×

ஆறுதல் தருவோனே ஆறுதலையோனே

அருணகிரி உலா-103
பல  புனிதத் தலங்களின் பெயர்களைத் தொகுத்து ஒரே பாடலில் அவற்றை அமைத்துப் பாடுவது க்ஷேத்ரக் கோவை எனப்படும்.

‘‘ ஆரூர் தில்லை அம்பலம் வல்லம் நல்லம்வடகச்சியும் அச்சிறுபாக்க நல்லகூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி ’’ – எனத் துவங்கி சம்பந்தப்பெருமான் க்ஷேத்ரக் கோவைப் பதிகம் பாடியுள்ளார். தமது ஞான குருவான புகலியில் வித்தகரைப் பின்பற்றி அருணகிரிநாதரும் 29 திருத்தலங்களின் பெயரை வைத்து க்ஷேத்திரக் கோவை பாடியுள்ளார். அப்பாடலை இங்கு பார்ப்போம்.‘‘கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம்உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடுகொன்றை வேணியர் மாயூர மம்பெறு …… சிவகாசி கொந்து லாவிய ராமே சுரந்தனிவந்து பூஜைசெய் நால்வேத தந்திரர் கும்பு கூடிய வேளூர் பரங்கிரி …… தனில்வாழ்வேசெம்பு கேசுர மாடானை யின்புறுசெந்தி லேடகம் வாழ்சோலை யங்கிரிதென்றன் மாகிரி நாடாள வந்தவ …… செகநாதஞ்செஞ்சொ லேரக மாவா வினன்குடிகுன்று தோறுடன் மூதூர் விரிஞ்சைநல்செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில் …… வருதேவேகம்பை மாவடி மீதேய சுந்தரகம்பு லாவிய காவேரி சங்கமுகஞ்சி ராமலை வாழ்தேவ தந்திர …… வயலூராகந்த மேவிய போரூர் நடம்புரிதென்சி வாயமு மேயா யகம்படுகண்டி யூர்வரு சாமீக டம்பணி …… மணிமார்பாஎம்பி ரானொடு வாதாடு மங்கையர்உம்பர் வாணிபொ னீள்மால் சவுந்தரிஎந்த நாள்தொறு மேர்பாக நின்றுறு …… துதியோதும்இந்தி ராணிதன் மாதோடு நன்குறமங்கை மானையு மாலாய்ம ணந்துலகெங்கு மேவிய தேவால யந்தொறு …… பெருமாளே. ’’பாடலின் பொருள் :-கும்பகோணம், அதனுடன் ஆரூர், சிதம்பரம், தேவர்கள் வாழும் சீர்காழி, விளங்கும் கொன்றை மலர் கொண்ட ஜடையை உடைய சிவபெருமான் வாழும் மாயூரம் (மயிலாடுதுறை), அழகிய கங்கையையும், மங்களகரத்தையும் உடைய காசித்தலம்,பக்தர் கூட்டம் உலவுகின்ற ராமேச்வரம், ஒப்பற்ற நால் வேத விற்பன்னர்கள் பூஜை செய்யக் கூடியுள்ள வேளூர்  (வைத்தீசுவரன் கோயில்) திருப்பரங்குன்றம் ஆகிய திருத்தலங்களில் குடி கொண்டிருக்கும் செல்வமே!செம்புகேசுரம் (திருவானைக்கா), ஆடானை  (திருவாடானை), நீ மிக இன்பமுடன் வாழும் திருச்செந்தூர், புனல் வாதம் செய்த ஞான சம்பந்தரின் திருப்பதிகம் நீரை எதிர்த்துச் சென்று பின் ஒதுங்கிய திரு ஏடகம், நீ வாழும் ஆறு ஆற்றுப்படைத் தலங்களுள் ஒன்றான பழமுதிர் சோலை தென்றல் காற்றுக்குப் பிறப்பிடமான பொதிகை மலை முதலான தலங்களில் குடிகொள்ள வந்தவனே! ஜெகந்நாதம். (இடையில் வடக்கிலுள்ள பூரி பற்றிய குறிப்பு வந்துள்ள காரணம் புரியவில்லை பல ஊர்களிலும் குடிகொண்டிருக்கும் முருகப்பெருமான் இந்த