×

எந்த கோயில்? என்ன பிரசாதம்?

ஆய்க்குடி –  பாயசம் ஏற்கும் பாலகன்அருணகிரிநாதரால் பாடப்பெற்ற புகழுடையது ஆய்க்குடி பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில். முற்காலத்தில் மல்லபுரம் என்ற இடத்திலிருந்த குளத்தை தூர்வாரியபோது மூலவரான பாலசுப்ரமணிய சுவாமியின் திருவுருவம் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அந்த சிலையானது முருக பக்தரான சித்தர் ஒருவரின் சமாதிக்கு மேலே வைக்கப்பட்டு தற்போதுள்ள கோயில் எழுப்பப்பட்டது என்கிறார்கள். திருக்கோயில் முன்மண்டபத் தூண்களில் ராமர், சீதை, ஆஞ்சநேயர் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சைவ, வைணவ ஒற்றுமை கருதி ராமபக்தர்களும் இத்தலத்து முருகனை வழிபட ஆரம்பித்ததால் இங்குள்ள பாலசுப்ரமணியர், ஹரிராம சுப்பிரமணியர் என்றழைக்கப்பட்டார். இங்கு நெளிந்தோடும் நதி அனுமன் நதி என்றாயிற்று. இங்கு ராமபிரான் வந்து சென்றதாகக் கூறப்படுவதன் அடிப்படையில் மூலவரான பாலசுப்ரமணியருக்கு வைகானஸ ஆகம முறையிலும், உற்சவரான முத்துக்குமார சுவாமிக்கு சிவாகம முறையிலும் பூஜைகள் நடத்தப்படுகின்றன. சிவன், சக்தி, சூரியன், விஷ்ணு, விநாயகர் ஆகிய ஐந்து இறை சக்தியும் இக்கோயிலில் உள்ள அரசு, வேம்பு, மாவிலிங்கம், மாதுளை, கருவேப்பிலை ஆகிய ஐந்து மரங்களில் எழுந்தருளி வருகிறார்கள் என்கிறார்கள். அந்த மரங்களின் கீழ் மூலவரான பாலசுப்ரமணியசுவாமி மயில் வாகனத்தின் மீது குழந்தை வடிவில் வீற்றிருக்கிறார். மயில் இடப்புறமாக தலை திருப்பியபடி காட்சி தருகிறது. வஜ்ராயுதத்தையும், சக்திவேலையும் தன் இரு கைகளில் ஏந்தி, கால்களில் தண்டையும், சலங்கையும் அணிந்து,  நின்ற திருக்கோலத்தில் ஒன்றரை அடி உயர மூர்த்தியாக பச்சிளம் பாலகன் உருவில் உற்சவ முருகன் இங்கு அருட்பாலிக்கிறார். குழந்தைப்பேறு வேண்டுபவர்கள் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால் அவர்களது வீட்டில் விரைவில் மழலைக் குரல் ஒலிக்கும் என்பது பக்தர்களின் அனுபவம். பாலசுப்ரமணிய சுவாமியை வணங்கி, வேண்டிக்கொண்ட செயல்கள் நிறைவேறப் பெற்றவர்கள், பாயசத்தை நிவேதனமாகப் படைத்து அதனை கோயிலுக்கு அருகில் ஓடும் அனுமன் நதிக்கரையில் உள்ள படியில் ஊற்றி, சிறுவர்களை அருந்தச் சொல்கிறார்கள். இதனை படிப்பாயச நிவேதனம் என்கிறார்கள். சிறுவர்கள் உருவில் முருகனே வந்து பாயச நிவேதனத்தை ஏற்பதாக ஐதீகம்.இத்தலத்தில் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. உற்சவரான முத்துக்குமார சுவாமி சஷ்டி திருவிழாவின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் வந்து பக்தர்களுக்கு அருட்பாலிக்கிறார். சஷ்டி திருவிழாவின் ஆறாம் நாள், திருச்செந்தூர் போலவே இங்கும் சூரசம்ஹார நிகழ்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. அதற்காக, இவ்வூரிலுள்ள சௌந்தர்யநாயகி சமேத காளகண்டேஸ்வரர் திருக்கோயில் மைதானத்தில் யுத்த களம் அமைக்கப்படுகிறது. முருகப்பெருமான் மைதானத்துக்கு வந்து காளகண்டேஸ்வரர் சந்நதியில் அன்னை, தந்தையிடம் ஆசி பெறுவார். அதன்பின் அன்னை தன் மைந்தனாகிய முருகனுக்கு வேல் கொடுக்கும் விதமாக,  கோயிலிலிருந்து வேல் கொண்டு வரப்படும். யானைமுகன், சிங்கமுகன், சூரபத்மன் போன்று வேடமணிந்தவர்கள் ஒருபுறம் நிற்க, இன்னொருபுறம் வீரபாகு தேவர் தன்னுடைய பரிவாரங்களுடன் அவர்களை எதிர்க்க, முருகனைச் சார்ந்தவர்களும் சூரனைச் சார்ந்தவர்களும் மைதானத்தில் சண்டையிட்டுக் கொள்வது போன்று பாவனை செய்வதைப் பார்க்க அற்புதமாக இருக்கும். அசுரராக வேடம் அணிபவர்களும் ஆறு நாட்கள் விரதம் இருப்பார்கள். பொதுவாக, சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் கோயிலுக்கு அருகில் உள்ள மண்டபத்திலேயே விரதம் இருப்பார்கள்.கந்த சஷ்டி திருவிழா தவிர சித்திரை மாதப்பிறப்பு, வைகாசி விசாகம், புரட்டாசி மற்றும் தை மாதத்தில் பரிவேட்டை, திருக்கார்த்திகை, தைப்பூசம் போன்றவை முக்கிய விழாக்கள் ஆகும். மேலும் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை, சஷ்டி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. கோயிலின் பிராகாரத்திற்குள் உற்சவ மூர்த்தியின் வெள்ளித்தேர் பவனியும் உண்டு. ஆண்டுதோறும் தை மாதம் கருவறையை பூக்களால் நிரப்பி அலங்கரித்து புஷ்பாஞ்சலி செய்து பாலசுப்ரமணியரை வழிபடுகின்றனர்.  கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க, நோய் நீங்க, ஆயுள் பெருக, மழலைச் செல்வம் கிடைக்க இந்த பாலசுப்ரமணிய சுவாமியை பக்தர்கள் தரிசித்து பலன் பெறுகிறார்கள்.பாலசுப்ரமணியர் விரும்பி ஏற்கும் நைவேத்தியம் படிப்பாயசம் என்று கூறப்படுகிறது. இத்தலத்தில் அதை துலாபாயசம் என்றும் அழைக்கின்றனர். துலாம் என்பது நெல்லை மாவட்டத்தில் வழக்கிலிருந்த ஒரு நிறுத்தல் அளவை. 11 படி பச்சரிசி, ஒரு படி பயத்தம்பருப்பும், 108 தேங்காய்கள் (பாலுக்காக) அல்லது அறுபது லிட்டர் பசும்பால், முப்பத்தைந்து கிலோ சர்க்கரை, நெய், ஏலக்காய், கிராம்பு ஆகியன சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது இந்த நிவேதனப் பாயசம். நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ளது ஆய்க்குடி.தொகுப்பு: ந.பரணிகுமார்

The post எந்த கோயில்? என்ன பிரசாதம்? appeared first on Dinakaran.

Tags : Ayakudi ,Ayakudi Balasubramanyaswamy ,Thirukhoy ,Mallapuram ,
× RELATED ஆயக்குடி கொய்யாவிற்கு புவிசார்...