறைவனை அநுபவிப்பதைத் தவிர மற்றொன்றில் எண்ணமில்லை என்றுணர்ந்து கொண்டு ஆறாம் முறை சென்றார் ராமாநுஜர்.“இறைவனைத் தவிர்த்த இதர விஷயங்களில் உள்ள பற்றை விட்டுவிட்டு வாரும்!” என்றார் நம்பி. இறைவனைத் தவிர்த்த மற்ற விஷயங்களில் தமக்கு என்றுமே பற்றில்லை என்பதை ஊர்ஜிதப் படுத்திக் கொண்டு ஏழாம் முறை நம்பியிடம் சென்றார் ராமாநுஜர்.“இறைவனின் விஷயத்தில் அன்பை வளர்த்துக் கொண்டு வாரும்!” என்றார் நம்பி. இறைவனிடத்தில் தமக்கு அளவில்லாத ருசியும் பக்தியும் ஈடுபாடும் இருப்பதை உணர்ந்து கொண்டு, எட்டாம் முறையாகத் திருக்கோட்டியூருக்கு எழுந்தருளினார் ராமாநுஜர்.“விருப்பு – வெறுப்புகளைத் தொலைத்து வாரும்!” என்றார் நம்பி. சொந்த விருப்பு – வெறுப்புகள் என்றுமே தமக்கில்லை என்பதை உறுதி செய்து கொண்டபின் ஒன்பதாம் முறையாகத் திருக்கோட்டியூரை நோக்கி நடந்தார் ராமாநுஜர்.    “இறைவனின் எண்ணப்படி நான் இருப்பேன் என்னும் உணர்வு பெற்று வாரும்!” என்றார் நம்பி. தம்மைத் தாமே மீண்டும் சுயபரிசோதனை செய்து பார்த்து, அந்தத் தகுதியும் தமக்கு இருப்பதை உணர்ந்து, பத்தாம் முறையாக நம்பியை நாடிச் சென்றார் ராமாநுஜர்.“வைணவனுக்குரிய பண்புகளோடு வாரும்!” என்று சொல்லி ராமாநுஜரைத் திரும்ப அனுப்பினார் நம்பி. ஒரு வைணவனுக்குரிய பண்புகள் யாவும் தமக்கு அமையப் பெற்றிருக்கின்றமையை உணர்ந்த ராமாநுஜர், பதினொன்றாம் முறை நம்பியைச் சென்று பற்றினார்.“நன்மக்களின் அபிமானம் பெற்று வாரும்!” என்றார் நம்பி. “நல்லார் பரவும் இராமாநுசன்” என்ற பாசுரத்துக்கேற்ப, நல்லோர்களின் அபிமானம் தமக்கு இருப்பதை உணர்ந்து கொண்டு, பன்னிரண்டாம் முறையாகத் திருக்கோட்டியூருக்கு எழுந்தருளினார்.“இறையடியார்களின் அபிமானம் பெற்று வாரும்!” என்று நம்பி சொல்ல, அது தமக்கு இருக்கிறதா என்று சுயபரிசோதனை செய்து, அந்தத் தகுதியும் இருக்கிறது என்பதை உறுதி செய்து கொண்டு பின் பதின்மூன்றாம் முறையாக நம்பியை நாடினார் நம் ராமாநுஜர்.“இறைவனின் அங்கீகாரம் பெற்று வாரும்!” என்றார் நம்பி. திருவரங்கநாதனே, “நம் இராமாநுசன்” என்று கூறி ராமாநுஜரை ஏற்கெனவே அங்கீகரித்துள்ளமையால், அந்தத் தகுதியும் தமக்கிருப்பதை உணர்ந்து, பதினான்காம் முறை தம் நடைபயணத்தை மேற்கொண்டார் ராமாநுஜர்.“இறைவன் ஒருவனுக்கே நாம் ஆட்பட்டவர் என்னும் எண்ணம் கிடைத்தபின் வாரும்!” என்றார் நம்பி. அதுவும் தமக்கிருப்பதை உறுதி செய்து கொண்டு, பதினைந்தாம் முறை சென்றார் ராமாநுஜர்.“இறைவனை அடைவதே ஒரே குறிக்கோள் என்னும் உறுதி கைவந்த பின் வாரும்!” என்றார் நம்பி. மீண்டும் சுயபரிசோதனை செய்த ராமாநுஜர், இந்த உறுதியும் தமக்கு இருப்பதை உணர்ந்தபின் பதினாறாம் முறையாக நம்பியிடம் சென்றார்.“இறைவனை அனுபவிப்பதே ஆனந்தம் என்னும் எண்ணம் கிடைத்தபின் வாரும்!” என்றார் நம்பி. அந்த எண்ணமும் தமக்குக் கைவந்திருப்பதை உணர்ந்த ராமாநுஜர், பதினேழாம் முறையாக நம்பியை நாடினார்.