×

மகத்தான வாழ்வருளும் பட்டுக்கோலவிழி பத்ரகாளி

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பது பழமொழி. தெய்வத்தை குழந்தை போல் கொண்டாடி மகிழும் அற்புத ஆலயம் சென்னை மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி அருகே உள்ளது.  ஆலயமே ஆதி தங்க அதிசய அற்புத அஷ்டபுஜ வடபத்ர ஜய ஸ்வர்ண பயாபஹா பட்டுக்கோலவிழி பத்ரகாளி ட்ரஸ்ட் மூலம் இயங்குகிறது. மாலா எனும் பக்தையின் 30 வருட தேவி உபாசனையில் மனமகிழ்ந்த தேவியின் அருளுரைப்படி எழுப்பப்பட்ட ஆலயத்தில் வழிபாடுகள் அனைத்தும் தேவியின் உத்தரவின் பேரிலேயே நடைபெற்று வருகிறது.ஐந்து நிலை ராஜகோபுரத்தின் இருபுறங்களிலும் பத்து வித ரேணுகா காளிதேவியரும், அஷ்டமாதர்களும் சுதை வடிவில் எழிலுற அருட்காட்சியளிக்கின்றனர். கோபுர வாயிற்படியில் உள்ள கதவுகளில் திருமாலின் தசாவதார வடிவங்களும் திதி நித்யா தேவியரும் அற்புதமான சிற்ப வடிவில் செதுக்கப்பட்டுள்ளதை தரிசித்து ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் ஹேரம்பகணபதி இடப்புறத்திலும், பாலமுருகன் வலப்புறத்திலும் சந்நதி கொண்டருள்கின்றனர். இடப்புறம் ஊஞ்சலில் அதிசயகாளியின் உற்சவத் திருமேனி சர்வலங்காரங்களுடன் திகழ்கிறார். அவளுக்கு நேரெதிரே கைலாச கபாலியை தரிசிக்கலாம். அவர் கருவறையில் மங்களகாளி எனும் பச்சைக்காளியோடு லிங்க உருவில் தனி கோஷ்டத்தில் ஈசன் அருள்கிறார். கைலாயத்தில் ஏற்படும் மனஅமைதியை இந்த சந்நதி தருவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.  அதையடுத்து பச்சைப்பட்டுக் கோலவிழியம்மனின் எழிலார்ந்த சுதை வடிவம் உள்ள சந்நதியை தரிசிக்கலாம். தன்னை வழிபடுவோர்க்கு வீரம், வெற்றி, மன அமைதியைத் தரும் அம்பிகை இவள். கோஷ்டத்தில் ராஜமாதங்கியை தரிசிக்கலாம்.  பச்சைப்பட்டு சந்நதிக்கு நேர் எதிரே அசுரனை வதைத்து சிங்கத்தின் மேல் அமர்ந்த சப்தஸ்வரகாளியை தரிசிக்கலாம். தேவியின் இருபுறமும் வாராஹி, மாதங்கி போன்றோரின் உற்சவ விக்ரகங்களை தரிசிக்கலாம். ஊமையையும் பேச வைக்கும் ஆற்றல் படைத்தவளாம் இந்த சப்தஸ்வரகாளி. படிப்பில் மந்தமான குழந்தைகள் இந்த தேவியை தரிசித்தால் படிப்பில் முன்னேற்றம் கிட்டுமாம். இந்த அம்மனின் கோஷ்டத்தில் வாராஹி அருள்கிறாள்.  அதை அடுத்து பிராகார வலம் வரும் போது சஞ்சீவினி ஆஞ்சநேயர், அபர்ணாகாளி, ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் சூரியபகவான் போன்றோரின் சந்நதி உள்ளது.பிரதான கருவறையின் முன் துவஜஸ்தம்பம் காட்சியளிக்கிறது. கருவறையில் ஓங்காரியாய் ஒய்யாரியாக கைலாச அதிசயகாளி பார்வதியின் அலங்காரத் திருவுருவை தரிசிக்கலாம். பேசும் கண்களுடனும், பேரெழிலுடனும் கொலுவீற்றிருக்கும் தேவியின் சந்நதியை விட்டு அகலவே மனம் மறுப்பது நிஜம்.  