×

பெருமாள் கோயில்களில் பகல் பத்து சேவை

15.12.2020 முதல் 24.12.2020 வரைகார்த்திகை  தீபத் திருநாளன்று திருவரங்கத்தில் சக்கரத்தாழ்வார் சந்நதியில் சொக்கப்பனை  கொளுத்தப்படுவது வழக்கம். அச்சமயம் உற்சவர் நம்பெருமாள் அங்கே எழுந்தருளி, சொக்கப்பனை கொளுத்துவதைக் கண்டுகளித்து அடியார்களுக்கும்  அருள்பாலிப்பார். திருமங்கை ஆழ்வார் வாழ்ந்த காலத்தில்,  திருவரங்கத்தில் சொக்கப்பனை கொளுத்தும் இந்நிகழ்வுக்குத் திருமங்கை ஆழ்வார் வருகை தந்திருந்தார். சொக்கப்பனையைக் காணப்புறப்பட்டு வந்த நம்பெருமாளைக் குறித்துத் ‘திருநெடுந்தாண்டகம்’ என்று அழைக்கப்படும் முப்பது பாசுரங்களைப்  பாடினார்.சொக்கப்பனை நிறைவடைந்து, மீண்டும் தன் சந்நதிக்குத்  திரும்பும் வேளையில், நம்பெருமாள் திருமங்கை ஆழ்வாரைப்பார்த்து, “திருநெடுந்தாண்டகம் முப்பது பாசுரங்களும் தேனினும் இனிதாய் உள்ளன! பரகாலனே! உங்களுக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார்.அப்போது  திருமங்கை ஆழ்வார், “மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி தொடங்கிப் பத்து  நாட்களுக்கு உன் கோயில்களில் அத்தியயன உற்சவம் நடைபெறுகிறது. அந்த உற்சவத்தின் போது, நீ வடமொழி வேதங்களைக் கேட்டு மகிழ்கிறாய். ஆனால் அந்த  வடமொழி வேதங்களுக்கு இணையாகத் தமிழில் நம்மாழ்வார் பாடி வைத்த ஆயிரம்  பாசுரங்கள் கொண்ட திருவாய்மொழியை நீ அதுபோல் கேட்பதில்லையே!  இது தான் என் மனத்தில் பெருங்குறையாக உள்ளது! இக்குறையை நீ போக்கி அருள வேண்டும்!” என்று  பிரார்த்தித்தார்.அதற்கு விடையளித்த நம்பெருமாள், “மங்கை மன்னரே! வருந்தாதீர் இத்தனை மக்களுக்கும் மத்தியில் உமக்கு வரம் அளிக்கிறேன்!  வைகுண்ட ஏகாதசி தொடங்கிப் பத்து நாட்கள் பகலில் வடமொழி வேதங்களைக் கேட்டு மகிழும் நான், இரவுப் பொழுதில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியைக் கேட்டு மகிழ்வேன்! அந்தப் பத்து நாட்கள் நடைபெறும் உற்சவம் ராப் பத்து உற்சவம்  என்ற பெயரில் நடைபெறட்டும்!” என்று வரம் தந்தார்.எனவே, வைகுண்ட ஏகாதசி தொடங்கிப் பத்துநாட்களுக்குப் பகல் வேளையில் வடமொழி வேதங்களையும், இரவுப்பொழுதில் தமிழில் நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரங்களையும் ஓத வேண்டும் என்ற இந்த மரபு திருமங்கை ஆழ்வாரின் பிரார்த்தனைக்கு இணங்க நம்பெருமாளாலேயே ஏற்படுத்தப்பட்டது.பகலில் பிரபந்தம் பாடப்படும் முதல் பத்து நாட்கள்  பகல் பத்து என்றும், இரவில் பிரபந்தம் பாடப்படும் அடுத்த பத்து நாட்கள் ராப் பத்து என்றும் அழைக்கப்படத் தொடங்கின.வடமொழி வேதங்களுக்கு நிகராகத் தமிழ்மொழி வேதங்கள் திகழவேண்டும் என்றும் முனிவர்களுக்கு நிகராக ஆழ்வார்கள் போற்றப்பட வேண்டும் என்றும் சிறப்பான கொள்கைகளைக் கொண்ட சீர்திருத்தவாதியான ராமானுஜர், திருவரங்கத்தில் தொடங்கப்பட்ட இவ்வுற்சவம், அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் கொண்டாடப்படுவதற்கு ஏற்பாடு செய்தார்.நம்மாழ்வாரை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வருவதற்கு ஆழ்வார் திருநகரி வரை செல்ல வேண்டாம் என்பதற்காக, திருவரங்கத்திலேயே நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார்  போன்ற ஆழ்வார்களைப் பிரதிஷ்டை செய்து, அவர்களைக் கொண்டே இந்த உற்சவம் நடக்கும்படி ஏற்பாடு செய்து வைத்தார் ராமானுஜர்.