“குரு அருள் கிடைத்தபின் வாரும்!” என்றார் நம்பி. குருவான திருக்கோட்டியூர் நம்பியின் அருளும், அவருக்கும் குருவான ஆளவந்தாரின் அருளும் தமக்குண்டு என்பதை உணர்ந்து, பதினெட்டாம் முறை நம்பியின் திருவடிகளைப் பற்றினார் ராமாநுஜர்.இம்முறை, “அதிகாரி புருஷரே வாரும்!” என்று கூறி ராமாநுஜரை வரவேற்றார் திருக்கோட்டியூர் நம்பி. சுலோகத்தின் பொருளை உபதேசமாகப் பெறுகின்ற தகுதி ராமாநுஜருக்குக் கிடைத்து விட்டது என்பதால், அதிகாரி புருஷர் என்று அவரை அழைத்தார் திருக்கோஷ்டியூர் நம்பி.“ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜஅஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:”என்ற சரம சுலோகத்தின் பொருளை ராமாநுஜருக்கு உபதேசித்தார்.அவர் உபதேசித்த விஷயத்தின் சுருக்கம்:ஸர்வ தர்மான் பரித்யஜ்ய – நாம் செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவனுக்குச் செய்யும் பூஜையாக எண்ணி, அதன் பலனில் ஆசை வைக்காமல், இறைவனின் உகப்பையே பலனாக எண்ணிச் செய்ய வேண்டும். மற்றபடி, அந்தச் செயல்களை முக்தி அடைவதற்கான வழியாக எண்ணிவிடக் கூடாது.மாம் ஏகம் சரணம் வ்ரஜ – பிறவிப் பெருங்கடலைக் கடந்து இறைவனின் அடியைச் சேர, இறைவனின் திருவடிகளே வழி என்பதைப் புரிந்து கொண்டு, அவனது திருவடி நிழலில் அடைக்கலம் புக வேண்டும்.அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி – அவ்வாறு அடைக்கலம் புகுந்தவனின் அனைத்துப் பாபங்களையும் இறைவனே போக்கி, அந்தப் பிறவியின் முடிவிலேயே முக்தியை அருளுவார். மா சுச: – இறைவனிடம் அடைக்கலம் புகுந்தவன் அதன்பின் சோகம் கொள்ளக்கூடாது. இறைவன் நிச்சயம் காப்பார் என்ற உறுதியோடு இருக்க வேண்டும்.இவ்வாறு உபதேசம் செய்த பின், திருக்கோஷ்டியூர் நம்பி, “ராமாநுஜரே! நான் உங்களைப் பதினெட்டு முறை திருவரங்கத்திலிருந்து திருக்கோஷ்டியூருக்கு வரவைத்து, நன்கு பரீட்சை செய்து பார்த்து, அதன் பின் தான் உபதேசம் செய்துள்ளேன்!  அதேபோல் உங்களிடம் இந்த சரம சுலோகத்தின் பொருளைக் கேட்டுக் கொண்டு யாரேனும் வந்தால், அவரையும் இவ்வாறு நன்கு பரீட்சித்துப் பார்த்துப் பின்னர் தான் உபதேசிக்க வேண்டும்!” என்று கட்டளையிட்டார். “அப்படியே செய்கிறேன்!” என்று சொல்லி, அவரிடம் விடைபெற்றார் ராமாநுஜர்.ஆனால் இந்த மந்திர உபதேசத்தைப் பெற விழைந்த திருக்கோஷ்டியூரைச் சேர்ந்த சில அடியார்கள், ஏற்கனவே ராமாநுஜரிடம் சென்று, “உங்களையே திருக்கோஷ்டியூர் நம்பி இத்தனை தடவை பரிசோதித்துப் பார்க்கிறார் என்றால், எங்களுக்கெல்லாம் இந்த சுலோகத்தின் பொருளை அறிந்து கொள்ள வாய்ப்பே இல்லையே! அதை அறியாமல் நாங்கள் எப்படி முக்தி அடைவது? இந்தப் பிறவிப் பிணியிலேயே எங்களைப் போன்ற எளியவர்களும் பாமர மக்களும் உழன்று கொண்டே இருக்க வேண்டியது தானோ?” என்று வருந்திக் கூறினார்கள்.