×

திருமணத்தடை நீக்கும் அழகிய லட்சுமி நரசிம்மர்

*நலம் தரும் நரசிம்மர் 21விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் பெரியதச்சூர் அடுத்த எண்ணாயிரத்தில் அழகிய லட்சுமி நரசிம்மர் கோயில் சோழர் கால கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இக்கோயில் 11ம் நூற்றாண்டில் ராஜராஜசோழ மன்னனால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இவ்வூரை சுற்றி நான்கு திசைகளிலும் உள்ள எசாலம், பிரம்மதேசம், திருநந்திபுரம், பிடாரிப்பட்டு ஆகிய இடங்களில் சிவாலயங்கள் உள்ளன. இதில் பிடாரிப்பட்டு சிவாலயம் முழுவதும் சிதிலமடைந்து லிங்கம் மட்டுமே உள்ளது. எண்ணாயிரம் என்ற ஊரானது ஆரம்ப காலத்தில் ராஜராஜ சதுர்வேதி மங்கலம் என்ற பெயருடன் விளங்கியுள்ளது. அப்போது அந்த ஊரில் உள்ள பாடசாலையில் 70 பேர் 4 வேதங்களை கற்றனர். பின்னர் ராமானுஜர் இவ்வூருக்கு விஜயம் செய்து 8 ஆயிரம் சமணர்களை வைணவர்களாக்கியதால் இவ்வூரானது எண்ணாயிரம் என்று மாறியதாக வரலாறு கூறுகிறது. இவ்வூரில் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட் அழகிய லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலை சுற்றி அகழி அமைக்கப்பட்டுள்ளது. கோயிலை சுற்றியுள்ள பிரதான கல்வெட்டுக்கள் அனைத்திலும் ராஜராஜசோழனைப் பற்றியே உள்ளதால் இக்கோயில் ராஜராஜசோழன் காலத்தை சேர்ந்தது என்று அறிய முடிகிறது. கோயிலின் உள் மண்டபத்தில் கிணறு அமைக்கப்பட்டு அதிலிருந்து நீர் எடுத்து பெருமாளுக்கு அபிஷேகம் நடந்து வந்துள்ளது. இங்கு தாயாருக்கு தனி சந்நதி கிடையாது. மேலும், இங்குள்ள லட்சுமி நரசிம்மர் சிரித்தபடி உள்ளதால் அழகிய லட்சுமி நரசிம்மர் என்ற பெயருடன் வேறு எங்கேயும் இல்லாத தனிச்சிறப்பாகும். அதேபோல் மூலஸ்தானத்தின் முன் அமைந்துள்ள 7 அடி உயரமான வராஹ மூர்த்தியும் தமிழகத்தில் வேறு எங்கும் காணக்கிடைக்காத ஒன்று. எண்ணாயிரம் கிராமத்தில் குடிகொண்டிருக்கும் லட்சுமி நரசிம்மரை மனதில் தொழுது வேண்டினால் எண்ணிய எண்ணமெல்லாம் நிறைவேறும். குடும்ப பிரச்னை, திருமணத்தடை, குழந்தையின்மை, தொழில் முடக்கம், மனசஞ்சலம் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளும் தீரும். மனம் அமைதிபெறும், குடும்பத்தில் செல்வங்கள் பெருகி அமைதி ஏற்படும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.ஊரின் மையப் பகுதியில், சுமார் நான்கு அடி உயரமுள்ள பீடத்தின் மீது கருங்கல் கட்டுமானமாக, மிகப் பிரமாண்டமாகத் திகழ்கிறது, ஸ்ரீ அழகிய நரசிம்மர் திருக்கோயில். கோயிலுக்குள் பலி பீடமும், கொடி மரத்துக்கான கருங்கல் பீடமும் காணப்படுகின்றன.எளிமையாகக் காட்சி தரும் முன்மண்டபத்தில், நம் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம், காலம் கடந்தும் சிற்பக்கலைஞர்களின் கலைத் திறனைப் பறைசாற்றியபடி காட்சி தருகின்றன பல புடைப்புச் சிற்பங்கள்.கோயிலுக்குள் நுழைந்ததுமே, அந்தக் காலத் திலேயே நம் முன்னோர்கள் செய்துவைத்திருக்கும் மழைநீர் சேகரிப்புக்கான அமைப்புகள் நம்மை வியக் கவைக்கின்றன. மேலும், கோயிலுக்குள் மழைவெள்ளம் புகுந்துவிடாதபடி அவர்கள் கட்டமைத்து வைத்திருக்கும் மழைநீர் வடிகால் வசதிகள், நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. அந்தக் கட்டமைப்புகளுக்குள்ளும் ஏராளமான கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால், பல புதிய தகவல்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.