×

அக்கா கடை- என்னை நம்பியவர்களை காப்பாற்றுவது என் பொறுப்பு!

நன்றி குங்குமம் தோழி சேலம் நாமக்கல் ஹைவே செல்லும் சாலையில் பொம்மைக்குட்டைமேடு பேருந்து நிலையம் அருகில் இந்த டீக்கடையை நாம யாரும் மிஸ் செய்திட முடியாது. காலை நான்கு மணிக்கெல்லாம் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருப்பதை, கடையில் இருக்கும் கூட்டமே அடையாளம் காண்பித்துவிடும். அந்த சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்கள் மட்டுமில்லாமல் வெளியூரில் இருந்து வருபவர்கள் கண்டிப்பாக ‘பார்வதி டீ ஸ்டாலு’க்கு போகாமல் இருக்கமாட்டாங்க. அவ்வளவு ஃபேமஸ். இந்த கடையினை பார்வதி தன் நான்கு மகளுடன் இணைந்து நடத்தி வருகிறார். ‘‘ரொம்ப கஷ்டப்பட்டு தான் இந்த நிலைக்கு வந்திருக்கேன். நான் பெரிசா படிக்கல. மூணாம் வகுப்பு வரை தான் படிச்சிருக்கேன். நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சேலம் கிழக்கு பாலப்பட்டியில். அப்பா கிடையாது. அம்மா தான் எல்லாமே. அம்மா தெருத்தெருவா போய் கீரை வித்து தான் என்னை வளர்த்தாங்க. அதில் வரும் வருமானம் எங்க வாழ்வாதாரத்துக்கே சரியா இருந்தது. அதனால என்னை அவங்களால படிக்க வைக்க முடியல. நான் அம்மாக்கு உதவியா காட்டு வேலைக்கு போனேன்.களத்து வேலையும் செய்வேன். இப்படித்தான் எங்க காலம் நகர்ந்தது. இந்த காலக்கட்டத்தில் வேலூர் அருகே என்னைக் கட்டிக் கொடுத்தாங்க. நானும் என் கணவரும் இங்க அம்மா ஊரோடு வந்து செட்டிலாயிட்டோம். என் கணவருக்கு பால் கறப்பது தான் வேலை. கிராமத்தில் மாடு உள்ள வீட்டில் பால் கறந்து அதை கடைக்கு கொடுத்து வந்தோம். இந்த சமயத்தில் பாலை விற்பதற்கு நாமளே ஏன் அதில் ஒரு டீக்கடை ஆரம்பிக்கக்கூடாதுன்னு தோணுச்சு. அக்கம் பக்கத்துல கடன் வாங்கித்தான் இந்த டீக்கடையை ஆரம்பிச்சோம்’’ என்றவர் ஒரு வருடம் பெரிய அளவில் வருமானம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்.‘‘இந்த டீக்கடை ஆரம்பிச்சு இப்ப 30 வருஷமாச்சு. ஆனா மக்களுக்கு எங்க டீயின் சுவை பிடிக்க ஒரு வருஷமாச்சுன்னு சொல்லணும். கடை ஆரம்பிச்ச போது ஒரு லிட்டர் பால் தான் டீக்காக பயன்படுத்துவோம். அதுவே பெரிய அளவில் போகாது. ஒரு டீ, இரண்டு டீன்னு தான் விற்பனையாகும். ஏதாவது ஸ்னாக்ஸ் போட்டா ஓரளவு விற்பனை பார்க்கலாம்ன்னு பஜ்ஜி, போண்டான்னு போட ஆரம்பிச்சோம். புதுசா எந்த ஒரு கடை திறந்தாலும், போய் சாப்பிட்டு பார்க்கலாம்ன்னு வரவங்க ஒரு ரகம். புதுசுா இருக்கு… நல்லா இருக்குமா? எதுக்கு தெரியாம போய் சாப்பிடணும்ன்னு யோசிக்கிறவங்க இரண்டாம் ரகம். இன்னிக்கு விற்பனையாகும், நாளைக்கு விற்பனையாகும்ன்னு எங்களுக்குள்ளே இருந்த நம்பிக்கையில்தான் நானும் என் கணவரும் இணைந்து கடையை நடத்திக் கொண்டு இருந்தோம். ஆனா எங்க நம்பிக்கை வீண் போகல. ஒரு வருஷம் கழிச்சு, பார்வதி டீ ஸ்டால்ன்னா எல்லாருக்கும் தெரிய ஆரம்பிச்சது. வாடிக்கையாளர்கள் வர ஆரம்பிச்சாங்க. ஒரு லிட்டர் பால் ஐந்து லிட்டராச்சு, அதன் பிறகு 15 லிட்டர்ன்னு கொஞ்சம் கொஞ்சமா எங்க டீயின் விற்பனையும் அதிகரிச்சது. ஓரளவுக்கு