×

என்னை எனக்கே பிடிக்கவில்லை…

நன்றி குங்குமம் டாக்டர் ‘நான் ரொம்ப குண்டா இருக்கேன்…’ ‘சிவப்பா இல்லையே….’ ‘இன்னும் கொஞ்சம் சின்னதா மூக்கு இருந்திருக்கலாம்…’- இதுபோல் தன் உருவத்தைப் பற்றித் தானே கவலைப்படுவதும், தன்னைத் தானே வெறுப்பதுமான மனநிலை சிலரிடம் இருக்கிறது. தன்னுடைய உடலைப் பற்றிய இத்தகைய கவலையை Body Dysmorphic Disorder என்கிறது உளவியல். சுருக்கமாக BDD எனப்படும் இந்த உளவியல் சிக்கல் பெண்களுக்கு மட்டுமே உண்டு என்றும் நினைக்க முடியாது. ஆண்களிடம் சரிசமமாக இருக்கிறது என்றே நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த சிக்கலை எப்படி அடையாளம் காண்பது? எப்படி மீள்வது என்றும் இதற்கு வழிகாட்டுகிறார்கள் உளவியலாளர்கள்.தோற்றத்தை வைத்து ஒருவரை மதிப்பீடு செய்யும் இந்த காலகட்டத்தில், அதற்கு அக்கறை செலுத்துவது தவறில்லைதான். ஆனால், நாம் அழகாக இல்லையோ என்று எப்போதும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதும், நம் உருவத்தைப்பற்றி நாமே அசிங்கப்பட்டுக் கொள்வதும், அதனால் ஒருவரின் மன அமைதியும் உற்பத்தித்திறனும் பாதிக்கப்பட்டால், அவை உடல் உருவத்தைப் பற்றிய மனநலக் குறைபாட்டின் அறிகுறிகளாக பார்க்கப்படுகின்றன. உருவத்தைப் பற்றிய மனநலக் குறைபாடு உடைய ஒருவர் தன்னம்பிக்கை இழப்பதும், தன்னைப்பற்றியே அசிங்கமாக நினைப்பதும் அதிகரிக்கத் தொடங்கினால், அவருடைய வாழ்க்கை முறையையே பாதிக்கத் தொடங்கிவிடும். அவரின் சமூக, கல்வி மற்றும் தொழில்முறை சார்ந்த செயல்பாடுகள் குறைய ஆரம்பிக்கும். இது ஒரு தனித்துவமான மனநலக் கோளாறு ஆகும். இதில் ஒரு நபர் கற்பனையான உடல் குறைபாடு அல்லது மற்றவர்கள் பெரும்பாலும் பார்க்க முடியாத ஒரு சிறிய குறைபாட்டைக்கூட பெரிதுபடுத்தி மன அமைதியை இழக்கிறார்கள். தங்களை அசிங்கமாக பார்க்கிறார்கள்; பெரும்பாலும் சமூக வெளிப்பாட்டைத் தவிர்க்கிறார்கள் அல்லது பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்கிறார்கள்; மீண்டும் மீண்டும் தங்களின் தோற்றத்தை மேம்படுத்த முயற்சிக்கிறார்கள். சமூக கவலைக்கோளாறு(Social Anxiety Disorder), கட்டாய கவலைக்கோளாறு(Obsessive compulsive disorder) மற்றும் பொருள்சார் குறைபாடு(Substance-related Disorder) போன்றவை உருவத்தைப் பற்றிய மனநலக் குறைபாட்டுடன் பொதுவாக ஏற்படும் பிற மனநோய்களாகும்.சிலர் தன் உடல் முழுவதையும் மறைக்கும் வகையிலும், தொப்பையை மறைப்பதற்காகவும் தளர்வான ஆடைகளை அணியும் வழக்கத்தை கொண்டிருப்பார்கள். குண்டாக இருப்பதை மற்றவர்கள் கேலி செய்து விடுவார்களோ என்ற அதீத மனக்கவலைதான் இதற்கு காரணம். இதுவும் உடல் உருவத்தைப் பற்றிய மனநலக் குறைபாடுதான். Bell’s palsy- எனப்படும் முகவாத நோயால் பாதிக்கப்படும் ஒருவருக்கு, ஒரு பக்க முகம் சற்றே மூடிக்கொள்வது, அவரின் கட்டுப்பாடின்றியே கண்கள் தானாக மூடிக்கொள்வது, நீர் வடிவது, வாய் சற்றே இழுத்துக் கொண்டே இருப்பது போன்ற சூழல் இருக்கும். இதை பிஸியோதெரபி சிகிச்சை மூலம் சரி செய்துவிட முடியும். ஆனால், பிரச்னைக்கான தீர்வு இருப்பதை அறியாமல் இவர்களுக்கு நிரந்தரமாகத் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுவிடும். மற்றவர்களோடு பழகுவதற்கே பயப்படுவார்கள். இவர்களுக்கு இருப்பது Social Anxiety என்று வரையறுக்கலாம். இதுபோன்ற குறைபாடுகள் மற்றவர்களின் கவனத்திற்கே வராமல் ரொம்பவும் நுட்பமாகத்தான் இருக்கும். நாம் சிரிப்பது கோணலாக இருக்கிறதோ என்ற பயம் எப்போதும் இவர்களுக்கு இருந்துகொண்டே இருக்கும். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இதேபோல் சிலர் தன் உடல் எடையைப் பற்றி எப்போதும் கவலை கொண்டிருப்பார்கள். அதைப்பற்றி ஒருவரும் குறை கூறவில்லை என்றாலும், தாங்கள் குண்டாக இருக்கிறோம் என்ற மாய எண்ணம் இவர்கள் மனதில் இருந்துகொண்டே இருக்கும். அடிக்கடி எடை மிஷினில் எடை பார்ப்பது அல்லது கண்ணாடியில் பார்த்துவிட்டு, தனக்குத்தானே எடை கூடி விட்டதாக கற்பனை செய்து கொள்வார்கள். பிரபலமான உணவுக் கட்டுப்பாடுகளை முயற்சித்து, ஊட்டச்சத்து குறைபாட்டினால் தேவையற்ற பிரச்னைகளை தாங்களே வரவழைத்துக் கொள்வார்கள். இந்தக் குறைபாடு இவர்களின் உறவுமுறை, தொழில்முறை சார்ந்த வாழ்க்கையை மோசமாக பாதித்துவிடும்.