×

கந்த புராணத்தில் சாஸ்தா

ஈசனே போற்றி! எந்தையே போற்றி! என்று சீர்காழி வனத்தில் ஒரு பெண்ணின் குரல் எதிரொலித்தது. குரலுக்கு உரியவள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு அழகாக இருந்தாள். அவள் எதிரில் சீர்காழி தோணியப்பரின் ( சீர்காழியில் ஈசனின் திருநாமம் அதுவே!) சிவலிங்கத் திருமேனி. அந்த அற்புதத் திருமேனியைத்தான் அவள் பூஜித்துக் கொண்டிருந்தாள்.  குரலில் ஏகத்துக்கும் சோகம் தொனித்தது. ஒவ்வொரு வில்வ தளத்தை அவள் எடுத்து ஈசன் மீது வைக்கும்போதும் அவளது விழி ஓரம் ஒரு சொட்டு நீரும் வந்தது. அது அவளது உள்ளக் குமுறலுக்கு சாட்சியாக இருந்தது. கழுத்தில் திருமாங்கல்யம் ஒளிவிட்டுப் பிரகாசித்து அவள் மணமானவள் என்பதை பறை சாற்றியது.  ஆனால், கணவனைத்தான் அருகில் காணவில்லை. அவன் தான் சென்று விட்டானே? எங்கு? வேண்டி தவம் கிடந்து, வரம் அநேகம் பெற்ற சூரபத்மன், போர் தொடுத்து வந்து அமராவதியையே தீக்கிறையாக்கி விட்டான். வானவர்கள் அனைவரும் அந்த அரக்கனுக்கு பயந்து தலை மறைவானார்கள். வானவர்களின் தலைவன் இந்திரன் மட்டும் இதற்கு விதி விலக்கா என்ன?.  அவனும் அவனது மனைவி இந்திராணியும் சூரனுக்கு பயந்து சீர்காழி தோணியப்பரிடம் தஞ்சம் புகுந்தார்கள். வானவர்களுக்கு, நல்வாழ்வு அருளும் படி ஈசனை வேண்டி தவம் இருந்தார்கள். காலம் சென்றதே ஒழிய, விடிவு பிறக்கவே இல்லை. ஆம்,  கந்தன் பிறக்கவே இல்லை. ஈசனது திருக்குமாரனாலேயே தனக்கு மரணம் வேண்டும், என்று அற்புத வரத்தை ஈசனிடம் இருந்தே பெற்றவன் அல்லவா சூரன்.? அவனை வெல்ல,  குமரன் பிறந்தே ஆக வேண்டும். ஆனால் ஈசனோ இதைப் பற்றி கவலைப் பட்டது போலவே தெரியவில்லை. மோன நிலையில் தட்சிணா மூர்த்தியாக அமர்ந்துவிட்டார். செய்வதறியாமல் தவித்த வானவர்கள், இந்திரனை முன்னிறுத்திக் கொண்டு,  கைலாயம் சென்று,  பரமனிடம் முறையிடுவது என்று முடிவுகட்டினார்கள். புறப்படுவதற்கு முன்பு தன் மனைவியை சந்தித்தான் இந்திரன். விஷயம் அறிந்த அவள் இடி கேட்ட சர்ப்பம் போல நடுங்கினாள்.‘‘என் அழகில் மோகம் கொண்ட சூரபத்மனின் ஆட்கள் அண்டம் முழுவதும் தேடுதல் வேட்டையில் இறங்கி இருக்கிறார்கள். இந்த சமயம் பார்த்து என்னை இங்கு தனியாக விட்டுச் செல்கிறேன், என்று நீங்கள் சொல்வது நியாயமா?. அசுரர் கையில் இந்த பைங்கிளி சிக்கினால் உயிர் வாழுமா? சொல்லுங்கள்.’’என்று புலம்பித் தீர்த்தாள் இந்திராணி. அவள் கூறிய கருத்து முற்றிலும் உண்மை,  என்பதால் இந்திரன் அவள் கேட்ட கேள்வியின் முன் வாயடைத்து நின்றான். மெல்ல யோசித்த அவனுக்கு ஒரு அற்புத யுக்தி தோன்றியது. அதை இந்திராணியின் காதில் கிசுகிசுத்தான். அதைக் கேட்ட இந்திராணியின் கண்கள் ஆச்சரியத்தில் அகண்டு விரிந்தது.பிறகு தைரியமாக, கணவனை வழி அனுப்பிவிட்டு சிவ பூஜையை தொடர்ந்தாள் அவள். இப்படி சிவ பூஜையில் ஆழ்ந்த இந்திராணியின் குரல் தான் அந்த அற்புதக் குரல். அந்த காந்தக் குரல், வானில் உலா வந்து கொண்டிருந்த ஆட்டுத் தலை பாவையின் காதில் விழுந்தது. சரி யார் இந்த ஆட்டுத் தலை பாவை? அசுரேந்திரனின் பேத்தி. காஸ்யபர் மற்றும் மாயையின் கடை குட்டி. சூரபத்மனின் அன்புத் தங்கை. சாட்சாத் அஜமுகி தான், அந்தப் பாவை. இந்திராணியின் காந்தக் குரல் கேட்டு தரை இறங்கிய அவள் மெல்ல குரல் வந்த திக்கை நோக்கி நடந்தாள். அங்கு இந்திராணியைக் கண்டதும் அனலாகக் கொதித்து எழுந்தாள்.