×

புதிய மாவட்டங்கள் பிரிப்பால் இப்படியும் சிக்கல் எங்கள் ஓட்டு இந்த தொகுதிக்கா? அந்த தொகுதிக்கா?..தவிப்பில் 13 ஊராட்சி மக்கள்

வேலூர் மாவட்டம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு விட்டது. இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் தாலுகா, ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் இருந்த 13 ஊராட்சிகள் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவிற்கு மாற்றப்பட்டது. ஆனால் தேர்தல் தொகுதிகளை மட்டும் மாற்றாமல் தாமதித்து வருகின்றனர். தற்போது திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகாவில் இருந்த அகரம் வருவாய்துறையை சேர்ந்த 13 ஊராட்சிகளும் வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவில் இருந்து அரசு சலுகைகளை பெற்று வருகிறது. ஆனால் ஓட்டு உரிமை மட்டும் ஆம்பூர் தொகுதியில் இருக்கின்றது. மேலும் 13 ஊராட்சிகளில் ஏதேனும் அரசு சார்பில் விழா நடத்தினால் அணைக்கட்டு தாலுகாவில் இருக்கும் அதிகாரிகளும் அரசியல் பிரமுகர்களும் கலந்துகொள்கின்றனர். ஆனால் ஆம்பூர் தொகுதியை சேர்ந்தவர்கள் வருவதில்லை. இதனால் அணைக்கட்டு தொகுதியை சார்ந்த அரசியல் பிரமுகர்களை மட்டுமே பார்த்த 13 ஊராட்சி மக்களும் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு தான் வாக்களிக்க வேண்டும் என எண்ணி இருக்கின்றனர். ஆனால் வாக்களிக்க முடியாத சூழல் இருப்பதை அறிந்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த குழப்பங்களுக்கு இடையே தாங்கள் எந்த தொகுதிக்கு வாக்களிக்க வேண்டும் என தெரியாமல் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். மேலும் 13 ஊராட்சிகளுக்கான வருவாய்த்துறையும் அணைக்கட்டு தாலுகாவில் இருந்து வருகிறது. ஆனால் தேர்தல் அடையாள அட்டைகள் மட்டும் ஆம்பூர் தாலுகாவில் வாங்கிக் கொள்ளுமாறு அதிகாரிகள் கூறுகின்றனர் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட இரு மாவட்ட ஆட்சியர்கள் அதிகாரிகளிடம் ஆலோசித்து விரைவாக 13 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சந்தேகங்களை தீர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையாக கூறுகின்றனர்….

The post புதிய மாவட்டங்கள் பிரிப்பால் இப்படியும் சிக்கல் எங்கள் ஓட்டு இந்த தொகுதிக்கா? அந்த தொகுதிக்கா?..தவிப்பில் 13 ஊராட்சி மக்கள் appeared first on Dinakaran.

Tags : Vellore district ,Vellore ,Thirupathur ,Ranipette ,Ampur Thaluka ,Tirupattur district ,Dinakaran ,
× RELATED வேலூர் மாவட்ட எல்லையில் 5 மதுக்கடைக்கு...