கடையில் கூட்டம் வர ஆரம்பிச்சாங்க. ஆனாலும் எங்களின் கஷ்டம் தீரவில்லை. எனக்கு நாலு பெண் பிள்ளைங்க. பசங்க வளர வளர எங்களின் தேவையும் அதிகமாச்சு. சில சமயம் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாம இருக்கும். அரிசி வாங்க காசு இருக்காது. அதனால கம்பு, சோளம்ன்னு வாங்கி அதை கூழா செய்து சாப்பிடுவோம். சாதம் வடிச்சா எங்க ஆறு பேருக்கும் பத்தாது. வயிறும் நிரம்பாது. இதற்கிடையில் என் பசங்களும் வளர ஆரம்பிச்சாங்க. பள்ளியில் சேர்த்தேன். நினைச்ச மாதிரி என்னால அவங்கள படிக்க வைக்க முடியல. பெரிய பொண்ணு ஆறாம் வகுப்பு வரை படிச்சிருக்கா. இன்னொரு பொண்ணு 5ம் வகுப்பு, மூணாவது பொண்ணு பத்தாம் வகுப்பில் சேர்ந்தா, மேலும் படிக்க வைக்க முடியல. கடைசி பொண்ணு பத்தாம் வகுப்பு வரை படிச்சிருக்கா. அப்ப வசதி குறைவு என்பதால் அதற்கு மேல் அவளையும் என்னால படிக்க வைக்க முடியல. நாலு பேரும் எனக்கு உதவியா கடையை பார்த்துக்க ஆரம்பிச்சாங்க’’ என்றவர் கடையில் ஒவ்வொரு பலகாரமும் தன் கைபக்குவத்தில்தான் தயார் செய்து வருகிறார்.‘‘நான் ஓரளவுக்கு சமைப்பேன். ஆனால் பலகாரம் எல்லாம் இப்படித்தான் செய்யணும்ன்னு எல்லாம் தெரியாது. சரியான பக்குவம் மற்றும் சுவை வரும் வரை பல முறை செய்து பார்ப்பேன். இந்த கடையில் உள்ள ஒவ்வொரு பலகாரமும் என்னுடைய கைப்பக்குவத்தால் உருவானது. எந்த ஒரு பலகாரமாக இருந்தாலும் முதலில் ஒரு அரைக்கிலோ அளவிற்கு செய்து பார்ப்பேன். சுவை நல்லா இருந்துச்சுன்னா, அதை அப்படியே பின்பற்றுவேன். சில சமயம் நாம் எதிர்பார்த்த சுவை வராது. அந்த சமயத்தில் மறுபடியும் வேறு ஒரு செய்முறையை கையாள்வேன். இப்ப எங்க கடையில் 20 வகையான இனிப்பு போடுறோம். ஸ்னாக்ஸ், மிக்சர், குச்சி முறுக்கு, ரிப்பன் பகோடா, குழிப்பணியாரம், மெதுபக்கோடா, போண்டா, முட்டை போண்டா, பஜ்ஜி… எல்லாம் போடுறோம். எங்க கடை குழிப்பணியாரம், வேர்க்கடலை சட்னி ெராம்ப ஃபேமஸ். அதை விரும்பி சாப்பிட பல இடங்களில் இருந்து வராங்க. சிலர் பார்சல் வாங்கிக் கொண்டு போறாங்க. எங்க கடை ஹைவே சாலையில் இருப்பதால், இந்த வழியா போறவங்க டீ சாப்பிட நிறுத்துவாங்க. ஆனா அவங்க எப்ப இந்த சாலையை கடந்தாலும் இங்க தான் டீ சாப்பிட வருவாங்க. அதுக்கு முக்கிய காரணம் நாங்க பாக்கெட் பால் பயன்படுத்துவது கிடையாது. கறவை பால் தான் எங்க டீயின் ஸ்பெஷாலிட்டி’’ என்றவர் ஐந்து வருடம் முன்பு தன் வாழ்வில் பெரிய இடி விழும் என்று எதிர்பார்க்கவில்லை.‘‘கடையும் நல்ல படியா போனது. அதே சாலையில் மற்றொரு டீக்கடை துவங்கினோம். பொண்ணுங்களும் பெரிசாயிட்டாங்க. அவங்களையும் நல்ல இடத்தில் கல்யாணம் செய்துகொடுத்தோம். எல்லாரும் இதே ஊர் என்பதால், அவங்களும் இரண்டு கடையை மாறி மாறி பார்த்துக்கிட்டாங்க. அப்பாடான்னு மூச்சு விடலாம்ன்னு இருந்த போது தான் எதிர்பாராத விதமாக என் வாழ்வில் பெரிய இழப்பை நான் சந்திக்க வேண்டி இருந்தது. என் கணவர் கீழே விழுந்ததில் அவரின் முதுகுத் தண்டில் அடிபட்டு, எழுந்து நடக்கவே முடியாம போனது. நிறைய செலவு செய்து அவரை மீட்டுக் கொண்டு வர