×
Saravana Stores

கோபால பைரவி

நரசிம்ம  மூர்த்தியின் சக்தி லட்சுமியாகவும், பரமனின் சக்தி பார்வதியாகவும், திருமாலின் வராக சக்தி வாராஹியாகவும் அருள்வதைப் போல கோபாலனின் மாயா சக்தி ‘கோபால பைரவி’ எனப் போற்றப்படுகிறாள். மனிதர்களின் நல்வாழ்விற்கு உதவும் ப்ராண ஓட்டத்தை புல்லாங்குழலின் இனிய நாதமாக, அவர்தம் வினைகளுக்கேற்ப கண்ணன் குழல் மூலம் ஊத, அவனது ப்ராண சக்தியும், மாயாசக்தியுமான பைரவி தானும் உயிர் இயக்கப் பணியை கண்ணனோடு இணைந்து செய்கிறாள்.கண்ணனின் இடது கையில் உள்ள தாமரை, பக்தர்களுக்கு ஞானத்தையும், செல்வத்தையும் தரவல்லது. குருவாயூரப்பனாகத் தோன்றும் கிருஷ்ணனும் தன் கரத்தில் தாமரையை ஏந்தி, தன் திருவடித்தாமரையை சரணடையும்படி கூறாமல் கூறுகிறார். இறைவனின் திருவடி ஞானத்தைப் பெற வேண்டுமாயின் முதலில் விவேகமும், வைராக்கியமும் மிகமிக அவசியம். எது நிலையானது, எது நிலையற்றது என்றறியும் விவேகத்தை அருளும் வகையில், கோபால பைரவி இடது திருக்கரத்தில் வாளை ஏந்தியுள்ளாள். சமையலுக்காக காய் கறிகளை நறுக்கும்போது காம்பைத் தனியாக நறுக்கி நீக்கிவிட்டு, மற்றதை உபயோகப்படுத்துவதுபோல் நிலையானதையும், நிலையற்றதையும் பகுத்துக்காட்டுவதாக அந்த வாள் திகழ்கிறது. நிலையானதான பரமாத்மாவை உணர்ந்து, நிலையற்ற பற்றுகளை விட வேண்டும் என்பதை அந்த வாள் உணர்த்துகிறது.மானிட உடலுக்கே மரணம். கோபால பைரவியோ அந்த மரணத்தை வெல்லும் வழியைச் சொல்கிறாள். மரணத்தை எப்படி வெல்வது? அதுபற்றிய பயம் கொள்ளாதிருப்பதன் மூலமாகத்தான்! விவேக வைராக்கியத்தால் ஞானம் அடையப் பெறுவோமானால் மரண பயமே ஏற்படாது. அதாவது மரணம் என்பதும் வாழ்வின் ஒரு சம்பவம்தான் (அது இறுதி சம்பவமாக இருந்தாலும்) என்ற உண்மையை உணர்ந்துவிடுவோம். இதைக் குறிக்க மண்டை ஓட்டின் மீது தன் திருப்பாதத்தை வைத்து அனுக்கிரகம் செய்கிறாள் அன்னை.பைரவம் என்றால் அச்சமூட்டுதல் எனப் பொருள். ஆனால் கோபால பைரவி அன்பின் வடிவானவள். இவள் அணிந்துள்ள செந்நிற மாலை அன்பர்களுக்கு அனைத்து சௌபாக்கியங்களையும் அருளக்கூடியது; மாலையிடையே காணப்படும் வெண்மலர்கள் சகல ஞானத்தையும் உணர்த்துகின்றன.நம் மூலாதாரத்தில் இவளை தியானிப்பது மிகச் சிறந்த பலன் தரும். ஆதாரம் சிறப்புடையதாக உறுதியாக இருந்தால்தான் அதன் மேல் நிலைகள் உறுதியாக நிற்கும். அனைத்தையும் தாங்கும் இவள் அருளால் ஆரம்பம் தெய்வீக சக்தியோடிருப்பின் முடிவும் தெய்வீகச் சிறப்புடன் நிறைவடையும். கண்ணனும் தேவியும் ஒன்றே என்பதை, ‘கோப்த்ரி கோவிந்த ரூபிண்யை நமஹ’ என்ற லலிதா ஸஹஸ்ரநாம வரி உணர்த்துகிறது. இந்த கோபாலனும், பைரவியும் இணைந்த கோபால பைரவி திருக்கோலத்தை வணங்கினால் பயத்தை வெல்லலாம். கோரும் வரங்களும் அடையப் பெறுவார்கள். பூரண அலங்காரங்களோடு பீதாம்பரம் தரித்து நவரத்னங்களால் ஆன அணிகலன்கள் அணிந்து கருணை மழை பொழியும் கண்களோடும், ரத்னகிரீடமும், மயில் பீலியும் தரித்து, மரண பயம் அகற்றும் கோபால பைரவி, வணங்குவோர் தீவினைகளை விரட்டி ஆத்ம ஞானமும் பிற எல்லா நலன்களும் தருபவள்.* ந.பரணிகுமார்

The post கோபால பைரவி appeared first on Dinakaran.

Tags : Kopala Bhiravi ,Gobalan ,Narasimma Moorthi ,Lakshmi ,Shakti ,Paraman ,Warahi ,Tirumal ,Kobala Bhiravi ,
× RELATED தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான...