×

மகத்துவம் நிறைந்த மாசி மகம்

8-3-2020நாம் செய்கின்ற நல்வினைகள், தீவினைகள் பிறவிதோறும் தொடர்கின்றன. அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும். அதற்காகவே பிறவிகள் எடுக்கப்படுகின்றன. ஏழுவகை பிறவிகளில் மனிதப்பிறவி பெறுவதற்கரிய பிறவியாகும். துன்பங்கள் காரணமான பாவச் சுமையுள் இருந்து விடுபட்டு பிறப்பும், இல்லாத பேரானந்த பெருவாழ்வினை (முக்தி நிலை) அடைதலே உயிர்களின் இறுதி லட்சியம். மனித உடலை எடுத்து கடவுளை வணங்கி முக்தியின்பம் பெறுவதற்காகவே பழைய வினைகளை மாற்றச் செய்யும் வலிமை பக்தி நெறிக்கும் உண்டு. பக்தி நெறி மார்க்கத்தில் இறை நம்பிக்கை, இறையன்பு, இறைவனை பூரணமாக சரண் அடைதல், பிரார்த்தனை, வழிபாடு, விரதம் அனுஷ்டித்தல் ஆகியவை முக்கியமானவை.கடவுள் வழிபாட்டோடு இணைந்த விரதங்களில் சிறப்புப் பெற்றது மாசி மகம். ‘மகத்தில் பிறந்தவர் ஜெகத்தை ஆள்வார்’  என்பது ஜோதிட வாக்கு. எல்லா மாதத்திலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதம் வரும் மகம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நாளில்தான் உமா தேவியார் தக்கன் என்பவரின் மகளாக அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. தக்கன் தனது மகளாக சிவபெருமானின் சக்தியாகிய உமா தேவியார் வந்து பிறக்க வேண்டும் என்று வேண்டி தவம் இருந்தார். அவனது தவத்தை  மெச்சிய சிவன் அவன் முன்தோன்றி அவன் கேட்ட வரத்தை வழங்கினார். உமா தேவியாரும் தக்கனுக்கு மகளாகப் பிறந்தார். அந்த தெய்வக் குழந்தைக்கு தாட்சாயிணி என பெயரிட்டு அன்போடு வளர்த்து சிவபெருமானுக்கு திருமணம் செய்து வைத்தார். தாட்சாயிணி மாசி மகத்தன்று அவதாரம் செய்ததால் தேவியின் பிறந்த தினமாகத்தான் மகத்துவம் பெற்றது. கோடீஸ்வர யோகம் மக நட்சத்திரத்திற்கு அதிபதியான கேது பகவான் ஞானத்தையும் மோட்சத்தையும் அருளக்கூடியவர். கோடீஸ்வர யோகத்தையும் வழங்கக்கூடிய வல்லமை உள்ளவர். மாசி மாதத்தில் கேதுவின் நட்சத்திரமான மக நட்சத்திரத்தில் சந்திரன் வருகிறது. அப்போது சிம்ம ராசி நாதன் சூரியன், கும்ப ராசியில் இருந்து சந்திரனை பார்க்கும் காலம். மாசி மாத மக நட்சத்திரத்துடன் இணைவது மாசிமகமாகத் திகழ்கிறது. சிவன், விஷ்ணு, முருகன் ஆகிய மூவருக்கும் கோயில்களில் அபிஷேக ஆராதனைகள், வழிபாடுகள் நடைபெறுகின்றன.மோட்சத்தை அருளக்கூடிய கேதுபகவான் நட்சத்திரமாக  மகத்தில்  இந்த நாள் அமைகிறது. இதனை கடலாடும் நாள் என்றும் தீர்த்தமாடும் நாள் என்றும் சொல்வார்கள். இந்நாளில் விரதம் இருந்து குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பலவிதமான தானங்கள் செய்வது விசேஷம். அப்படிச் செய்தால் குடும்பத்தில் ஒற்றுமை, சகல தோஷ நிவர்த்தி ஏற்படும். இந்த விரதம் இருக்க விரும்புபவர்கள் காலையில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, உலர்ந்த ஆடைகளை அணிந்து சிவசிந்தனையுடன் சிவன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்ய வேண்டும். மதியம் ஒருவேளை உணவு உட்கொள்ள வேண்டும். இரவு பால், பழம் அருந்தலாம். அன்று முழுவதும் வேறு வேலைகளில் ஈடுபடாமல் தேவார திருவாசகங்களை பாடியபடி இருக்க வேண்டும்.குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மாசி மகவிரதத்தை அனுஷ்டித்தால் குழந்தைப் பேறு உண்டாகும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளன. அத்துடன் மதியம் உண்ணும்போது சிவனடியார் ஒருவருக்கு அன்னதானம் வழங்குவது சிறந்தது. பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் அழுத்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்ப வெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச்செய்யும் நன்னாளே மாசிமக கடலாடு தீர்த்தமாகும். மாசி மகத்தில் தீர்த்தமாடல் சிறப்பினை பெற்றதற்கு ஒரு புராண வரலாறு உண்டு. ஒருமுறை சமுத்திர ராஜனான வருண பகவானுக்கு பிரமஹத்தி தோஷம் ஏற்பட்டு விட்டது. அவர் கட்டப்பட்டுக் கடலில் வீசப்பட்டு இருந்தார். வருணன் செயல்படாததால் உலகில் மழையின்றி வறட்சியும், பஞ்சமும் ஏற்பட்டது. அனைத்து உயிர்களும் துன்புற்றன. தேவர்கள் சிவபெருமானிடம் சென்று வருண பகவானை விடுவிக்கும்படி வேண்டி பிரார்த்தனை செய்தனர். அவர்கள் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான் வருண பகவானை விடுவித்தார். அவர் விடுதலை பெற்ற நாள் மாசிமக திருநாளாகும். விடுதலை பெற்ற வருண பகவான் மனம் மகிழ்ந்து சிவபெருமானிடம் வரம் கேட்டார். தான் பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டுக் கடல் நீரில் இருந்தபடியே சிவனை வணங்கியதால் தோஷம் நீங்கியதைப் போன்று மாசி மகத்தன்று புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கி நீராடி இறைவனை வழிபடும் பக்தர்களுக்கு அவர்களின் பாவ வினைகள், பிறவிப்பிணிகள் துன்பங்கள் யாவும் நீங்கி, அவர்கள் உயர்வு பெற அருள வேண்டும் என கேட்டுக்கொண்டார். சிவபெருமானும், வருணன் கேட்ட வரத்தை வழங்கினார். அன்று முதல் தீர்த்தமாடல் நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்று வருகிறது.மாசி மகத்தன்று பிரசித்தி பெற்ற புண்ணியத்தலங்களில் உள்ள ஆறு, கடல், குளம் போன்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். ராமேஸ்வரம், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, கும்பகோணம், நாகை மாவட்டம் வேதாரண்யம் போன்ற இடங்களில் நீராடி தர்ப்பணம், பிதுர்க்கடன் செய்வது நலன் தரும். கடல் புண்ணிய நதிகளில் நீராடும்போது ஒரே ஆடையை மட்டும் உடுத்தி நீராடக்கூடாது. உடுத்திய ஆடையின்மீது இடுப்பில் மற்றொரு ஆடையை சுற்றிக்கொள்ள வேண்டும். தீர்த்தமாடுவதற்குமுன் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி மூன்று முறை சிறிதளவு தீர்த்தத்தை உள்ளங்கையில் எடுத்து சிறிதளவு தெளிக்க வேண்டும;. ஈர ஆடையுடன் மூழ்கக்கூடாது. இரவில் தீர்த்தத்தில் மூழ்கக்கூடாது. பிரம்மஹத்தி தோஷத்தை போக்கி பேய்க்கும், நற்கதி கொடுக்கும். இரு ஏகாதசிகள் வருவது மாசி மாதத்தில்தான்.புனித நீராடுபவர்களுக்கு சிவபெருமான், மகாவிஷ்ணு உரிய பலனை வழங்குவார். ஒருமுறை மூழ்கி எழுந்தால் பாவங்கள் விலகும். இரண்டாம் முறை மூழ்கினால் சொர்க்கப் பேறு கிடைக்கும். மூன்றாம் முறை மூழ்கி எழுந்தால் அவர் புண்ணியத்திற்கு ஈடே கிடையாது. நீராட முடியாதவர்கள் சிவசிந்தனையுடன் மாசிமக புராணம் படிக்க வேண்டும். மாசி மகத்தன்று அதிகாலை நீராடி விட்டு துளசியால் மகா விஷ்ணுவை வழிபட்டால் வைகுண்டத்தில் இடம் கிடைக்கும். அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட வாழ்வில் இன்பமும், வெற்றியும் கிடைக்கும். மாசி மகத்தில் சரஸ்வதி தேவியை மணமுள்ள மலர்களால் வழிபட கல்வியில் சிறந்து விளங்கலாம்.