பெரும்பாலும் உடல் உருவத்தைப்பற்றிய மனநலக் குறைபாடு 15 முதல் 30 வயதுக்குட்பட்ட காலத்தில் வருகிறது. உடல் உருவத்தைப்பற்றிய மனநலக் குறைபாட்டோடு 90 சதவீதத்துக்கு மேல் மனச்சோர்வு, பதற்றம் மற்றும் பிற உளவியல் நோய்களும் இணைந்து வருகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் சமூகம் மற்றும் தொழில் சார்ந்து மற்றவர்களோடு இணைவதைத் தவிர்க்கிறார்கள். மேலும் தங்களின் குறைகள் குறித்து ஏளனம் செய்யப்படுவதைப் பற்றிய பயத்தால் வீட்டிலேயே முடங்கிவிடுகிறார்கள். இவர்களின் இந்தநிலைக்கு உளவியல் ஆலோசனை மற்றும் மனநலத்திற்கான சிகிச்சை என இரண்டும் சேர்ந்த தொழில்முறை உளவியல் வல்லுனர்களின் உதவியைப் பெறுவது உடனடித் தேவை என்பதை மனநல நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள். சமூக ஊடகங்கள் மற்றும் திரையில் வரும் பிரபலங்களின் உடலமைப்பைப் பார்த்து, தங்களின் தோற்றத்தைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையால் தனி நபர்கள் பாதிக்கப்படுவது தற்போது அதிகரித்து வருகிறது. விளம்பரங்கள் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. பெண்கள் என்றாலே ஒல்லியான தேகம், மாசு மருவற்ற சருமம், பளிச்சென்ற நிறம் என்று விளம்பரங்களில் சித்தரிப்பதே இதன் காரணம். விளம்பரத்தைப் பார்த்து உயரமாக இருப்பதுதான் சரியோ என்று நினைக்கும் உயரம் குறைந்த மாணவர்கள் தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகிறார்கள். பிரபலங்களும் வெள்ளையாக்கும் க்ரீம், உயரமாக்கும் ஊட்டச்சத்து பானம் போன்ற மற்றவர்களின் மனத்தை சிதறடிக்கும் விளம்பரங்களில் நடிப்பதை தவிர்ப்பதோடு, தனக்குள்ள குறைகளைப்பற்றி தைரியமாக பேச முன் வர வேண்டும். அப்போதுதான் நம் உருவத்தைப்பற்றி வெட்கப்படத் தேவையில்லை என்ற எண்ணம் மக்களிடத்தில் உருவாகும். முகம் பார்க்கும் கண்ணாடியில் அடிக்கடி தன்னைத்தானே பார்த்துக் கொள்வது, தனக்குள்ள குறையை ஒப்பனையாலோ ஆடைகளாலோ மறைக்க முயற்சி செய்வது, தன்னைப்பற்றி அல்லது தன்னைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றி கவலைப்படுவது, தங்களின் தோற்றத்தை மேம்படுத்த மருத்துவ நிபுணர்களை மீண்டும் மீண்டும் ஆலோசிப்பது போன்றவை உடல் உருவம் பற்றிய மனநலக்குறைபாடு இருப்பதற்கான அறிகுறிகள். குழந்தைப்பருவத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்களால் ஏற்பட்ட அனுபவம், தாழ்வு மனப்பான்மை, குறிப்பிட்ட நபரின் தோற்றத்தை பெற்றோர்கள் அல்லது நண்பர்களால் விமர்சிக்கப்படுவது மற்றும் சமூகத்திலிருந்து வரும் அழுத்தம் போன்றவை BDD-ன் தீவிரத்தை தூண்டக் கூடியவை. சில நேரங்களில் மூளை நரம்பு மண்டலத்தில் நிகழும் ரசாயன மாற்றங்களாலும் தூண்டப்படலாம். BDD காரணமாக பாதிக்கப்பட்ட ஒருவருக்கு குடும்பத்தினரும், நண்பர்களும் அவரது உடல் உருவத்தைப் பற்றிய ஆரோக்கியமான மற்றும் யதார்த்தமான அணுகுமுறைகளை கற்பிப்பது அவரது மனம் மேலும் மோசமடைவதைத் தடுக்கும். உருவம் தொடர்பான மதிப்பீடுகள் எல்லாமே மாயை என்ற புரிதல் முதலில் ஏற்பட வேண்டும். தன்னம்பிக்கை அவசியம். ஒருவருடைய மதிப்பு என்பது அவருடைய சிந்தனைகளாலும், செயல்களாலும்தான் தீர்மானிக்கப்படும் என்பதை நினைவில் கொண்டு உங்களுடைய சிந்தனைகளிலும், செயல்களிலும் அழகாக மாற முயற்சி செய்யுங்கள். அதுவே சரியான தீர்வு! தொகுப்பு: உஷா நாராயணன்

The post என்னை எனக்கே பிடிக்கவில்லை… appeared first on Dinakaran.

Tags : Saffron ,Romba Kunda ,Shivappa ,
× RELATED மூக்கிரட்டை கீரையின் மருத்துவ குணங்கள்!