போராடினேன். ஆனால் என்னால் அவரை பிழைக்க வைக்க முடியல. ஐந்து வருஷம் முன்பு என்னை தனியாக விட்டுவிட்டு இறந்துட்டார். எனக்கு எல்லாமே இருண்டு போனது. என்னுடைய பலம், பலவீனம் இரண்டும் அவர் தான். அவரே இல்லாத போது, நான் எப்படி என் வாழ்க்கையை நகர்த்துவதுன்னு கொஞ்சம் பயந்தேன். அந்த சமயத்தில் எனக்கு ஆறுதலாக இருந்தது என் கடையில் வேலைப்பார்ப்பவர்கள் மற்றும் என் மகள்கள். என்னால் மறுபடியும் பழையபடி இந்த கடையை நடத்த முடியும்ன்னு அவங்க அளித்த ஊக்கம் தான் இரண்டு வருஷம் முன்பு ஓட்டல் ஆரம்பிக்க உந்துதலாக இருந்தது. இப்போது நாலாவதாக அசைவ கடைக்கான வேலை நடந்து கொண்டு இருக்கிறது. தீபாவளிக்குள் ஆரம்பித்துவிடுவேன்’’ என்றவரின் கடையில் பெரும்பாலானவர்கள் பெண்கள் தான் வேலை செய்கிறார்கள்.‘‘கடையை ஆரம்பிச்ச போது நானும் என் மகள்களும்தான் எல்லாம் பார்த்துக் கொண்டோம். அதன் பிறகு வாடிக்கையாளர்கள் அதிகரிக்க தனியாக சமாளிக்க முடியல. அதனால் வேலைக்கு ஆட்களை நியமித்தேன். அதில் பெரும்பாலும் பெண்கள் தான். டீ போடுவது முதல் பலகாரம் செய்வது, பரிமாறுவது என நாற்பது பெண்கள் என் கடையில் வேலைப்பார்க்கிறாங்க. ஆண்கள் பத்து பேர் இருக்காங்க. ஓட்டலில், காலை டிபன், மதிய சாப்பாடு இரவு டிபன்னு கொடுக்கிறோம். இது முழுக்க முழுக்க சைவ ஓட்டல். ஸ்னாக்ஸ் சாப்பிட வந்தவங்க தான்… ஏன் நீங்க ஓட்டல் ஆரம்பிக்கக்கூாதுன்னு கேட்க ஆரம்பிச்சாங்க. டிபனுக்கு நாங்க வேற கடையை தேடி போக வேண்டி இருக்கு. நீங்க ஆரம்பிச்சீங்கன்னா… இங்கேயே சாப்பிட்டு போயிடுவோம்ன்னு சொல்ல… அப்படித்தான் ஓட்டல் ஆரம்பமாச்சு. இப்ப அடுத்தபடியாக அசைவ உணவகம் ஆரம்பிக்க இருக்கேன். என் கணவர் இருந்த வரை அவர் தான் வீட்டுக்கு சென்று பால் கறந்து வருவார். இப்ப நாங்க தினமும் ஒரு லிட்டர் 40 ரூபாய்ன்னு பால் கறப்பவரிடம் வாங்குறோம்’’ என்றவர் கோவிட் காலத்தில் தன் ஊழியர்கள் கஷ்டப்படக்கூடாதுன்னு அவர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துள்ளார்.‘‘நாங்க கஷ்டப்பட்ட போது பலர் உதவி செய்தாங்க. அவங்க உதவி இல்லைன்னா எங்களால இவ்வளவு தூரம் வளர்ந்து இருக்க முடியாது. அதே மாதிரி தான் என்னை நம்பி என் கடையில் வேலைப் பார்ப்பவர்களும். அவங்க சொந்த கடைபோல் பார்த்துப்பாங்க. ஒருத்தர் வரலைன்னா கூட மத்தவங்க அவரின் வேலையையும் சேர்த்து பார்ப்பாங்க. அவங்க உழைப்பு தான் என் பலமே. கொரோனாவால் 50 நாள் கடையை நடத்த முடியல. வருமானமும் இல்லை. என்னை நம்பியவங்களை அப்படியே விட முடியாது. அவங்களின் அத்தியாவசிய தேவைக்காக என்னால் முடிந்த உதவியை செய்தேன். இப்ப மறுபடியும் பழையபடி கடையை திறந்துட்டோம். இந்த பேரிடரில் இருந்து கண்டிப்பாக மீள்வோம் என்ற நம்பிக்கை இருக்கு’’ என்றார் பார்வதி அக்கா.செய்தி: ப்ரியாபடங்கள்: ஜெகன்

The post அக்கா கடை- என்னை நம்பியவர்களை காப்பாற்றுவது என் பொறுப்பு! appeared first on Dinakaran.

Tags : aka shop ,Kunkumum ,Salem Namakkal Highway Road ,Pommykutyamedu Bus Station ,Teacatra ,Dinakaran ,
× RELATED ஆன்லைனிலும் தங்க நகைகள் விற்கலாம்!