×

அசுத்த ஏப்பத்தை அலட்சியப்படுத்தலாமா?!

நன்றி குங்குமம் டாக்டர்ஆயுர்வேத அதிசயம்உடல் சுத்தம், குடல் சுத்தம், மன சுத்தம் கேள்விப்பட்டிருக்கிறோம். சுத்த ரத்தம், அசுத்த ரத்தம் கூட கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன அசுத்த ஏப்பம்?அசுத்த ஏப்பம் என்றால் தூய்மையற்ற ஏப்பம் என்று பொருள். ஏப்பத்தில்கூட தூய்மையான ஏப்பம் தூய்மையற்ற ஏப்பம் இருக்கிறதா ஆம். ஏப்பம்தான் மேற்கூறிய உடல் சுத்தம் முதலியவற்றைவிட மிக எளிதாக நாம் அனைவராலும் தெரிந்துகொள்ள முடியும். சுத்த, அசுத்த ஏப்பத்தின் அறிகுறிகள் என்ன? அவற்றால் ஏற்படும் விளைவுகள், அசுத்த ஏப்பத்திற்கு என்ன செய்யலாம் என்பதைப் பற்றி இக்கட்டுரை விளக்குகிறது. பொதுவாக ஜீரணத்தால் ஏற்படும் வாயு மேல்நோக்கி வெளிவந்தால் ‘உத்காரம்’ என்ற ஏப்பம் என்றும், கீழ்நோக்கி ஆசனவாய் வழியாக வெளிவந்தால் ‘அபான வாயு’ என்ற கீழ்நோக்கத்தி காற்று என்றும் அழைக்கப்படுகிறது. இவை இரண்டு வாயு என்று காற்று வெளியேறாமல் இருந்தாலும் அதிகளவில் வெளியேறினாலும் ஆரோக்கிய கேடுதான்.உடல் செயல் இயக்கங்களுக்கு காரணமான வாதம் என்ற வாயு ஆயுர்வேத மருத்துவத்துறையில் 5 வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை பிராணன், உதாணன், வியாணன், சமாணன், அபாணன். இவைகளில் ஏப்பத்திற்கு காரணமானவை 3-ம் ஜீவனத்திற்கும், சுவாசத்திற்கும் காரணமான பிராண வாயுதான் ஏப்பத்திற்கும் காரணம். ஜீரணத்தால் ஏற்படும் வாயு மேல்நோக்கி வரும் ஏப்பம் ஒன்று அல்லது இரண்டு வந்தால் அது இயல்பானது.சுத்த ஏப்பத்தின் அறிகுறி* ஏப்பமானது எந்த ஒரு மனமும் இன்றி சுவை இன்றி வெளி வர வேண்டும்.* அதிக ஏப்பத்துடன் வெளிவரக் கூடாது.* வெளிவரும்போது நெஞ்சுக்கரிப்பு ஏற்படக் கூடாது.* வயிற்று இரைச்சல், வயிற்று வலி போன்றவற்றுடன் ஏப்பம் வரக்கூடாது.அசுத்த ஏப்பத்தின் அறிகுறிஅசுத்த ஏப்பம் என்றாலே அஜீரணம் இல்லாமல் ஏற்படாது. அஜீரணம் அசுத்த ஏப்பத்தின் அடித்தளம். எல்லா நோய்களுக்கும் மூலகாரணம் அஜீரணம்தான் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. உண்ட உணவு நன்றாக ஜீரணமடைந்தாலே போதும். மனிதனுக்கு மருந்து என்ற ஒன்று தேவைப்படாது என்பது வள்ளுவரின் வாக்கு. அனைத்து நோய்களுக்கும் மூல காரணமான அஜீரணம் மூன்று வகையாக ஆயுர்வேதம் பிரித்துக் கூறுகிறது.அவை வாதத்தால் ஏற்படும் விஷ்டப்பத்த அஜீரணம், பித்தத்தால் ஏற்படும் விதக்தா ஜீரணம், கபத்தால் ஏற்படும் ஆமாஜீரணம். வாதத்தால் ஏற்படும் விஷ்டப்பத்தா அஜீரணம் என்ற வகை அஜீரணத்தால் வயிற்றில் வலி, மலச்சிக்கல், வயிற்றுப் பொறுமல் போன்றவைகள் ஏற்படும். பித்தத்தால் ஏற்படும் விதக்தா அஜீரணம் என்ற வகை அஜீரணத்தால் மயக்கம், தலைச்சுற்றல், புளித்த ஏப்பம், எரிச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். மேற்கண்ட அறிகுறிகளில் புளித்த ஏப்பம் என்பது அசுத்தமான ஏப்பம்.