×

அமெரிக்காவின் முதல் பெண் மில்லியனர்

நன்றி குங்குமம் தோழி செல்ஃப் மேட்அமெரிக்காவில் முதல் முறையாக சுய தொழில் ஆரம்பித்து அதன் மூலம் மில்லியனரான ஆப்ரிக்க அமெரிக்கப் பெண்ணின் வியப்பூட்டும் கதைதான் ‘செல்ஃப் மேட்’. இது ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த மினி-சீரிஸ், மேடம் சி.ஜே.வாக்கரின் பேத்தியின் பேத்தி, லீலியா பண்டில்ஸ் எழுதிய “On Her Own Ground: The Life and Times of Madam C.J.Walker” என்ற புத்தகத்தை தழுவி இயக்கப்பட்டுள்ளது.மேடம் சி.ஜே.வாக்கர் என்கிற சாரா ப்ரீட்லவ் (1867-1919), அமெரிக்க உள்நாட்டு போருக்கு முன்வரை அடிமைகளாக வாழ்ந்த கருப்பின பெற்றோரின் மகளாய் பிறந்தார். ஏழு வயதில் பெற்றோரை இழந்த சாரா, தன் சகோதரி குடும்பத்துடன் வசித்து வந்தார். தன் அக்காவின் கணவர் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க 14 வயதிலேயே திருமணம் செய்துகொண்டார். லீலியா என்ற மகளை பெற்றெடுத்தார். சாராவின் 20 வயதில் அவரது கணவர் இறந்துவிட, சலவைத் தொழிலாளியாக வேலை செய்து தன் ஒரே மகளை வளர்த்தார்.இந்த சமயத்தில், அவருக்கு உச்சந்தலையில் பிரச்சனை ஏற்பட்டு, முடி உதிர ஆரம்பித்தது. அந்த காலத்தில்; கருப்பின பெண்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக கடினமான வேலைகள் செய்தனர். அதில் பெரும்பாலானவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருந்தது. தங்களை ஆரோக்கியமாகப் பராமரித்துக்கொள்ள போதிய நேரமோ, வசதியோ கூட இவர்களுக்கு இல்லை. இதனால், சாராவை போலவே பல பெண்களுக்கும் இந்த பிரச்சனை இருந்தது. ஆனால், இவர்களின் இந்த பிரச்சனையைத் தீர்க்க, சந்தைகளில் கருப்பின பெண்களின் கூந்தலைப் பராமரிக்க பொருட்கள் இல்லை. இதனால் பல பெண்களை இனப்பாகுபாடுடன், தாழ்வு மனப்பான்மையும் சேர்ந்து வஞ்சித்தது.இந்த நிலையில், ஆடி மன்ரோவைச் சந்திக்கிறார் சாரா. ஆடி மன்ரோ பெண்களின் கூந்தலுக்கான அழகு பொருட்களை தயார் செய்து விற்பவர். அவர் ஒரு புதிய க்ரீமை உருவாக்கி சாராவிற்கு வழங்குகிறார். சில வாரங்களிலேயே சாராவின் உதிர்ந்த கூந்தல் மீண்டும் வளர ஆரம்பிக்கிறது. அவரது நோய் பிரச்சனையும் சரியாகிறது. இந்த பொருள் அனைத்து கருப்பின பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று, ஆடி மன்ரோவுடன் சேர்ந்து ஒன்றாகத் தொழில் செய்யும் திட்டத்தைச் சாரா பரிந்துரைக்கிறார். ஆனால், மன்ரோவோ, இந்த அழகுப் பொருட்கள் வெள்ளைப் பெண்களுக்கு மட்டுமே ஏற்றதாக இருக்கும் என்று கூறி சாராவை அவமானப்படுத்தி நிராகரித்து விடுகிறார்.மனமுடைந்த சாரா, நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை. இன பாகுபாட்டையும் பெண் முன்னேற்றத்தையும் பெற ஒரே வழி, சுயமாகச் சம்பாதித்து ஜெயிப்பதுதான் என முடிவுசெய்கிறார். மன்ரோவின் செய்முறையை அடிப்படையாகக் கொண்டு, கருப்பின பெண்களுக்கான அழகு சாதனங்களைத் தாமாக உருவாக்குகிறார். முதல் முறையாக ஆப்ரிக்க அமெரிக்கப் பெண்களுக்கான அழகுசாதனப் பொருட்களைச் சந்தைக்குக் கொண்டு வருகிறார். அதே சமயத்தில், விளம்பரத்துறையில் வேலை செய்து வரும் சார்லஸ் ஜோசப் வாக்கரை திருமணம் செய்து கொள்கிறார். ஆரம்பத்தில், சாராவின் பொருட்களை சார்லஸ் விளம்பரம் செய்து மக்களிடையே கொண்டு சேர்க்க உதவுகிறார். இருபதாம் நூற்றாண்டுக்கு முன்வரை, பெண் தொழில்முனைவோர்கள் பெரிதாக இல்லை. அதிலும் குறிப்பாக கருப்பின பெண்கள் கீழ் நிலை தொழிலாளிகளாகவே இருந்தனர். இச்சூழலில், மக்கள் தன்னை மதிப்புடன் நடத்தவேண்டும் என்பதில் உறுதியாக இருந்த சாரா, தன்னை மேடம் சி.ஜே. வாக்கர் என அறிமுகப்படுத்த ஆரம்பித்தார். அதே பெயரில் ‘‘Madam C. J. Walker’s Wonderful Hair Grower” என்ற நிறுவனத்தையும் தொடங்கினார்.சந்தைகளில் கிடைத்த அழகுசாதனங்கள் பெரும்பாலும் வெள்ளையர்களுக்காகவே உருவாக்கப்பட்டு இருந்தன. இதனால் மேடம் வாக்கர், தன் பொருட்களால் கருப்பின பெண்களின் அழகும் ஆரோக்கியமும் பெருகும் என்று விளம்பரம் செய்து, ஒரு இனத்தையே மேம்படுத்தும் முயற்சியில் இறங்கினார்.‘‘அமெரிக்க நாடு, பணத்தைத் தவிர எதையுமே மதிப்பதில்லை. நம் மக்கள் முன்னேற, அவர்களில் சில பணக்காரர்களை உருவாக்கினாலே போதும்” என்று நம்பியவர், தொழிலில் நன்றாகச் சம்பாதித்தது மட்டுமில்லாமல், மிகப் பெரிய தொழிற்சாலைகளையும், பயிற்சி மையங்களையும் உருவாக்கினார். அதில் கருப்பின பெண்களையே வேலையில் நியமித்து, அவர்களுக்கான மதிப்பையும் வாழ்வாதாரத்தையும் பெருக்கினார். கருப்பின பெண்களை அழகானவர்கள் என்று கூட ஏற்க மறுத்த காலகட்டத்தில், அவர்களை தன் நிறுவனத்தின் மாடல்களாக அறிமுகப்படுத்தினார். நாடு முழுவதும் பயணித்து தன் நிறுவனக் கிளைகளைத் தொடங்கினார். மேலும் கருப்பின பெண்களின் பொருளாதார சுதந்திரத்திற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தது மட்டுமில்லாமல், ‘‘வாக்கர் சிஸ்டம்” என்ற பயிற்சி நிறுவனங்களை ஆரம்பித்தார். அதில் பெண்களுக்குப் பயிற்சியுடன் விற்பனை முகவர் உரிமமும் வழங்கி நிரந்தர வருமானத்திற்கு உதவினார். படிப்படியாக பல ஏமாற்றங்கள், போராட்டங்கள், நிராகரிப்புகளையும் தாண்டி மேடம் சி.ஜே. வாக்கராக சாரா உயரும் வெற்றிக்கதையே செல்ஃப் மேட் வெப் சீரிஸ். இந்த சீரிஸை உருவாக்கியவர்களில் பெரும்பான்மையானோரும் பெண்களே என்பது இதன் கூடுதல் சிறப்பம்சம். மேடம் சி.ஜே வாக்கராக விருதுகளுக்குப் பெயர் போன ஆக்டேவியா ஸ்பென்சர் நடித்துள்ளார். லீலியா பண்டில்ஸுடன் இணைந்து, நிக்கோல் ஜெபர்சன் ஆஷர், எல்லே ஜான்சன், ஜானின் ஷெர்மன் பரோயிஸ் மற்றும் டைகர் வில்லியம்ஸ் ஆகியோர் திரைக்கதையை வடிவமைத்துள்ளனர். காசி லெம்மன்ஸ், டிமேன் டேவிஸ் இருவரும் தலா இரண்டு அத்தியாயங்களை இயக்கியுள்ளனர்.கருப்பினர்களை வெறும் அடிமைகளாக நடத்திய காலகட்டத்தில் ஒரு பெண்ணாக வறுமையிலிருந்து தொழிலதிபராக வளர்ந்து, தன் இனத்தை சார்ந்தவர்களையும் முன்னேற்றிய மேடம் சி.ஜே வாக்கரின் வாழ்க்கை வரலாறு வியக்கத்தக்கது.ஸ்வேதா கண்ணன்

The post அமெரிக்காவின் முதல் பெண் மில்லியனர் appeared first on Dinakaran.

Tags : America ,Kunkum Doshi ,
× RELATED வளரும் குழந்தைகளும்… அவர்களின் வளர்ச்சிகளும்!