பிரபஞ்சத்துக்கே நாதனாயிருப்பவன் என்ற பொருளிலும் இவ்வாறு கூறியிருக்கலாம்) செஞ்சொல் ஏரகம் (செவ்விய பிரணவ உபதேசத்தை தந்தைக்களித்த திருவேரசும் எம் சுவாமிமலை), சிறந்த திருவாவினன்குடி, குன்று தோறாடல் (அவன் வசிக்கும் குறிஞ்சி நில மலைத் தலங்கள்) மூதூர் எனப்படும். திருப்புனவாயில், திருவிரிஞ்சை எனப்படும் விரிஞ்சிபுரம், முதலான தலங்களில் வீற்றிருக்கும் செம்பொன் மேனியனே! சோழர்களில் தலைநகரமாம் வஞ்சி எனப்படும் கருவூரில் எழுந்தருளியுள்ள தேவனே! கம்பாநதி விளங்கும் காஞ்சி மாநகரில் மாமரத்தின் அடியில் காட்சி தரும். அழகனே! சங்கினங்கள் உலாவுகின்ற காவேரி கடலுடன் சங்கமிக்கும் பூம்புகார் பட்டினம் ( பல்லவனீச்சரம் காவேரி சங்கமுகம்) சிராமலை எம் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் வாழும் தேவ சேனாபதியே! பூத சேனைகளுக்குத் தலைவனே! வயலூரின் வாழ்வே!நறுமணம் வீசும் சோலைகள் நிறைந்த திருப்போரூர், நீ நடனம் புரிந்த தென் சிவாயம் எனப்படும் திருவாட்போக்கி, பிரமனது தலை துண்டிக்கப்பட்ட திருக்கண்டியூரில் எழுந்தருளிய சுவாமியே! கடம்ப மாலை அணிந்தவனே!சிவபெருமானோடு நடன தர்க்கம் செய்த காளி, அவளது தோழிகள், சரஸ்வதி, பொன்நிறமான லட்சுமி ஆகியோர் அனைவரும் தினந்தோறும் உள்ளத்து எழுச்சியுடன் நின்று மன நிறைவுடன் போற்றும் இந்திராணியின் அருமை மகளான தேவசேனையுடன், நன் குறக்குலப் பெண்ணாகி.. மான் போன்ற (மான் மகளாம்) வள்ளியை ஆசையுடன் திருமணம் செய்து கொண்டு, உலகத்தில் தெய்வ வழிபாடு நடக்கும் இடங்கள் அனைத்திலும் தன் சாந்தித்யத்தை வெளிப்படுத்தும் பெருமை மிகுந்தவனே!உலகெங்குமுள்ள கோயில்களில் விளங்கும் அனைத்து தெய்வங்களையும் முருகப் பெருமானாகவே பாவிக்கும் அருணகிரியாரின் மனப்பான்மை நம்மை வியக்க வைக்கிறது. இப்பாடலில் அவர் குறிப்பிட்டிருக்கும் திருத்தலங்களைப் பற்றி இங்கு சற்று விரிவாகப் பார்ப்போம். நமக்கு மிகவும் பரிச்சயமான கும்பகோணத் திருத்தலத்தை முதலில் வைத்துப் பாடலைத் துவங்குகிறார்.‘‘சிவக் கொழுஞ் சுடரே ! பரனாகியதவத்தில் வந்தருள் பால க்ருபாகர !திருக் குடந்தையில் வாழ் முருகா! சுரர் பெருமாளே!’’என்கிறார். கும்பகோணத் திருப்புகழில், தேவாரத்தில் குடமூக்கு என்று அழைக்கப்படும் இத்தலத்தில் ‘குடந்தைக் காரோணம் எனும் காசி விசுவநாதர் கோயில், குடந்தைக் கீழ்க்கோட்டம்’ எனும் நாகேஸ்வர சுவாமி கோயில், ‘குடமூக்கு’ எனப்படும் கும்பேசுவரர் கோயில் எனும் மூன்று தேவாரப் பாடல் பெற்ற கோயில்கள் உள்ளன. தேவார வைப்புத் தலமாகிய சோமீச்சரம் எம் சோமநாதர் கோயிலிலும் கும்பேசுவரர் கோயிலிலும் அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியிருக்கிறார்.பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் நடக்கும் மகாமகப் பெருவிழா மிகவும் பிரசித்திப் பெற்றது. மாசி மாதத்தில், குரு சிம்ம ராசியிலும், கதிரவன் கும்ப ராசியிலும் வரும் போது, முழு நிலா நாளில் மகம் நட்சத்திரமும் ரிஷப லக்னமும் கூடும். நன்னாளே மகாமகத் திருநாள் ஆகும். இந்நாளில் கங்கை  தன்னிடத்தே படிந்தவர்களின் பாவங்கள் தனக்குக் கூடுவதால், இங்குள்ள மகாமகத் தீர்த்தத்திற்கு வந்து அவற்றைக் கழுவிக் கொள்கிறாள் என்பது புராணம். ‘‘கங்கை, மாமகம்தோறும் வந்து தற்படிந்தோர் விட்டுப்போம் ‘அகம்’ போக மூழ்கும் புனித நீர்ப்பதியைக் காண்மின்’’ என்று கூறுகிறது திருவிளையாடற் புராணம்.‘‘தாவி (ஜம்முநகரத்திலுள்ளது) முதற், காவிரி நல் யமுனை, கங்கை, சரஸ்வதி பொற்றாமரை புட்கரணி, தெண்ணீர்க் கோவியொடு குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தைக் கீழ்க் கோட்டத்து எம் கூத்தனாரே ’’என்கிறார் அப்பர். கும்பகோணத்தை மையமாகக் கொண்டு சுவாமி மலை, திருவலஞ்சுழி, திருச்சத்தி முற்றம், பழையாறை, கொட்டையூர், திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், திருபுவனம், திருப்பந்தணை நல்லூர், திருப்பனந்தாள், மருத்துவக்குடி, திருவாவடு துறை போன்ற எண்ணற்ற திருப்புகழ்த் தலங்களை குறுகிய காலத்தில் தரிசித்து வரலாம். இத்தகு புண்ய பூமி என்பதனால் தானே அருணகிரியார் கோயில் நகரமான கும்பகோணத்தை முதலாக வைத்து க்ஷேத்ரக் கோவை திருப்புகழைத் துவங்கினார் போலும்!‘சம்பந்தப் பெருமான் முதலில் ஆரூர் தில்லை அம்பலம்’ என்று வைத்து தன் க்ஷேத்ரக் கோவைப் பாடலை எழுதியுள்ளார். அருணகிரி நாதரும் இதே போன்று ஆரூர், சிதம்பரம் ஆகிய தலங்களை முதலடியிலேயே பாடுகிறார். இவற்றுள் திருவாரூரைப் பற்றி முதலில் பார்ப்போம்.‘‘ஆரூரன் சந்நிதிபோல் ஆரூரன் ஆலயம்போல்ஆருரன் பாதத்தின் அழகு போல் ஆரூர் மருவெடுத்தகஞ்சமலர் வாலி போல் நெஞ்சேஒரு இடத்தில் உண்டோ உரை !’’என்று ஒரு பழந்தமிழ்த் தனிப்பாடல். ஊரில் கண்ணென விளங்குவது தியாகராஜ சுவாமி கோயில். ஏழு கோபுரங்கள், ஐந்து பிராகாரங்கள், பன்னிரண்டு மண்டபங்கள், நூற்றுக் கணக்கான சந்நதிகள், எண்ணற்ற புண்ணிய தீர்த்தங்கள் இவ்வளவும் அடங்கிய பெருங்கோயில். கோயில் 15 வேலி நிலமுடையது என்பதை ‘‘குளம், வாவி, மதில் ஐவேலியாம் திருவாரூர் தியாகராஜர்’’ என்கிறது திருவாரூர்க் கோவை. பஞ்சபூதத் தலங்களுள் பிருத்வி (மண்) தலம். ஆறாதாரங்களுள் மூலாதாரத் தலம். அருணகிரி நாதர் பாடுகிறார்.   ‘‘ நீதான் எத்தனையாலும் நீடுழிக்ருபையாகி மாதானத் தனமாக மாஞானக் கழல் தாராய்வேதா, மைத்துன வேளே, வீரா, சற்குணசீலா,ஆதாரத் தொளியானே ! ஆரூரிற் பெருமாளே’’(முருகா! நீ தான் எல்லா வகையிலும், என்மீது நீண்ட ஊழிகாலம் வரையில் கிருபாகரனாகி, மேலான ஞான பீடமான உன் திருவடிகளைத் தந்தருள்வாயாக! பிரம்மனின் மைத்துன வேளே! வீரனே! நற்குணசீலனே! ஆறாதாரங்களின் ஆதார ஒளியாய் விளங்குபவனே, திருவாரூர்ப் பெருமாளே!)தன் மகன் ஏறிச் சென்ற தேரின் அடியில் சிக்கி மடிந்த கன்றின் தாயான பசுபட்ட துயரத்தைச் சகிக்காமல், தன் மகனே பட்டு மடியும் படி அவன் மீது தேர் செலுத்திய மனுநீதிச் சோழன் அரசு செலுத்திய தலம் திருவாரூர். இவ்வரலாற்றையும் அருணகிரியார் பின் வருமாறு பாடுகிறார்.‘‘சுரபி மகவினை யெழு பொருள் வினவிடமவி னெறி மணி அசைவுற விசைமிகுதுயரில் செவியினி லடிபட, வினவு மினதிதீதுதுணிவிலிது பிழை பெரிதென வருமநுஉருகி அரசுர சிவசிவ பெறுமதொர்சுரபி அலமர விழிபுனல் பெருகிட நடுவாகப்பரவி யதனது துயர் கொடு நடவியபழுதின் மதலையை யுடலிரு பிளவொடுபடிய ரதமதை நடவிட மொழிபவன் அருள் ஆரூர்’’என்பது அப்பாடல் ,கோயிலும், குளமும் ‘கமலாலயம்’ எனும் ஒரே பெயரிலேயே அழைக்கப்படுகின்றன. கங்கை நதிக்கரையில் சிறப்புற்ற 64 தீர்த்தங்களுக்கு இணையாக கமலாலயமும் 64 தீர்த்தங்களைக் கொண்டுள்ளதோடு, நீராழி மண்டபத்தின் நடுவே நாகநாதரும் எழுந்தருளியுள்ளார். இங்குள்ள தேர் மிகவும் பிரசித்திப் பெற்ற, அழகிய முப்பதடி உயரமுள்ள தேர் ஆகும்.தேவி கமலாம்பிகை, 51 சக்தி பீடங்களுள் முதன்மை பீடமாகத் திகழ்பவள். திரு மூலத்தானத்தில் வன்மிக நாதர் எனும் புற்றிடங் கொண்டு. எழுந்தருளியுள்ளார். வலப்புறம் சோமகுலாம்பிகை. அடுத்ததாக நாம் காண்பது தியாகராஜர். இந்திரனுக்காக வலன் எனும் அசுரனைத் தோற்கடிக்க உதவிய முசுகுந்தனிடம், ஏதாவது பரிசைக் கேளுங்கள்’என்று இந்திரன் கூற திருமாலே பூசித்த தியாகேசர் திருமேனியைத் தனக்குத் தரும்படிக் கேட்டு விட்டான் முசுகுந்தன்.இதை எதிர்பார்க்காத இந்திரன் அதே போல ஏழு திருமேனிகளைக் கொடுத்து எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என, முக்கண்ணன் திருவருளால் முசுகுந்தன் இந்திரன் பூசித்த அசல் திருமேனியை இனங் காட்டினான். எல்லா திருமேனிகளையுமே இந்திரன் முசுகுந்த னுக்கு அளித்திட, தியாகேசர் விரும்பி வந்து திருவாரூரில் அமர்ந்து விட்டார். ஏழு திருத்தலங்களில் இந்திரன் அளித்த திருவுருவங்கள் சப்த விடங்கத் தலங்களில் குடிகொண்டன. இத்தகு பெருமை வாய்ந்த ஆரூர்த் தலத்தை அருணகிரியார் க்ஷேத்ரக் கோவையில் இரண்டாவதாக வைத்துப் பாடியுள்ளார்.(உலா தொடரும்)தொகுப்பு: சித்ரா மூர்த்தி

The post ஆறுதல் தருவோனே ஆறுதலையோனே appeared first on Dinakaran.

Tags : Arunagiri Ula-103 ,
× RELATED அருள்மணம் கமழும் அருணஜடேஸ்வரர்