அப்போது ராமாநுஜர், “வருந்தாதீர்கள்! அனைவரும் முக்தி அடைய வேண்டும் என்பதே இறைவனின் விருப்பமாகும்! அடியேனுக்கு அந்த சுலோகத்தின் பொருள் கிடைத்தவுடன், உடனேயே உங்களுக்கு உபதேசம் செய்வேன்!” என்று வாக்களித்திருந்தார். அதனால் இப்போது திருக்கோஷ்டியூர் நம்பியிடம் உபதேசம் பெற்றவுடன், அந்த அடியார்களைச் சென்று சந்தித்தார் ராமாநுஜர். திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோவிலில் உள்ள தெற்காழ்வான் என்ற நரசிம்மரின் சந்நதிக்கு அருகில் அவர்களை அழைத்துச் சென்றார். அங்கே மறைவான இடத்தில் வைத்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரகசியமான இந்த அர்த்தத்தை வெளியிட்டார்.இச்செய்தியைக் கேள்வியுற்ற திருக்கோஷ்டியூர் நம்பி, அவ்விடத்துக்கு வந்து “ராமாநுஜா! குருவின் வாக்கையே மீறிவிட்டாய்! பரிசோதித்துப் பார்க்காமல் சரம சுலோகத்தின் பொருளைப் பலருக்கும் நீ சொல்லி விட்டாய்! உனக்கு இனி நரகந்தான்!” என்றார்.அதற்கு ராமாநுஜர், “சுவாமி! அடியேன் ஒருவன் நரகம் சென்றால் பரவாயில்லை. இந்த சுலோகத்தின் பொருளை அறிந்து, இறைவனிடம் அடைக்கலம் புகுந்து, இனி இத்தனை பேரும் முக்தி அடையப் போகிறார்களே! அடியேனுக்கு அதுவே போதும்!” என்றார்.மேலும், “தகுதி இல்லாதவர்க்கு அர்த்தங்களை உபதேசிக்க வேண்டுமென்று அடியேன் சொல்லவில்லை. ஆனால், உயர்ந்த குடிப்பிறப்பு, கல்வி ஞானம், செல்வம், அந்தஸ்து, பாலினம் போன்ற விஷயங்களைத் தகுதியாக வைக்க வேண்டாம். இறைவனை அடைய வேண்டும் என்ற துடிப்பு அல்லது உபதேசம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறதல்லவா? அந்த ஆசையையே தகுதியாக வைக்க வேண்டும். ஆசை உடையோர் அனைவருக்கும் அவருடைய குலம், கல்வி, அந்தஸ்து, பாலினம் எதையும் பாராமல் அர்த்தங்களை உபதேசிக்க வேண்டும்!” என்று அடியேன் கருதுகிறேன் என்றார் ராமாநுஜர்.ராமாநுஜரின் உயர்ந்த உள்ளத்தைக் கண்டு வியந்த திருக்கோஷ்டியூர் நம்பி, “எம்பெருமானாரே!” என்று அவரை அழைத்தார். அன்று முதல், எம்பெருமானார் என்ற திருப்பெயர் ராமாநுஜருக்கு ஏற்பட்டது. “இனி வைணவ நெறி ‘எம்பெருமானார் தரிசனம்’ என்று தங்கள் பெயரை இட்டு அழைக்கப்படும்!” என்றும் கூறினார் திருக்கோஷ்டியூர் நம்பி.திருவரங்கத்துக்குத் திரும்பினார் ராமாநுஜர். அசை உடையோர் பலரை இறைவனின் திருவடிகளில் சேர்க்கும் மிகப்பெரிய தொண்டினைச் செய்து வந்தார். சில காலம் கடந்தது.திருக்கோஷ்டியூர் நம்பி திருவரங்கம் வருதல்:திருவரங்கத்தில் ராமாநுஜரின் உணவில் சிலர் விஷம் கலந்து விட்டார்கள். இதை அறிந்த ராமாநுஜர், “ஒரு துறவியானவன் எந்த உயிரின் மனமும் நோகாதபடி வாழ வேண்டுமே! அவ்வாறிருக்க, ஒருவன் எனக்கு விஷம் வைத்திருக்கிறான் என்றால், நான் அவன் மனதை எவ்வளவு தூரம் நோக வைத்திருப்பேன்!” என்று எண்ணி வருந்தி, உண்ணா விரதம் இருக்கத் தொடங்கினார்.இச்செய்தியைக் கேள்வியுற்று திருவரங்கத்துக்கு வந்தார் திருக்கோஷ்டியூர் நம்பி. நம்பியின் வரவை அறிந்த ராமாநுஜர் அவரைத் தேடிச் செல்ல, காவிரி மணலில் திருக்கோஷ்டியூர் நம்பி நின்று கொண்டிருப்பதைக் கண்டார். அப்போது மதியம் பன்னிரண்டு மணி. தீயாய்க் கொதிக்கும் காவிரி மணலில் விழுந்து திருக்கோஷ்டியூர் நம்பியை வணங்கினார் ராமாநுஜர். குருவுக்கு நமஸ்காரம் செய்யும் போது, அவர் “எழுந்திரு!” என்று சொல்லும் வரை சீடர்கள் தரையிலேயே விழுந்து கிடப்பார்கள். ராமாநுஜர் வெகு நேரமாகக் காவிரி மணலில் விழுந்து நமஸ்கரித்தபடி இருக்க, திருக்கோஷ்டியூர் நம்பி எதுவுமே சொல்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.