வியப்பும் சிலிர்ப்புமாக ஆலயத்தை வலம் வருகிறோம். கருவறை முன்மண்டபத்தில், தெற்கு நோக்கியபடி பிரமாண்ட திருமேனியராக அருள் கிறார் ஸ்ரீவராகர். அவரின் அருகிலேயே லட்சுமி பிராட்டி. இருவரையும் நாள் முழுவதும் தரிசித்துக் கொண்டே இருக்கலாம்; அந்த அளவுக்கு எழிலார்ந்த திருக்கோலங்கள்!கருவறையில், ஸ்ரீகேட்ட வரத்தைக் கேட்டவுடன் அருள்வேன்’ என்று சொல்லாமல் சொல்வதுபோல், அருட்கோலம் காட்டுகிறார் அருள்மிகு அழகிய நரசிம்மர். ஸ்ரீமகாலட்சுமியைத் தன் மடி மீது அமர்த்திய கோலத்தில், தமது திருபெயருக்கேற்ப அழகிய வடிவில் புன்னகை தவழும் திருமுகத்துடன் காட்சி தருகிறார் ஸ்ரீஅழகிய நரசிம்மர். சுவாதி நட்சத்திரத் திருநாளில் இந்த ஆலயத் துக்கு வந்து, ஸ்ரீஅழகிய நரசிம்மரை தரிசித்து வழிபட்டால், நம் எண்ணங்கள் யாவும் ஈடேறும்; விரும்பிய வரங்கள் விரைவில் கிடைக்கும் என்பது பெரியோர் வாக்கு.ஸ்ரீஅழகிய நரசிம்மர், ஸ்ரீவராக மூர்த்தி ஆகியோரை மட்டுமின்றி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருளும் ஸ்ரீவரதராஜர், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீஎம்பார் ஸ்வாமிகள் ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம். கருவறை விமானம் மூன்று நிலைகளுடன், கிழக்கு நோக்கிய பெரிய மாடங்களுடன் திகழ்கிறது. அந்த மாடங்களில் திருமேனிகள் எதுவும் இல்லையென் றாலும், ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் சுதைச் சிற்பங் களை தரிசிக்க முடிகிறது. ஸ்ரீராமாநுஜரும் இங்கு வந்து வழிபட்டுள்ளார். பிரதிமாத திருவாதிரை நட்சத்திரத்தன்று (பகவத் இராமானுஜர் சித்திரை திருவாதிரையில் அவதரித்தவர்) ஏரிக்கரையிலுள்ள ராமானுஜருக்கும், அவரது பாதுகைக்கும் திருமஞ்சனம் (அபிஷேகம்) நடைபெற்று வருகிறது. வைகாசி மாதத்தில் 10 தினங்கள் ராமானுஜருக்கு பிரம்மோற்சவமும், ஆடிப்பூரம், ஆவணியில் கோகுலாஷ்டமி, மார்கழி மாதத்தில் தினசரி ஆண்டாள் திருமஞ்சனமும், வைகுண்ட ஏகாதசி, மார்கழி 27 கூடாரவல்லி அன்று பெருமாள், ஆண்டாள் திருக்கல்யாண வைபோகமும் நடக்கிறது. பிரதி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. .தரிசன நேரம்: காலை 7:30 முதல் 10:30 மணி வரை; மாலை 5:30 முதல் இரவு 7:30 மணி வரை. எப்படிச் செல்வது?: விழுப்புரம் – செஞ்சி நெடுஞ்சாலையில், விழுப்புரத்திலிருந்து சுமார் 18 கி.மீ.தொலைவில் நேமூர் கிராமம் உள்ளது. அங்கிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலுள்ள எண்ணாயிரம் கிராமத்துக்குச் செல்ல பேருந்து மற்றும் ஆட்டோ வசதி உள்ளது.(தரிசனம் தொடரும்)* ந.பரணிகுமார்

The post திருமணத்தடை நீக்கும் அழகிய லட்சுமி நரசிம்மர் appeared first on Dinakaran.

Tags : Lakshmi Narasimmer ,Narasimmer ,District ,Vikrawandi ,Puraddy ,Union ,Pediyadachur ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...