‘கே.ஜி.எஃப்’ 2 பாகங்கள், ‘சலார்’ ஆகிய படங்களை இயக்கிய பிரசாந்த் நீல், தற்போது இயக்கும் ‘டிராகன்’ படத்தில் ஜூனியர் என்டிஆர் ஹீரோவாக நடிக்கிறார். அவரது ஜோடியாக ருக்மிணி வசந்த் நடிக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படம், வரும் ஜூன் 11ம் தேதி தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரைக்கு வருகிறது. இதன் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி அதிக வரவேற்பு பெற்றுள்ளது. இதுபற்றி பிரசாந்த் நீல் கூறுகையில், ‘டீசரில் நாங்கள் காட்டியிருப்பது வெறும் கதையின் பின்னணி மட்டும்தான்.
அதிலுள்ள விஷயங்கள், படத்தின் உண்மையான கதைக்கு முற்றிலும் மாறானவை. இதுவரை யாரும் பார்த்திருக்காத சிறந்த தேசபக்தி படத்தை உருவாக்க முயற்சி செய்கிறோம். அதில் வெற்றியும் பெறுவோம். ஜூனியர் என்டிஆரை இந்த கேரக்டருக்காக உடல் எடையை குறைக்க சொன்னேன். ஆனால், அதை அவர் வெறித்தனமாக எடுத்துக்கொண்டு, 4 மாதங்கள் கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டு தீவிரமாக எடையை குறைத்தார். ஒருகட்டத்தில் அவர் மிகவும் மெலிந்து வெளுத்து காணப்பட்டார். எடை குறைப்பதை நிறுத்த சொல்லியும் கூட கேட்கவில்லை. அதை பார்த்த அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் என்மீது கடுமையாக கோபப்பட்டனர்’ என்றார்.