இதைக் கண்ட ராமாநுஜரின் சீடர்களுள் ஒருவரான கிடாம்பியாச்சான், ராமாநுஜரை எழுப்பித் தமது மடியிலே கிடத்திவிட்டுத் திருக்கோஷ்டியூர் நம்பியைப் பார்த்து, “நீர் ஒரு குருவா? மெல்லிய தாமரையை அடுப்பில் இட்டு வாட்டுவது போல், இமையில் வளர்ந்த விழியை எரியும் நெருப்பில் இடுவது போல், கொடியில் பிறந்த மலரைக் கொடிய புயலின் கையில் தருவது போல், எங்கள் ராமாநுஜரின் உடலைக் கொதிக்கும் மணலில் இப்படி வாட்டுகிறீரே! அவர் வாடுவதைக் கண்டும் கருணையில்லாமல் நிற்கிறீரே!” என்று கோபத்துடன் பேசினார்.அதுவரை மௌனமாக இருந்த திருக்கோஷ்டியூர் நம்பி, ராமாநுஜரின் அனைத்துச் சீடர்களையும் பார்த்து, “ராமாநுஜருக்கு இவ்வளவு சீடர்கள் இருந்தாலும், அவர் என்னை நமஸ்கரித்து இங்கே விழுந்து கிடந்த போது நீங்கள் யாரும் அவரை எழுப்பவில்லை. ஏனெனில், அவ்வாறு எழுப்பினால் உங்களுக்கு நான் சாபம் கொடுப்பேனோ என்ற அச்சம் உங்களுக்கு இருந்தது. ஆனால் கிடாம்பி ஆச்சான் மட்டும் தான் தன்னைப் பற்றிக் கவலைப் படாமல், ராமாநுஜர் மேல் அக்கறையுடன் அவரை வந்து எழுப்பினார். அப்படிப்பட்ட ஒருவர் தான் இனி ராமாநுஜருக்கு உணவு சமைத்துப் பரிமாற வேண்டும்! ராமாநுஜருக்காகத் தன் உயிரையும் கொடுக்கத் துணிந்துவிட்டார் இவர்! எனவே இனியும் ராமாநுஜரின் உணவில் யாரேனும் விஷம் கலக்க முயன்றால், இந்தக் கிடாம்பி ஆச்சான் அதை உண்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டாவது ராமாநுஜரைக் காத்து விடுவார்” என்றார்.அப்போது திருக்கோஷ்டியூர் நம்பியை வியப்புடன் பார்த்தார் ராமாநுஜர். “ஆம் ராமாநுஜா! உன் உணவில் யாரோ விஷம் கலந்து விட்டதாகக் கேள்விப் பட்டேன். இனி அவ்வாறு நடக்கக் கூடாதல்லவா? தனக்கு ஆபத்து நேர்ந்தாலும் பரவாயில்லை, நீ நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணும் கிடாம்பியாச்சான் போன்ற ஒருவர் உனக்கு மடைப்பள்ளித் தொண்டு செய்தால் தான் இனி உனக்கு எந்த ஆபத்தும் நேராமல் இருக்கும்!” என்று கூறினார் திருக்கோஷ்டியூர் நம்பி.திருக்கோஷ்டியூர் நம்பிக்கு தேவகி என்றொரு மகளும், தெற்காழ்வான் என்றொரு மகனும் இருந்தார்கள். திருக்கோஷ்டியூர் நம்பி இருவரையுமே ராமாநுஜருக்குச் சீடர்களாக ஆக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.தொகுப்பு: திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

The post ராமாநுஜருக்கு உபதேசித்த திருக்கோஷ்டியூர்நம்பி appeared first on Dinakaran.

Tags : Thirkoshtiyurnambi ,Ramanuja ,Tirkoshtiyur Nambi ,Selvanambi ,Tirkoshtiyur, Sivagangai district ,Selvannambi ,Andal ,Periyazwar ,Tirukoshtiyurnambi ,Ramanujar ,
× RELATED சித்திரை (ஈ) தந்த முத்திரை சீடர்கள்