×

அசைவ உணவு ஆரோக்கியமாக…

நன்றி குங்குமம் டாக்டர்ஆரோக்கிய ஆத்திசூடிநல்லொழுக்கத்தைக் கற்பிக்க வேண்டும் என்று அவ்வைப் பாட்டி ஆத்திசூடியையும், விடுதலை வேட்கை வர; வேண்டும் என்று மகாகவி பாரதி நவீன ஆத்திசூடியையும் எழுதினார்கள். அதுபோன்று இன்றைய கால கட்டத்தில் ‘ஆரோக்கிய ஆத்திசூடி’ எழுத வேண்டிய கட்டாய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். குறிப்பாக, அசைவ உணவுப்பழக்கம் அதிகரித்திருக்கும் நிலையில் அது பற்றிய தெளிவான புரிதலுக்கு வர வேண்டும்.உணவு உண்பது அவரவர் உரிமை. ஒரு காலத்தில் உறவுக்காரர்கள் வந்தால் கொண்டாட்டத்தின் அடையாளமாக சமைக்கப்பட்ட அசைவ உணவுகள் இன்று எந்நாளும், எந்நேரமும், எங்கேயும் கிடைக்கின்றன. அதுவும் தற்போது டோர் டெலிவரி என்று வீட்டிலேயே வந்து கொடுக்க ஆரம்பித்து விட்டனர். இது ஒருவகையில் நன்மை என்றாலும் அதனால் ஏற்படும் பின் விளைவுகள் ஏராளம். உடல் பருமன், ரத்தத்தில் அதிக கொழுப்பு, ரத்த அழுத்தம் போன்ற உடல்நல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை விரிவாக சொல்ல வேண்டியதில்லை. ;அப்படியானால் அசைவ உணவு ஆபத்தானதா? அவற்றை எடுத்துக்கொள்ளக் கூடாதா? எனக்கு அசைவம் ரொம்ப பிடிக்குமே? நான் என்ன செய்வது? என்ற கேள்விக்கணைகள் உங்கள் உள்ளத்தில் உதிக்க வாய்ப்பு இருக்கிறது. முறையாக சமைக்கப்பட்ட ஊன் உணவை சரியான நேரத்தில், சரியான அளவில், எடுத்துக்கொள்ள வேண்டியவர்கள் எடுத்துக் கொண்டால் அசைவமும் ஆரோக்கியம்தான். இல்லாவிட்டால் பிரச்னைதான்.ஊன் என்ற சொல்லுக்கு தசை அல்லது மாமிசம் என்று பொருள். ஆயுர்வேதம் ஊனுக்கு மட்டும் இல்லை உணவுக்கும் அளவை நிர்ணயித்து சாப்பிட சொல்கிறது. ஆம்… இரைப்பையை மூன்றாகப் பிரித்து பாதியளவு திட உணவும், கால் பங்கு திரவ உணவும், கால் பங்கு காற்றும் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் உணவு நன்றாக ஜீரணமடையும். வயிற்றில் பளு இருக்காது. இதயம், நுரையீரல், கல்லீரல் போன்ற ராஜ உறுப்புகள் தன் பணியை செவ்வனே செய்யும். இவ்வாறு உணவுக்கே அளவை நிர்ணயித்து இருக்கையில் ஊன் உணவை கட்டாயம் நாம் அளவோடுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஊன் உணவை பொருத்தவரை விலங்குகளின் எந்த உடல்பகுதி எப்போது ஜீரணமாகும் என்பதைக் கூட ஆயுர்வேதம் வரையறுத்து வைத்திருக்கிறது. ஆண் விலங்குகளின் உடலில் முன்பாதி பகுதியில் உள்ள மாமிசம் எளிதில் ஜீரணிக்காது. பெண் விலங்குகளில் பின்பாதி பகுதியில் உள்ள மாமிசம் எளிதில் ஜீரணிக்காது. வயதானவற்றின் மாமிசத்தில் பலம் குறைந்து அதே சமயம் எளிதில் ஜீரணம் ஆகாமலும் இருக்கும். விலங்குகளின் கால் பகுதியைவிட இடுப்புப் பகுதி மாமிசம் எளிதில் ஜீரணம் ஆகாது. இடுப்புப் பகுதியைவிட முதுகு பகுதி எளிதில் ஜீரணமாகாது. முதுகு பகுதியைவிட தொடை, தோள்பட்டை, தலை என்று ஒன்றன் பின் ஒன்றாக எளிதில் ஜீரணமாகாத் தன்மையைக் கொண்டிருக்கும். எனவே, மாமிசத்தை எடுத்துக் கொள்ளும்போது அதனுடைய ஜீரணமாகும் தன்மையை நன்கு அறிந்து, தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். எடுத்துக்காட்டாக தலைக்கறி சாப்பிட ஆசைப்பட்டால் நமக்கு ஜீரண சக்தி எவ்வாறு உள்ளது என்பதை நன்கு அறிந்த பின் உண்ணலாம். வயிறு மந்தம், புளித்த ஏப்பம், மலச்சிக்கல், லேசான வலி போன்ற பிரச்னைகள் இருந்தால் தலைக்கறி மாமிசத்தை