மழலை வரம் வேண்டுவோர் இந்த தேவிக்கு ஆலயத்தின் சார்பில் நடத்தப்படும் சாக்லேட் அர்ச்சனை செய்தால் அவர்களுக்கு தட்டாமல் மழலை வரம் தரும் தயாபரியாம் இவள். மேலும் சாக்லேட் அர்ச்சனை செய்தால் தடைபட்ட திருமணம் தடைநீங்கி நிச்சயமாதல், வழக்கு களில் வெற்றி, குடும்ப ஒற்றுமை போன்றவைக்கும் திருவருள்பாலிப்பவளாம் இந்த அம்பிகை. அதேபோன்று நோய்வாய்ப்பட்டவர்கள் குங்குமார்ச்சனை செய்வதாக வேண்டிக்கொண்டால் நோய்கள் இருந்த இடமே தெரியாமல் மறைந்து விடும் அற்புதம் இத்தலத்தில் நடக்கிறதாக பக்தர்கள் கூறுகின்றனர். கருவறையின் மல்லிகை, எலுமிச்சை, ஊதுவத்தி, நெய் தீப வாசனையில் புன்சிரிப்போடு அமர்ந்தருளும் நாயகியின் சிரிப்பு நானிருக்க பயமேன் எனக் கூறாமல் கூறுவது போல் உள்ளது. தேவியின் கோஷ்டங்களில் காளிகாம்பாள், சண்டி, விஷ்ணுதுர்க்கை, தன்வந்திரிபகவான் போன்றோர் அருள, கருவறையின் பின்புறம் நின்ற நிலையில் அர்த்தமேருவுடன் கூடிய தங்ககாளி சந்நதி கொண்டுள்ளாள். அவளுக்கு எதிரே தட்சிணாமூர்த்தி, நந்தியம்பெருமான், ஆனந்த தாண்டவ நடராஜர், சிவகாமி, பைரவர் போன்றோரின் சந்நதி உள்ளது. ஆலயத்தின் தினமும் காலையில் தேவர்கள் வாசம் செய்யும் கன்றுடன் கூடிய காமதேனு பசுவின் சிற்பத்திற்கு ஸ்ரீஸுக்தம் சொல்லி கோபூஜை, அர்ச்சனையும், ஐராவத யானைக்கு ஸம்பத்கரீ மந்திரத்தால் அர்ச்சனையும் கஜபூஜையும் நடைபெறுகிறது. பிராகார வல முடிவில் வள்ளி தேவசேனா சமேத ஷண்முகரையும், லட்சுமி நாராயணரையும் தரிசிக்கலாம். பிராகார மேல் சுவர் முழுவதும் தெய்வானை திருக்கல்யாணம், மாங்கனி கைலாச காட்சி, கண்ணப்பநாயனார், திருவண்ணாமலை ஈசன் அம்பிகை, ஸ்ரீநகர லலிதாம்பிகை, கஜேந்திர மோக்ஷம், காளிங்கநர்த்தன கண்ணன், ராதாகிருஷ்ணர், ராமர் செய்யும் ராமேஸ்வர பூஜை காட்சி, னிவாச கல்யாணம், ப்ரத்யங்கிரா, சரபேஸ்வரர் போன்ற வண்ணசுதைச்சிற்பங்கள் கண்களையும் கருத்தையும் கவர்கின்றன. நவகிரகங்கள் தேவிக்கு கட்டுப்பட்டவை. அவை தேவியின் காலடியில் தேவி இட்ட கட்டளை நிறைவேற்றக் காத்திருப்பவை என்பதை ஆதிசங்கரர் தன் ஸௌந்தர்யலஹரியின் அஹ ஸுதே: எனும் துதியில் குறிப்பிட்டுள்ளார். எனவே இத்தலத்தில் நவகிரக சந்நதி இல்லை. கருவறையின் முன் உள்ள அர்த்த மண்டபத்தின் மேல் விதானத்தில் நவநாயகர்களும் தத்தமது வாகனங்களோடு தேவியை வணங்கிய வண்ணம் உள்ளனர். ஆடி மாதம் 32 நாட்களும் 32 வகையான அலங்காரங்கள் இந்த அம்பிகைக்கு செய்யப்பட்டு பஞ்சகிளை தீபம், நட்சத்திர தீபம், அடுக்கு தீபம், தட்டு குடம் தீபம், சர்வோபசார தீபங்கள், சிவ நந்தி தீப, தாமரை தீபங்கள் 6, 9 தங்கதீபங்கள் போன்ற தீபங்கள் காண்பிக்கப்பட்டு பெண்கள் அனைவரும் கோலாட்டம் போட்டு துதிகள் கூறி அம்பிகையை ஆராதிக்கின்றனர். முழுவதுமே பெண்களால் பூஜிக்கப்படும் ஆலயமாக இத்தலம் விளங்குவது அதிசயமான அமைப்பாகும். பௌர்ணமி தினங்களில் தேவி கட்கமாலா, தேவி மகாத்மியம், நவாவரண பூஜை என ஆலயத்தில் நடத்தப்படுகிறது.அந்தந்த தெய்வங்களுக்குரிய விசேஷ நாட்களில் அந்தந்த தெய்வங்கள் ஆலய பிராகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்செய்வது இத்தல வழக்கம். வாராஹி நவராத்திரி, சாரதா நவராத்திரி, வசந்த நவராத்திரி, மாதங்கி நவராத்திரி போன்ற நான்கு நவராத்திரிகளும் ஆலயத்தில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.  நினைத்ததை நினைத்தபடியே நிறைவேற்றித்தரும் அஷ்டகாளிகளும் அருளும் இத்தலத்தை  தரிசித்து ஆனந்த வாழ்வை பெறுவோம். தொகுப்பு: ந.பரணிகுமார்

The post மகத்தான வாழ்வருளும் பட்டுக்கோலவிழி பத்ரகாளி appeared first on Dinakaran.

Tags : Pattukolavizhi Bhatrakali ,Chennai ,Mylapore ,
× RELATED முதலீட்டு பணத்திற்கு 10 முதல் 11% வட்டி...