‘‘அடியேய்! இந்திராணி! உன்னைத் தேடி அங்கே என் அண்ணன் அலைந்து கொண்டிருக்கிறான். நீ இங்கு சிவ பூஜை செய்து கொண்டிருக்கிறாயா? பேதையே! அந்தக் கோழை இந்திரனை துறந்து விடு. வீரன் சூரபத்மனோடு சேர்ந்து விடு. உலகமே உன் கால் அடியில் இருக்கும். உன் கட்டழகை வீணடிக்காதே.!’’ சிவ பூஜையில் இருக்கும் மாற்றான் மனைவியிடம் பேசும் பேச்சா இது?.  அவள் அரக்கி என்பதை நிரூபித்து விட்டாள்.அவள் மொழியைக் கேட்ட இந்திராணி, நொடியில் தன் இரு செவிகளையும் கைகளால் மூடிக் கொண்டு ‘‘சிவ சிவா! அது நான் செத்தாலும் நடக்காது ’’என்று உறுதிபடச் சொன்னாள்.  கேட்ட அஜமுகிக்கு பற்றிக் கொண்டு வந்தது. இனி பொறுத்துப் பயனில்லை என்று,  தோன்றியது அந்த அரக்கிக்கு.  சிங்கம் போல பாய்ந்து இந்திராணியின் கையை பலவந்தமாகப் பிடித்து இழுத்தாள். நொடியில் இந்திராணிக்கு அவளது கணவன் இந்திரன் சொன்ன யுக்தி நினைவுக்கு வந்தது. ‘‘ பரந்தாமனின் மோகினி வடிவுக்கும், பரமன் ஈசனுக்கும் பிறந்த தவக் கொழுந்தே! வெள்ளை யானை ஏறி பூர்ணா, புஷ்கலாவோடு பவனி வரும் வேந்தே! காஞ்சி காமாட்சியிடம் தாய்ப்பால் அருந்திய செல்வமே! தாய்ப் பால் தந்த காஞ்சி காமேஸ்வரிக்கு , காவலாக நிற்கும் அவளது அன்புத் தனயனே! ஐயப்பா! ’’ என்று அழுதபடி ஒலமிட்டாள் அவள்.‘‘ஆபத்து வந்தால் அந்த மகா சாஸ்தாவை, ஐயப்பனை, சரணாகதி செய்’’ என்று அவளது கணவன், இந்திரன் சொன்னதை இம்மியும் பிசகாமல், பதி விரதையான இந்திராணி செய்து முடித்தாள். நொடியில் அங்கு கோடி சூர்ய பிரகாசத்தொடு ஒரு தேவன் உதித்தான்.‘‘ஆணவத்தால் மதியிழந்த அஜமுகி! விடு இந்திராணியை. தர்ம சாஸ்தாவின் மெய் காப்பாளன் வீர மா காளன் சொல்கிறேன் விடு அவள் கையை. தனது பக்தையைக் காக்க, அவர் என்னை இங்கு அனுப்பி உள்ளார், என்பதை உணர். இவளை விடு , இல்லை என்றால் ராமாயணத்தின் சூர்ப்பணகையின் நிலை தான் உனக்கும்’’ நொடியில் அங்கு வந்து உதித்த வீர மா காலர் கொக்கரித்தார். அஜமுகி அசைந்து கொடுக்கவே இல்லை. இடி போல நகைத்தாள். ‘‘மூவுலகிலும் என் அண்ணனை எதிர்க்கும் துணிவு யாருக்கும் இல்லை.  இனி வரப் போவதும் இல்லை. ஆகவே,  நான் யார் சொல்வதையும் கேட்க வேண்டிய அவசியமும் இல்லை’’ என்றபடி இந்திராணியை,  தரதர என்று இழுத்தாள். கோபம் கொண்ட மா காளர் தனது வாளால், அஜ முகியின் கையை வெட்டினார். சூரபத்மனின் அழிவுக்கான விதை அங்குதான் விதைக்கப் பட்டது. எப்படி சூர்ப்பணகையின் கர்வ பங்கத்தில் ராவணனின் அழிவுக்கான விதை விதைக்கப்பட்டதோ, அதே போல். விஷயம் அறிந்த சூரன் வானவர்களை மேலும் பல கொடுமைகளுக்கு ஆளாக்கி தனது புண்ணிய மூட்டையை காலி செய்து பாவ மூட்டையை அதிகரித்தான். அதை முருகன் தனது வேலால் அழிக்கவும் செய்தான்.மாமன் ராமனுக்கு ஏற்ற மருகன். சூரனை வதைத்தது முருகனாக இருந்தாலும் அதற்கான விதையை விதைத்தவர் ஐயப்பன். சரணாகதி செய்தவர்களுக்கு அரணாக இருக்கும் அவரது சரண கமாலங்களை பற்றுவோம். இந்திராணியைப் போல துன்பத்தை களைவோம். (கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்த புராணத்தில் அசுர காண்டத்தில் மகாசாஸ்தா படலத்தின் கருத்தே இங்கு சுருங்க சொல்லப் பட்டிருக்கிறது.)தொகுப்பு: ஜி.மகேஷ்

The post கந்த புராணத்தில் சாஸ்தா appeared first on Dinakaran.

Tags : Sasta ,of Easane ,Shasta ,
× RELATED பொறையாறு திருமுடி சாஸ்தா அய்யனார் கோயில் தேரோட்டம்