×

ஆனாய நாயனார்

குருபூஜை  9-12-2020திருச்சிராப்பள்ளிக்கு மேல்பால் காவிரியாற்றுக்கு வடபுறத்திலுள்ள பகுதி முதல் பண்டைய எருமைநாடு வரை (தற்போதய மைசூர்) தற்கால நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை மாவட்டத்தின் மேற்கு பகுதி, திருச்சி மாவட்டத்தின் சில பகுதிகள் மற்றும் கரூர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியது மழநாடு. சங்ககால புலவர் ஔவையாரால் பாடப்பட்ட அதியமான்கள், வல்வில் ஓரி, கொல்லி மழவன், அரியலூர் ஜமீன் சமஸ்தானத்தை கி.பி. 14ம் நூற்றாண்டில் ஆண்ட ஒப்பில்லா மழவராயர், திருவக்கரை வல்லவ நாட்டை கி.பி. 17ஆம் நூற்றாண்டில் ஆண்ட மழவராய பண்டாரத்தார் போன்றோர் மழநாட்டை ஆண்டு வந்தனர். இத்தகைய பெருமை வாய்ந்த மழ நாட்டிலுள்ள திருமங்கலம் ஊரில் ஆயர்குடியில் (இடைக்குடியில்) பிறந்தவர் ஆனாய நாயனார். இவர் இவ்வூரில் எழுந்தருளியிருக்கும் பரசுதாமீசுரம் உடையார் என்றும் திரு மழுவுடைய நாயனார் என்றும் சாமவேதீஸ்வரர் என்றும் பல திருநாமங்கள் கொண்ட சிவனார் மீது அதிக பக்தி கொண்டவர். ஆயர் குலம் விளங்கத் தோன்றிய நாயனார் ஆநிரைகளை நிரம்பப் பெற்றிருந்தவராதலால்தான் ஆனாயர் என்னும் நாமத்தைப் பெற்றார்.இவர் பசுக்கூட்டங்களை மேய்ப்பதை தொழிலாகக் கொண்டிருந்த போதும் மனத்தாலும் வாக்காலும் ஈசனையே எண்ணி, எந்நேரமும் உள்ளம் மகிழ்வோடு இருந்தார். ஆனாயர் புல்லாங்குழல் வாசிப்பதில் திறமையானவர். மாடுகளை காலையில் ஓட்டிச் செல்லும்போதும், மாலையில் திரும்ப அழைத்து வரும்போதும் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டேதான் இருப்பார். ஆனாயநாயனாரின் இசைக்கு உயிரினங்கள் அனைத்தும் மெய்மறந்து நிற்கும்.ஒருநாள் நாயனார் வழக்கம்போல் ஆநிரைகளை மேய்க்கப் புறப்பட்டார்.நறுமலர் மாலையை அணிந்து கொண்டார். தலையை ஒரு புறமாகக் கோதி முடிந்து அதில் கண்ணி மாலையைச் சூட்டிக் கொண்டார். செங்காந்தள் பூவினைக் காதில் சொருகிக் கொண்டார். கால்களிலே தோல் பாதுகையைத் தரித்துக் கொண்டார்.கையிலே வெண்கோலும் வேய்ங்குழலும் எடுத்துக் கொண்டார், ஏவலரும், கோபாலரும் சூழ ஆநிரைகளை ஓட்டிக்கொண்டு, முல்லை நிலத்திற்குப் புறப்பட்டார்.வேய்ங்குழலில் இசையை வாசித்துக் கொண்டே இருந்தார். அப்பொழுது ஆனாயர் பார்வை கொன்றை மரத்தின் மீது பதிந்தது. அம்மரத்திலிருந்த மலர்கள் கொத்து கொத்தாக மாலை போன்ற வடிவத்தில் தொங்கிக் கொண்டிருந்தன. ஆனாயர் கண்களுக்கு கொன்றை மரத்தின் வடிவம். கொன்றை மாலையை அணிந்து சிவபெருமான் எழுந்தருளி இருப்பது போல் தோன்றியது. ஆனாயர் அம்மரத்தை வலம் வந்து வணங்கினார்.பரமனை நினைத்தபடியே பண் ஒன்றை எழுப்பினார். அவர் சுத்த ஸ்வரத்திலே திருவைந்தெழுத்தை இசையுடன் அமைத்து முறையோடு ஸ்ருதி சேர்த்து வாசிக்கலானார். ஐந்தொலியின் இசை விண்ணகத்தை முட்டியதோடல்லாமல் கயிலை மலையில் வீற்றிருக்கும் உமாமகேஸ்வரனின் திருச்செவிகளுக்கும் ஊடுருவிற்று. வெள்ளி அம்பலத்திலே ஆனந்தத் தாண்டவம் ஆடும் அரனாரும் இசைக்குக் கட்டுப்பட்டவர்தானே. ஆனாயரின் இசை வெள்ளத்திலே மெய்யுருகி ஆனாயரை ஆட்கொள்ள பார்வதி சமேதராய் காட்சி அளித்தார்.ஆனாயரின் இசைக்குக் கட்டுப்பட்ட கங்காதரன் ஆனாயரை வேய்ங்குழலை இவ்வாறு இசைத்துக் கொண்டே எம் அருகே வந்து அணைந்திடுவாய் என்று வாழ்த்தி அருளினார்.ஆனாயர், இறைவன் அருகேயே அமர்ந்து, வேய்ங்குழல் வாசிக்கும் பேறு பெற்றார்.ஆனாய நாயனாரின் குருபூஜை கார்த்திகை மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. – ச.சுடலைகுமார்…

The post ஆனாய நாயனார் appeared first on Dinakaran.

Tags : Anaya Nayan ,Gurupuja ,Trichirappalli ,Kaveri ,Erumainadu ,Mysore ,Namakkal, ,Salem ,Anaya Nayanar ,
× RELATED அரிமளம் அருகே காமாட்சி அம்மன்...