×

யாழைப் பழித்த மொழியாள்

நவராத்திரி ஒன்பது நாள்களும் கோயில்களிலும் வீடுகளிலும் கொலு வைத்து கொண்டாடி வருகின்றனர். முதல் மூன்று நாள்கள் அன்னையை துர்க்கை வடிவிலும் அடுத்த மூன்று நாள்கள் மகாலட்சுமி வடிவிலும் அடுத்த மூன்று நாள்கள் சரஸ்வதி வடிவிலும் வணங்குவது மரபு. நவராத்திரி கொண்டாட்டத்தின் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கு உரியன. கல்விக் கடவுளாகப் போற்றப்படும் சரஸ்வதி தேவிக்கு சில இடங்களில் மட்டுமே கோயில்கள் உள்ளன. இந்த நாட்களில் தமிழகத்திலுள்ள எல்லா சரஸ்வதி தேவி கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. யானையின் துதிக்கை வடிவான வீணையினை எப்போதும் அவர் கையில் மீட்டப்பட்டு இருக்கும். ஆனால் தஞ்சாவூர் மாவட்டம், ‘வேதாரண்யம்’ திருத்தலத்தில் உள்ள சரஸ்வதி தேவி கையில் மட்டும் வீணை இல்லை. இது போன்ற வடிவம் வேறு எந்த தலத்திலும் இல்லை. இந்தக்கோயிலில் இருக்கும் அம்மனின் பெயர் ‘யாழைப் பழித்த மொழியாள்’. அதாவது யாழைவிட, இனிமையான ஒலியை உடைய குரல்வளம் கொண்டவளாம். அப்படிப்பட்ட அம்மன் முன் வீணை எதற்கு என்பதால் சரஸ்வதி தேவி கையில் வீணை இல்லையாம்.திருவாரூர் – மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் ‘பூந்தோட்டம்’ என்ற ஊருக்கு அருகிலுள்ள கூத்தானூரில்தான் சரஸ்வதி தேவிக்கு தனிக்கோயில் உள்ளது. சரஸ்வதி தேவி தவக்கோலத்துடன் வெண்தாமரை மலரில் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். இங்குள்ள அம்மனின் வீணை கைகளில் தவழாமல் மடியில் இருப்பது தனிச்சிறப்பாகும். நவராத்திரியின்போது அன்னையின் திருப்பாதங்களை தம் கைகளால் தொட்டு வணங்கிட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது. இதற்காக கருவறையில் இருக்கும் அம்மனின் திருப்பாதங்கள் அர்த்த மண்டபம் வரை நீண்டிருப்பதுபோல் அன்றைய தினம் அலங்கரிக்கிறார்கள்.காஞ்சிபுரத்தில் ஆட்சி புரியும் ‘காமாட்சி அம்மன்’ ஆலயத்தில் நவராத்திரி விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு ‘நவராத்திரி மண்டபம்’ என்ற பெயருடன் ஒரு மண்டபம் உள்ளது. நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் அம்மன் இங்கே கொலு வீற்றிருக்கிறாள். எல்லா திருத்தலங்களிலும் சூரசம்ஹாரம் ஒருநாள் மட்டுமே நடைபெறும். ஆனால் இங்கு எட்டு நாட்கள் நடைபெறுகின்றது. கடைசி நாள் துர்க்காஷ்டமியன்று காமாட்சி தேவியுடன் துர்க்கா தேவியை வீற்றிருக்கச் செய்து கோயிலை வலம் வருவது இங்கு ஐதீகம். தொகுப்பு: அ.திவ்யா, காஞ்சிபுரம்.

The post யாழைப் பழித்த மொழியாள் appeared first on Dinakaran.

Tags : Navratri ,
× RELATED அசைவம் சாப்பிடறது முகலாய மனப்போக்கு: மோடி விமர்சனத்தால் சர்ச்சை