இது பித்தம் என்ற வெப்ப மிகுதியால் ஏற்படக்கூடிய அஜீரணம். இதனைப் போக்க பித்தத்தை குறைக்கக்கூடிய அதேசமயம் ஜீரண சக்தியை அதிகரிக்கக்கூடிய மூலிகை மருந்தாக பார்த்து தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். இதற்கு நெல்லிக்காய் மிகச்சிறந்ததாக இருக்கும் அல்லது ஆயுர்வேத மருத்துவத்துறையில் கிடைக்கும் ‘ஜம்பீராதி பானகம்’ அல்லது வில்வாதி லேகியம் குடார்த்ரகம் போன்ற மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் சுத்தமான ஏப்பத்தை பெற முடியும். நீண்ட நாட்களாக உள்ள இவ்வகை அஜீரணத்திற்கு வாந்தி செய்விக்கும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். கபத்தால் ஏற்படும் ஆமா ஜீரணம் என்ற வகை அஜீரணத்தால் கண், கன்னம் ஆகிய இடங்களில் வீக்கம், சாப்பிட்டவுடன் ஏற்படும் ஏப்பம் அந்த ஏப்பத்தில் அப்பொழுதே சாப்பிட்ட உணவின் சுவை மணம் தெரிதல், வாயில் அதிக அளவு நீர் சுரத்தல், குமட்டல் போன்ற அறிகுறிகள் தோன்றும். மேற்கண்ட அறிகுறிகளில் சாப்பிட்ட உடன் ஏற்படும் ஏப்பத்தில் உணவின் சுவை மணம் தெரிதல் அசுத்த ஏப்பம் ஆகும்.இதற்கு உண்ணா நோன்பை மேற்கொள்ள வேண்டும் என்கிறது ஆயுர்வேதம். அதாவது ஒரு வேளை உணவு சாப்பிட்டவுடன் அஜீரணம் ஏற்பட மேற்கொண்ட அறிகுறிகள் தோன்றினால் அடுத்த வேளை உணவை தவிர்த்து உபவாசத்தை மேற்கொள்ள வேண்டும் என்கிறது. மருந்தை பொருத்தவரை இஞ்சி, இந்துப்பு, பூண்டு, பெருங்காயம், சுக்கு, மிளகு, திப்பிலி போன்றவைகளை உபயோகப்படுத்தலாம்.அசுத்த ஏப்பத்தை அலட்சியப்படுத்தலாமா?அஜீரணத்தின் அடித்தளமான அசுத்த ஏப்பத்தை எக்காரணத்தைக் கொண்டும் அலட்சியப்படுத்தக் கூடாது. அது ஒருமுறை ஏற்பட்டால் கட்டாயம் கவனித்து மீண்டும்; ஏற்படா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். இதனைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தினால் வயிறு தொடர்பான பல்வேறு உபாதைகளுக்கு வழிகோலும்.அசுத்த ஏப்பத்தை தவிர்க்க என்ன செய்யலாம்?* அஜீரணம் இருக்கும்போது உணவு உண்ணக்கூடாது.* உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.* அவசர கதியில் உணவு உண்ணக்கூடாது. இதன்மூலம் வாயுவை அதிகளவு விழுங்குவதை தவிர்க்கலாம்.* சூடான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.* எக்காரணத்தைக் கொண்டும் ஏப்பத்தை தடுத்து நிறுத்தக்கூடாது. அவ்வாறு செய்தால் இருதயம், மார்பில் பிடிப்பு, வயிற்றுப்பொறுமல், இருமல், விக்கல் ஆகியவை உண்டாகும்.* மலச்சிக்கல் இருக்கும்போது எளிதில் ஜீரணமாகாத உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.* உணவு உண்டவுடன் உறங்குவதை தவிர்க்க வேண்டும்.ஏப்பத்தைப் போக்க என்ன செய்யலாம்?உடலிலிருந்து வெளியாகும் அது மேல்நோக்கிய அல்லது கீழ்நோக்கிய வாயுவை சுத்தப்படுத்துவதற்கு என ஆயுர்வேத மருந்து துறையில் பல்வேறு மூலிகைகள் இருந்தாலும் மிக பிரத்யேகமாக இரண்டு மூலிகைகள் கூறியுள்ளனர். அவை சீரகம் மற்றும் ஓமம் இவற்றை எந்த முறையிலும் எடுத்துக்கொண்டால் அசுத்த ஏப்பத்தை போக்கி சுத்த ஏப்பத்தை பெறலாம்.சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து தண்ணீர் தாகம் எடுக்கும்போதெல்லாம் பருகி வரலாம். ஓமப் பொடியை ஒரு தேக்கரண்டி அளவு உணவுக்குமுன் எடுத்துக் கொள்ளலாம் அல்லது ஓமம், சீரகம் கலந்து தயாரிக்கும் ஆயுர்வேத மருந்துகளான அஷ்ட சூரணம், வைஸ்வாரை சூரணம், சீரகாரிஷ்டம், தருயாபயர கசாயம் போன்ற மருந்துகளை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனை பெற்று பயன்படுத்தலாம். அசுத்த ஏப்பத்தை போக்க ஆயுர்வேத மருத்துவரைப் பின்பற்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.– விஜயகுமார்

The post அசுத்த ஏப்பத்தை அலட்சியப்படுத்தலாமா?! appeared first on Dinakaran.

Tags : Ayurvedic ,Dinakaran ,
× RELATED சின்னம்மையும் ஆயுர்வேத தீர்வும்!