தவிர்த்தல் நல்லது. ஏனெனில், விலங்குகளின் மாமிசத்தில் எளிதில் ஜீரணமாகாதது தலைப்பகுதி மாமிசம் என்கிறது ஆயுர்வேதம். அடுத்து எவ்வகை மாமிசத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும் ஆயுர்வேதம் தெளிவாக விளக்கியுள்ளது.; அதாவது வெள்ளாட்டு மாமிசம்தான் மனிதனுக்கு உகந்தது. காரணம், மனிதனுடைய மாமிசமும் வெள்ளாட்டின் மாமிசமும் ஒரே மாதிரியான குணங்களை கொண்டவை. எனவே, வெள்ளாட்டின் மாமிசம் சிறந்தது. அதே சமயம் மனிதனுடைய ரத்தத்தில் வரையறுக்கப்பட்ட கொழுப்பின் அளவைவிட கூடுதலாக இருந்தால் வெள்ளாட்டின் மாமிசக் கொழுப்பையும் தவிர்த்தல் நல்லது. மற்ற விலங்குகளின் மாமிசம் யாருக்கெல்லாம் அதிக ஜீரண சக்தி இருக்கிறதோ, யாரெல்லாம் அதிக உடல் உழைப்பில் ஈடுபடுகிறார்களோ அவர்கள் எல்லாம் மற்ற விலங்குகளின் மாமிசத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மேலும் எந்தெந்த இறைச்சிகள் எல்லாம் விலக்கத்தக்கவை என்பது குறித்தும் ஆயுர்வேதம் தெளிவாக கூறியுள்ளது. கொழுப்பு மிகுதியாக உள்ள மாமிசம், நோய் மற்றும் நஞ்சு காரணமாக இறந்த மாமிசம், தானாக இறந்த, கண்களுக்குப் புலப்படாத வேறு இடத்தில் இறந்தது மற்றும் இளைத்தது போன்ற மாமிசங்களைத் தவிர்க்க வேண்டும். ஊன் அளவை எவ்வாறு நிர்மாணிப்பது?!* முதலில் நமக்கு ஜீரணிக்கும் திறன் நன்றாக இருக்கிறதா, சாப்பிடும் நாள் அன்று மலம் நன்றாக கழிந்ததா என்று சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மலம் நன்றாக கழிந்தது என்றால் வயிறு லேசாகி, மலம் கழித்த திருப்தி இருக்கும். நன்றாக பசியும் ஏற்படும். * எந்த வகை மாமிசம், எந்த உறுப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை தெளிவாக நிர்ணயம் செய்ய வேண்டும். * சாப்பிடும் முன் இறைச்சி முறையாக சுத்தம் செய்து பக்குவம் செய்யப்பட்டதா என்பதை நிர்ணயம் செய்ய வேண்டும். * உடல் உழைப்புக்கு ஏற்றவாறுதான் ஊன் உணவையும் எடுத்துக்கொள்ள வேண்டும். நன்றாக உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் ஊன் உணவை அதிகளவிலும், குறைந்த உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் ஊன் உணவை அளவாகவும், உடல் உழைப்பே இல்லாதவர்கள் ஊன் உணவைத் தவிர்த்தலும் நன்று. * ஜீரண சக்தி குறைவாக உள்ளவர்கள், நோயுற்றவர்கள் மாமிச உணவை ரசமாக செய்து சாப்பிடலாம். இதன் மூலம் மாமிசத்தின் ஊட்டச்சத்து மிக எளிதாக உடலுக்குக் கிடைப்பதோடு, அதை நன்றாக ஜீரணமடையச் செய்யும். * கலப்பின உணவு உண்டவர்கள் (அதாவது சைவமும் அசைவமும் கலந்து உண்டவர்கள்) வாரம் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் மேற்கூறிய சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருந்தால் ஊன் உணவை எடுத்துக் கொள்ளலாம். * அசைவம் மட்டும் எடுத்துக் கொள்ளும் கலாச்சாரம் தற்போது பெருகி வருகிறது. கட்டாயம் அசைவம் எடுத்துக் கொண்டு தவறாது முறையான உடற்பயிற்சியில் ஈடுபட்டால் தவறில்லை. மாறாக ஊன் மட்டும் உண்ட பின்பு உறக்கத்தை மேற்கொண்டால் ஊன் உளை வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆக ஜீரண சக்தி, உடலின் தன்மை, உடல் உழைப்பு, உடற்பயிற்சி இவற்றைப் பொறுத்து ஊன் உணவின் அளவை நிர்ணயித்து சாப்பிட்டால் என்றும் ஆரோக்கியம்தான்!– க.கதிரவன்

The post அசைவ உணவு ஆரோக்கியமாக… appeared first on Dinakaran.

Tags : kumkumum ,
× RELATED ங போல் வளை-யோகம் அறிவோம்!