மாசி மகம் மகத்துவம் மிக்கது. சிவபெருமானுக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளாக மாசி மகம் திகழ்கிறது. கடலுக்கு அடியில் இருந்து பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிக்கொண்டு வந்ததும் இந்த மாசி மகத்தன்றுதான் என புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்ததும் மாசி மகத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. மாசி மகம் தோஷம் தடைகள் நீக்கும் புனித நாளாகும். ஆண் குழந்தை வேண்டுபவர்கள் அன்று விரதம் இருந்து முருகப் பெருமானை வணங்கி வேண்டிக் கொண்டால் ஆண் குழந்தை பிறப்பதாக ஐதீகம். மாசி மகம் கும்பகோணத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிற தலங்களில் செய்த பாவம் காசியில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் மகிமையாகும்.12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் சிம்ம ராசியில் இருக்கும்போது வருவது மகாமகம் ஆகும். அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவார்கள். அன்று மகாமக குளத்தில் உலகில் உள்ள எல்லா தேவர்களும் நீராட வருவதாக ஐதீகம். ஒரு பிரணய காலத்தின்போது பிரம்மா மிதக்கவிட்ட அமிர்தம் அடங்கிய குடத்தை சிவபெருமான் ஒரு பாணத்தால் அடித்து உடைத்துவிட்டார். அமிர்தம் சிதறியது. உடைந்துபோன குடம் சிதறி உருண்டு ஓடியது. அந்த குடம் நின்ற இடம்தான் கும்பகோணம் சிதறிய அமிர்தம் ஒன்று சேர்ந்த இடமே மகாமக குளம். அமிர்தத் துளிகள் லிங்கமானது. அவர்தான் கும்பேஸ்வரர்.மக்களின் பாவங்களை விலக்கிக் கொள்ளும் கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சரயு, வேதவதி, சிந்து, கோதாவரி, காவிரி, தபகி, பிரம்மபுத்திரா, தாமிரபரணி, மகாநதி முதலான நதிகள் கைலாயம் சென்று பரமேஸ்வரனை வணங்கி மக்களின் பாவங்களை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம். எங்களிடம் வரும் பாவத்தை எப்படித் தொலைப்போம் என கேட்டனர். அதற்கு பரமசிவன் நதிகளே! மகாமகத்தன்று குடந்தையில் உள்ள மகாமக தீர்த்தத்தில் ஸ்நானம் செய்யுங்கள். ஒரு மாமாங்கம் வரை செய்த பாவங்கள் நசிந்து விடும் என்றார். அதனால் 12 நதிகளும் மக்கள் செய்த பாவச் சுமைகளை அகற்றி புனிதம் பெற மகாமக குளத்தில் நீராடுவதாக ஐதீகம். மாசி மகத்தன்று இங்கு வந்து நீராடுபவர்களுக்கும், அவர்களைச் சேர்ந்த குடும்பத்தாருக்கும் புண்ணியம் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. மகாமக குளத்தில் நீராடி 9 பெண்களுக்கு தாம்பூலம், பழம், தட்சணை தேங்காய், குங்குமம், ரவிக்கைத் துணி கொடுப்பது சிறப்பான பலனைத் தரும்.தொகுப்பு: இரா.பாலகிருஷ்ணன்

The post மகத்துவம் நிறைந்த மாசி மகம் appeared first on Dinakaran.

Tags : Masi Makam ,Dinakaran ,
× RELATED எந்தக் கிரகம் நல்லது செய்யும்?