×

நிலையான வாழ்வளிப்பாள் அலைமேல் அமர்ந்தாள்

தேனாம்பேட்டை – சென்னைசென்னை தேனாம்பேட்டையில் அண்ணாசாலையும், தி.நகரும் சந்திக்கும் இடத்தில் கோயில் கொண்டு அருள்கிறாள் அலை மேல் அமர்ந்தாள் அம்மன். இந்த அம்மனை இப்பகுதியினர் ஆலையம்மன் என்று அழைக்கின்றனர். சுமார் 300 வருடங்களுக்கு முன்பு இப்போதுள்ள மாம்பலம், சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம் ஆகிய மூன்று பகுதிகளும் சேர்ந்து மிகப்பெரிய ஏரியாக இருந்தது. சுற்றிலும் கொய்யாத்தோப்பு நிறைந்திருந்தது. அம்மன் இப்போது கோயில் கொண்டிருக்கும் இடம் அப்போது ஏரிக்கரையாக இருந்தது. கரையோரமாக சில குடும்பங்கள் மட்டுமே வசித்து வந்தன. அங்கே வசித்து வந்தவர்களில் சலவைத்தொழிலாளி ஏழுமலையும் ஒருவர். அவர் உட்பட பத்துக்கும் மேற்பட்ட சலவைத்தொழிலாளிகள் இந்த ஏரியில் தான் துணி வெளுப்பார்கள். கரையோரம் அந்த துணிகளை உலர வைத்து எடுத்துச் செல்வார்கள்.ஒரு சமயம் பலத்த மழை பெய்து, வெள்ளம் ஏரியின் கரை புரண்டோடியது. அந்நேரம் துணி வெளுக்கச் சென்ற சலவைத் தொழிலாளி ஏழுமலை, வெள்ளம் கரைபுரண்டோடு வதைக்கண்டு துணி துவைக்க முடியாமல் நின்றார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெள்ளமாக காட்சியளிக்க அதை நோட்டமிட்ட சலவைத் தொழிலாளி வெள்ளத்தில் கல் ஒன்று உருண்டு வருவதை கண்டார். அந்த கல்லை தூக்க முடியாமல் எடுத்து கரையில் நிறுத்தினார். அழுக்கு மூட்டையை அவிழ்த்து அதிலிருந்த ஒரு துணியை எடுத்து அந்த கல் மீது வைத்து துணியை அடித்து துவைக்க ஆரம்பித்தார். திடீரென அவருடைய கைகள் வலித்தன. இதனால் அவர் அந்த கல்லில் துணிகள் அடிப்பதை நிறுத்தினார். கல் மீது இருந்த துணிகளை உற்றுப்பார்த்தார். அந்த துணியில் பொட்டு பொட்டாய் ரத்தத் துளிகள். சலவைத் தொழிலாளிக்கு வியர்த்துக் கொட்டியது. துணியால் முகத்தை துடைத்துக் கொண்டார். நாசித்துவாரம் வழியாக வாயோரம் ரத்தம் வடிந்து கொண்டிருந்ததைப் பார்த்ததும் பதறிப் போனார். தனக்கு சாவு நெருங்கி விட்டதோ என்று பயந்தார். தலைச் சுற்றுவதுபோல இருக்கவே மெதுவாக கரையோரமாக நடந்தார். ஒரு இடத்தில் சென்று அமைதியாக அமர்ந்து கொண்டார். அவரது கண்கள் சோர்வுடன் மூடின. கைகளும் கால்களும் சோர்ந்துபோன நிலையில் மயக்கமுற்று படுத்தார்.அதேநேரம் அப்பகுதியைச் சேர்ந்த பிரமுகர் வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த அவரது மனைவி, திடீரென மூச்சு பேச்சற்று கல்லாய் நின்றாள். வீட்டில் இருந்தவர்கள் இதைக் கண்டு பதறி ஓடோடி வந்து, ‘என்னம்மா என்னாச்சு, உடம்புக்கு என்ன?’ என்று கேட்டனர். அதற்கு அந்த பெண் ‘‘ஏரிக்கரையிலே சலவைத் தொழிலாளி துணி துவைக்கிற கல்லாக நான் இருக்கிறேன். போ… போய் என் மீதிருக்கும் அழுக்குத்துணியை அப்புறப்படுத்தி வேறொரு இடத்தில் எனக்கு நிலையம் இட்டு பூஜை செய்து வா… உன்னையும், உன் சந்ததியினரையும் காப்பாற்றுவேன். என்னை கை தொழும் யாவரையும் நல்ல நிலையில் உயர்த்தி அவர்கள் வாழ்விற்கு வழி காட்டுவேன். நீர், நெருப்பு, ஆபத்து வராமல் உங்களை காப்பாற்றுகிறேன்’’ என்று சக்தி தேவியின் அருள்வாக்காய் உதிர்த்தாள். இதைக் கேட்டதும் அந்தக் கிராமமே ஏரிக்கரைக்கு ஓடோடி வந்தது. மயங்கிய நிலையில் இருந்த சலவைத் தொழிலாளி ஏழுமலை அருகே கிடந்த துரிக்கல்லைப் பார்த்தார்கள். தானே புரண்டு விழுந்தது அக்கல். இதைக் கண்டதும் ஊர்க்காரர்கள், அந்த கல்லை எடுத்து பார்த்தனர். அமர்ந்த நிலையில் அம்மன் சிலை அழகாக இருந்தது. ஏரியின் வெள்ளம் வெகுண்டெழுந்து வரும்போது அலையோடு வந்ததால் அம்மனுக்கு அலை அம்மன் என்றும் அலை மேல் அமர்ந்தாள் என்றும் நாமமிட்டு அழைத்தனர். பின்னர் அது மருவி ஆலையம்மன் என்றானது. தேனாம்பேட்டையில் கோயில் கொண்டு அருள்கிறாள் இந்த ஆலையம்மன். ஆரம்பத்தில் ஒரு குடில் அமைத்து பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து வந்தார்கள். நாளடைவில் படிப்படியாக இத்திருக்கோயில் வளர்ச்சி பெற்றது. 1943ம் ஆண்டில் உற்சவ மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டு கோயில் எழுப்பப்பட்டது. இவ்வாலயத்தில் ஆடித்திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அம்மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறன்றும் அம்மன் திருவீதியுலா வருகிறாள். கூழ் ஊற்றுதலும், அன்னதானமும் சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் பொங்கல், பௌர்ணமி தினங்கள், வரலட்சுமி விரதம் போன்ற நாட்களிலும் சிறப்பாக அலங்காரங்களுடன் வழிபாடு நடைபெறுகிறது. நவராத்திரி விழா ஒன்பது நாட்களும் திருவிழாக்கோலம் தான். தினமும் வெவ்வேறு தேவியாக காட்சி தருவாள் அலைமேல் அமர்ந்தாள். ஆபத்து தாயே காப்பாத்து என்றால் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து காப்பாற்றுகிறாள் இந்த அலைமேல் அமர்ந்தாள் அம்மன்.படங்கள்: ஆர்.சந்திரசேகர்.சு.இளம் கலைமாறன்…

The post நிலையான வாழ்வளிப்பாள் அலைமேல் அமர்ந்தாள் appeared first on Dinakaran.

Tags : Denampet ,Thenampet ,Anasal ,Amman ,
× RELATED ரூ.621 கோடி மதிப்பீட்டில், 3...