அதன்படி, பகல் பத்து நடைபெறும் பத்து நாட்களும்

Ø  பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழிØ ஆண்டாள் அருளிய திருப்பாவை, நாச்சியார் திருமொழிØ குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழிØ  திருமழிசைப் பிரான் அருளிய திருச்சந்த விருத்தம்Ø தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய திருமாலை, திருப்பள்ளியெழுச்சிØ திருப்பாணாழ்வார் அருளிய அமலனாதிபிரான்Ø   மதுரகவி ஆழ்வார் அருளிய கண்ணிநுண் சிறுத்தாம்புØ திருமங்கை ஆழ்வார் அருளிய பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் ஆகிய பிரபந்தங்கள் ஓதப்படும்.பகல் பத்து (10), ராப் பத்து (10), இயற்பா (1) என மொத்தம் இருபத்தோரு நாட்கள் நடைபெறும் இவ்வுற்சவத்தை மொத்தமாக ‘அத்தியயன உற்சவம்’ என்று இப்போது அழைக்கிறார்கள். வடமொழி வேதங்களுக்கு இணையாகத் தமிழ் மொழி வேதங்களுக்கு ஏற்றம் தந்து இவ்வுற்சவத்துக்கு வழிவகை செய்த திருமங்கை ஆழ்வார்,  நாதமுனிகள், ராமானுஜர் ஆகியோரின் திருவடிகளைப் போற்றுவோம்.பொதுவாக, வைகுண்ட ஏகாதசிக்கு முந்ைய பத்து நாட்கள் பகல் பத்து, வைகுண்ட ஏகாதசி  தொடங்கிப் பத்து நாட்களுக்கு ராப் பத்து, அதற்கு மறுநாள் இயற்பா என்று  பெரும்பாலான கோயில்களில் இவ்விழா நடைபெறும். எனினும் சில திருக்கோயில்களில், கோயில் வழக்கங்களுக்கு ஏற்றபடி, இந்த உற்சவங்களின்  காலம் சற்றே மாறுபடும். உதாரணமாக, கும்பகோணம் ஸ்ரீசார்ங்கபாணி சுவாமி  திருக்கோயிலில் மார்கழி மாதத்தின் முதல் பத்து நாட்கள் பகல் பத்தும்,  மார்கழி 11-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை இராப்பத்து உற்சவமும், மார்கழி 21-ம் தேதி இயற்பாவும் நடைபெறும். நாச்சியார்கோயில் ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயிலில் இந்த முழு உற்சவமும் தை மாதத்தில் நடைபெறும்.திருக்குடந்தைடாக்டர்: உ.வே.வெங்கடேஷ்…

The post பெருமாள் கோயில்களில் பகல் பத்து சேவை appeared first on Dinakaran.

Tags : Perumal ,Krakarthi Deepat ,Thiruvarangam ,
× RELATED ஆதிவராக பெருமாள் கோயில் ஜெயந்தி விழா கொண்டாட்டம்